“தேமுதிகவைத் தொட்டவர்கள் வரலாறு இதுதான்” என்று துரைமுருகன் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனை குறித்து பிரேமலதா விமர்சனம் செய்துள்ளார்.
திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் நிலையில், துரைமுருகனை குறிவைத்து கடந்த சில நாட்களாக வருமான வரித் துறை சோதனை நடத்தப்பட்டது. துரைமுருகன் நண்பரான பூஞ்சோலை சீனிவாசனுக்கு சொந்தமான சிமெண்ட் குடோனில் நேற்று நடத்தப்பட்ட சோதனையில் 11. 48 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. மேலும் துரைமுருகன் இல்லத்திலும் சோதனை நடத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் திருவண்ணாமலையில் இன்று (ஏப்ரல் 2) சாமி தரிசனம் செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், “தேமுதிகவை அசிங்கப்படுத்த துரைமுருகன் நடத்திய நாடகம் தற்போது அவருக்கே வினையாக முடிந்துள்ளது. தேமுதிகவையும் விஜயகாந்தையும் தொட்டவர்கள் வரலாறு இதுதான் என்பதற்கு சான்றாகவே இதனை பார்க்கிறேன்” என்று தெரிவித்தார்.
வருமான வரித் துறை சோதனைகளில் கண்டுபிடிக்கப்படுவதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திய பிரேமலதா, “வேலூர் தொகுதியில் தேர்தலே ரத்து செய்யப்படலாம் என்கிறார்கள். ஒருவர் செய்த தவறுக்காக அனைவரும் தண்டனை பெறக்கூடாது. தவறு செய்த துரைமுருகன் மகனை மட்டும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.
அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டே திமுகவுடன் கூட்டணி பேச வந்ததாக தேமுதிக மீது துரைமுருகன் குற்றம்சாட்டியிருந்தார். ஆனால் தாங்கள் அவ்வாறு பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று பிரேமலதாவும் சுதீஷும் விளக்கம் அளித்திருந்தனர். இந்த நிலையில் துரைமுருகன் வீட்டில் நடைபெற்ற சோதனை குறித்து பிரேமலதா இவ்வாறு கருத்து கூறியிருக்கிறார்.�,