ராஜு முருகன் இயக்கிய ‘ ஜோக்கர்’ படம் சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதை வென்றுள்ளது. இந்தப் படத்தில் பாடல்களும் ஷான் ரோல்டன் இசையில் பெரிய அளவில் பேசப்பட்டன. இந்தப் படத்தின் பாடல்களைக் கேட்டுத்தான் தனுஷ் தனது படங்களுக்கு இசையமைக்க ஷான் ரோல்டனுக்கு வாய்ப்பளித்தார். யூ ஜாஸ்மின் என்னும் பாடலைப் பாடியுள்ள பாடகர் கா.சி.சுந்தரையருக்கு முதல் திரைப்பாடலாகும். திரையில் பாடிய முதல் பாடலுக்கே தேசிய விருது பெற்றிருக்கிறார். அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து எழுத்தாளர் ஜீ.முருகன் எழுதியிருக்கும் முகநூல் பதிவு.
‘தருமபுரியில் வாடகைக்கு வீடு பார்த்துக் கொண்டிருந்தபோது ஓவியர் ஸ்ரீதரால் அறிமுகமானவர்தான் நண்பர் சுந்தர். கபடமற்ற ஒரு அன்பு அவரிடம் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும்.
இவருடைய முழு பெயர் சுந்தர் அய்யர். ஜோக்கர் படத்தில் ஜாஸ்மின் பாடலைப் பாடியவர் இவர்தான். பாண்டிச்சேரியில் இசை பயின்றுள்ள இவர் ஒரு நடிகரும்கூட. முருகபூபதியின் நாடகங்களில் தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார். மேலும் பகுதிநேர இசை ஆசிரியராக ஒரு அரசுப் பள்ளியில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். முற்போக்கு முகாம்களில் பங்கேற்றபோது காதலித்து திருமணம் செய்துகொண்டார். இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
அவர் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர் இல்லை என்பது அவரை சந்தித்த சில நிமிடங்களிலேயே தெரிந்துவிடும். பிறகு, எதற்கு இப்படி ஒரு பெயர் என்று அவரிடம் கேட்டேன். அவருடைய பெற்றோர் வைத்த பெயர் சுந்தர். அவருடைய பாட்டி அவரை அய்யர் என்றே அழைப்பாராம். இரண்டையும் சேர்த்து பள்ளியில் அவருக்கு சுந்தரையர் என பெயர் பதிந்துவிட்டார்கள்.
ஒரு பாடகராக வேண்டும் என்ற அவருடைய கனவு ‘ஜோக்கர்’ படத்தின் ஜாஸ்மின் பாடல் மூலம் நிறைவேறியது. இப்போது அந்தப் பாடலை பாடியதற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இனியாவது சினிமா இசை உலகம் அவரை திரும்பிப் பார்க்க வேண்டும் என்பது என் ஆசை. அது நிறைவேறினால் இன்னும் மகிழ்ச்சியடைவேன்’ என்று எழுதியிருக்கிறார்.
[ஜாஸ்மின் பாடல்](https://www.youtube.com/watch?v=SmMQEAV-IJ8)�,