~தெளிவாகப் பேசிய பெண் நட்சத்திரம் சன்னி லியோன்.

public

‘சன்னி லியோன்!’ இந்திய இணையத்தில் அதிகம் தேடப்பட்ட பெண். காரணம், அவர் முன்னாள் நீலப்பட நடிகை. இணையத்தில், தான் அதிகம் தேடப்படும் நபராக இருப்பது குறித்து, மத்திய ஆசிய ஆண்களின் மனநிலை புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது, மிகமுக்கியமாக, இந்தப் பகுதியில் நிலவும் குடும்ப அமைப்பும், பாலியல் தேர்வும், இவர்களின் மத்தியில் வெற்றிகரமாக வாழ்ந்துகாட்டுவதே நான், இந்திய வம்சாவளிப் பெண்களுக்குச் செய்யும் பேருதவி” என்றுகூறும் சன்னி லியோன், தமது கடந்தகாலத்தை அவமானமாகக் கருதாதவர். என் கடந்தகாலம் எப்படி இருந்தது என்பதை நான் ஏன் மறைக்கவேண்டும்? என்பவர்.

(சேகர்குப்தா – சன்னி உரையாடலின் தொடர்ச்சி)

பிரபலமான என்.டி.டி.வி, ’வாக் தி டாக்’ நிகழ்ச்சிக்காக புகழ்பெற்ற ஊடகவியலாளர் சேகர் குப்தா, சன்னி லியோனோடு நடத்திய நீண்ட உரையாடலின் முதல் பகுதி நேற்று வெளியானது. அதன் தொடர்ச்சி இங்கே…

சேகர்: இந்தியப் பெயர்போல தேர்ந்தெடுத்திருப்பீர்கள். அப்படித்தானே?

சன்னி: ‘சன்னி’ என்பது இந்தியப் பெயர் மாதிரிதானே இருக்கிறது!

சேகர்: ஆமாம் எனில், பெயர் ஒரு சிக்கலாக இருந்தது இல்லை?

சன்னி: இல்லை. என் சகோதரனின் செல்லப்பெயரை நிச்சயமாகத் தேர்வு செய்திருக்க மாட்டேன் என்று சொல்லவந்தேன். அதாவது, என் அண்ணனை ஏதாவது நிகழ்ச்சிக்குக் கூட்டிச்செல்லும்போதெல்லாம் ‘இது சந்தீப்’, நான் ‘சன்னி’ என அறிமுகப்படுத்த வேண்டியிருக்கும்போது சங்கடமாக உணர்வேன். எனக்கே கொஞ்சம் விநோதமாக இருக்கும் இல்லையா!

சேகர்: லியோன் எங்கிருந்து வந்தது?

சன்னி: அது, அந்த பத்திரிகையால் தேர்வு செய்யப்பட்டது என்று சொன்னேனே. வித்தியாசமாக, மோசமான பெயராக இல்லாதவிதத்தில் நான் அதிர்ஷ்டசாலி.

சேகர்: உங்கள் பாஸ்போர்ட்டில் என்ன பெயர் இருக்கிறது?

சன்னி: தனன்ஜீத். அது, என் கணவரின் பெயர். நான் எங்குபோனாலுமே என்னையும், பாஸ்போர்ட்டையும் மாறி மாறிப் பார்ப்பார்கள். எல்லோருக்குமே குழப்பமாகத்தானிருக்கும். வேடிக்கைதான்!

சேகர்: உங்கள் கடந்தகால வாழ்க்கையில் நடித்த நீலப் படங்கள் குறித்து. அதில் இடம்பெற்றுள்ள காட்சிகள் நேச்சுரலா? அல்லது வெறும் நுட்பங்களா (Fakes)?

சன்னி: ரசிகர்களின் சுவாரஸ்யத்தைக் கலைப்பதற்காக மன்னிக்கவும்! அவை, பெரும்பாலும் நுட்பங்கள்தான். (இங்கு, சன்னி குறிப்பிடும் ‘நுட்பம்’ எனப்படுவது பாலுறவில் ஃபேக் (Fake) எனச் சொல்லப்படுகிற, பொய்யாக உணர்வுகளை (பெரும்பாலும் பெண்களால்) வெளிப்படுத்துகிற கட்டம்) ஆனால், பெரும்பாலும் கற்பனைக் காட்சிகளும், சில தந்திரங்களும் கலந்த ஒரு கற்பனை உலகம் அது. தனிப்பட்ட நபரின் கற்பனைதான் முக்கியம்.

சேகர்: வேறெதையும்போல இதுவும் ஒரு வேலை, அவ்வளவுதான் இல்லையா?

சன்னி: ஆமாம். அதுவும் ஒரு வேலைதான். ஒரு இளைஞனோ, இளம் பெண்ணோ, குடும்பத்தினருக்கான உணவை சம்பாதிக்கும் முறை. அவர்களும் நேரத்துக்கு பணிக்குச் செல்லவேண்டும். வேலை செய்துமுடித்ததும் வீட்டுக்குக் கிளம்பவேண்டி இருக்கும்.

சேகர்: யதார்த்தத்தில் செக்ஸ் இருப்பதுபோல இல்லாததால்தான் அது, கற்பனை உலகம் எனப்படுகிறது அல்லவா?

சன்னி: ஆமாம். சில நேரங்களில் மக்கள் குழம்பித்தான் போவார்கள். ஏன் செக்ஸ், திரையில் காண்பதுபோல் இல்லை என்று. ஆனால், அது கற்பனை உலகம்.

சேகர்: கேமரா முன்பு நடிக்கும் உங்களைப் பற்றி மட்டுமல்ல; உங்கள் வாழ்க்கைப் பற்றியும் விமர்சிக்கிறார்களா?

சன்னி: ஆமாம். இது, பயங்கரமாக விமர்சனம் செய்யும் சமூகம். ஆனால், எங்கு இருந்தாலும்தான் என்ன, அது விமர்சனம் செய்யும் சமூகமாகத்தானே இருக்கும்! நான் செய்ததை வைத்து என்னை விமர்சித்திருக்கிறார்கள். என் சுபாவம் பற்றியும், என்னைப் பற்றிய அவர்களுடைய புரிதலிலும் தீர்க்கமாக இருக்கிறார்கள். நானும் ஒரு பெண்தான், அவர்கள் எல்லோரும் ஒவ்வொரு நொடியிலும் பார்க்கும், கேள்விப்பட்டிருக்கும் அதே பெண்தான் நான். நான்தான் அவள் என்பதை மன அளவில்கூட கடந்துசெல்ல அவர்களால் முடியவில்லை. அவள், அதாவது நான், எப்படி சாதாரணமான பெண்ணாக இருக்கமுடியும்! என நினைக்கிறார்கள்.

சேகர்: பின், அவர்கள் சில காரியங்களைத் தாங்களாகவே யூகித்து, தம் மனத்திரையில் ஓட்டிப் பார்த்துக்கொள்வார்கள். இல்லையா?

சன்னி: என்னை சந்தித்துப் பேசி, நேரடியான தகவல்களைத் தெரிந்து கொள்ளாமல் இருப்பதை வைத்துக்கொண்டு முடிவெடுப்பார்கள்.

சேகர்: நீங்கள் இந்தியாவுக்கு வந்தபிறகு, உங்களிடம் சொல்லப்பட்ட சுவாரசியமான விஷயம் என எதைச் சொல்வீர்கள்?

சன்னி: சொன்ன விஷயம் என்று எதுவுமில்லை. நடவடிக்கைகள்தான் அதிகமாய் இருந்திருக்கிறது. முதன்முறையாக, பிக் பாஸ் ஷூட்டில் இருந்து வெளியேறியபிறகு ஒரு நாள், என் கணவரோடு சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அப்போது, இரண்டு இளம் பெண்களுடன் ஒரு நபர் வந்தார். ‘உங்களோடு என் மகள் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாமா?’ என்றார். அந்த பெண்ணைப் பார்த்தால், 14-15 வயதுபோலத் தெரிந்தது. ‘உங்களுக்கு அறிவில்லையா? எதற்காக உங்கள் அண்டர் ஏஜ் (வயதுவராத) பெண் என்னோடு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும்?’ எனக் கேட்கவேண்டும்போல இருந்தது. அந்தத் தருணத்தில், அங்கு என்ன நடக்கிறதெனப் புரியவில்லை.

அமெரிக்காவில் நான் வயதுவந்தோரின் (அடல்ட்) உலகில் ஒரு பகுதியாகத் தான் இருந்திருக்கிறேன். எதற்காக, அவர்கள் இத்தனை உற்சாகம் அடைந்தார்கள் என எனக்குப் புரியவேயில்லை. ஆனாலும், அந்த இரண்டு பெண்களோடும் நான் ஃபோட்டோ எடுத்துக் கொண்டேன். பிறகு, அத்தை வந்தார், மாமா வந்தார், தாத்தா பாட்டி வந்தார்கள், ஒரு சிறு குழந்தை வந்தது; இறுதியில் 15 பேர் கொண்ட ஒரு பெரிய குடும்பப் புகைப்படம் ஒன்றை எடுத்துக்கொண்டோம்.

சேகர்: சன்னியோடு செல்ஃபீ?

சன்னி: ஆமாம். நான் எதனால் இது நடக்கிறது? என ஆராயத் தொடங்கினேன். கடந்த ஏழு வாரங்களாக, இரவு உணவு முடித்துவிட்டு, டிவி முன் சுற்றி அமர்ந்து, நான் பரோட்டா செய்வதை, சாலட் செய்வதை, நான் ஒரு சாதாரண பெண்ணாக இருப்பதைப் பார்த்திருக்கிறார்கள். சன்னி லியோன் என்ற நீலப்பட நடிகைதான் நிகழ்ச்சிக்கு வரப்போகிறார் என்றவுடன், நான் எப்படி இருப்பேன் என அவர்கள் நினைத்தார்களோ, அப்படி நான் இருந்திருக்கவில்லை.

சேகர்: ஆனாலும், சிலரின் மனதில் உங்களைப் பார்க்கும்போது ஒரு குறிப்பிட்ட பிம்பம்தானே வரும்?

சன்னி: ஆமாம். அது எனக்கான தனிச்சிறப்பு என்றுதான் நினைக்கிறேன்.

சேகர்: பாலிவுட்டில் தயாரிப்பாளர்கள், இயக்குநர்களிடம் அதிகம் திட்டு வாங்கியதுண்டா?

சன்னி: முகத்திற்கு நேராகச் சொல்ல யாருக்கும் தைரியமில்லை. அவர்களுடைய நடவடிக்கைகள் காட்டிக்கொடுத்துவிடும். சிலசமயம், எனக்கு திரைக்கதை புரியாது. ஒரு முழுக் காட்சிக்கு அர்த்தம் புரியாது. எல்லோரும் என்னை பிகினி போடச் சொல்வார்கள்.எனக்குக் காரணம் தெரியாது. ஆனால், அவர்கள் உடுத்தச் செய்வார்கள். அப்போது என்னை பிகினியில் பார்க்க மக்கள் விரும்புகிறார்கள் என நினைத்துக் கொள்வேன். அதனால், நிறையப் பேர் பார்ப்பார்கள் என்றும், நிறைய டிக்கெட்டுகள் விற்கும் என்றும் நினைத்துக் கொள்வேன். இதைப்போன்ற விஷயங்கள்தான் எனக்குக் கோபம் வரவழைப்பவை.

சேகர்: யாராவது சொன்ன விஷயம் ஏதாவது அல்லது அவர்கள் பேசியவிதம் காயப்படுத்தியதுண்டா?

சன்னி: உங்கள் நிலைப்பாடு என்ன, அவர்களுக்காக எப்படிப் பேசுகிறீர்கள் என வழக்கமாக, மக்கள் சோதித்துப் பார்ப்பார்கள். ஆனால், என்னால் சமாளிக்க முடியாத, எளிதாகக் கடக்கமுடியாத எந்தச் சூழலும் ஏற்பட்டதில்லை.

சேகர்: பாலிவுட்டில் இருக்கும் பெண்கள் எப்படி உங்களை நடத்துகிறார்கள்?

சன்னி: கடந்த ஆறு மாதங்களாகப் பெண்கள், சமூக வலைதளங்களில் எல்லாம், ’ஹாய்’ சொல்ல ஆர்வமாக இருப்பதைக் கவனிக்கிறேன். முதலில் நிச்சயம் வித்தியாசமாகத்தான் உணர்ந்தேன். ஒரு அறையில் இருக்கும்போது உங்களையே உற்றுப் பார்ப்பார்கள். ஆனால், ’ஹாய்’ சொல்ல மாட்டார்கள். முதன்முறையாக, ஒரு விருது விழாவுக்குச் சென்றபோது, என்னை இன்னொரு நடிகையுடன் மேடையேற்ற முயன்றார்கள். ஆனால், அதற்கு எல்லோருமே மறுப்புத் தெரிவித்திருந்தனர். ஒரு நல்லமனம் கொண்டவர் ஏற்றுக் கொண்டார்-பரந்த மனப்பான்மை இருக்கிறதுதான் எனத் தோன்றியது.

சேகர்: ஆனாலும், மக்கள் உங்களுக்கு எதிராக இருக்கிறார்கள்; உங்களையும், நீங்கள் செய்வதையும் நினைத்து அஞ்சுகிறார்கள். உங்களோடு இணைய விரும்பவில்லை என உணர்வது வித்தியாசமாக இருக்கும். இதுதான் விமர்சனம். பாலிவுட் பெண்களால் அதிகம் விமர்சிக்கப்பட்டீர்களா?

சன்னி: தொடக்கத்தில்.

சேகர்: இப்போது அது மாறிக்கொண்டிருக்கிறதா?

சன்னி: ஆம், நிச்சயமாக. ஒரு பார்ட்டியில் அல்லாமல், வேறுமுறையில் ரெகுலராக மக்கள் உங்களை பார்க்கத் தொடங்கும்போதும், நீங்கள் தொடர்ந்து வேலை செய்துகொண்டிருப்பதையும், நீங்கள் செய்யும் காரியம் எல்லாம் வெற்றியில் முடிவதைப் பார்க்கும்போதும், அவர்கள் தங்கள் குரலின் தன்மையை மாற்றிக் கொள்வார்கள்.

எனக்கு உங்களோடு பேச ஐந்து நிமிடம் போதும். அந்த ஐந்து நிமிடங்களில் என்னைப் பற்றிய உங்களின் கருத்தை என்னால் மாற்றிக்காட்ட முடியும், என்று நான் எப்போதுமே சொல்வேன். அந்த ஐந்து நிமிடம் சாதாரண உரையாடல் போதும் எனக்கு!.

சேகர்: பாலிவுட்டில் இருக்கும் பிரபலமான பெண்கள் உங்களிடம் நன்றாக நடந்துகொள்கிறார்களா?

சன்னி: சில மாதங்களுக்குமுன் சோனம் கபூர், சமூக வலைதளத்தில் எனக்கு மறுமொழி எழுதினார். எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. சமூக வலைதளத்தில் சோனாக்ஷி சின்ஹாவும் எழுதினார். சமூக வலைதளத் தளங்கள் எங்களுக்கான பொதுவான மேடை என நினைக்கிறேன்.

சேகர்: உங்கள் கடந்தகாலத்தை எப்படிச் சமாளிக்கிறீர்கள்? என, அவர்கள் யாரும் கேட்டதில்லையா…

சன்னி: அந்த உரையாடல் நடைபெற வாய்ப்புக் கிடைக்கவில்லை.அவர்களைச் சந்திப்பதே விருது விழாக்களிலும், பார்ட்டிகளிலும்தான்.

சேகர்: அதனால்தான் பலருக்கு, நீங்கள் அரசியல் நபர் என்பது தெரியவில்லை. உங்கள் கடந்தகாலத்தில், பிரபலங்களுக்கான வழக்கத்துக்கு மாறாக ஜனாதிபதி புஷ்-க்கு எதிராகப் பிரச்சாரம் செய்தீர்கள் அல்லவா?

சன்னி: ஆம். அது இப்போது, என்னை நோக்கி வருமென நான் நினைத்ததேயில்லை.

சேகர்: இணைய வாழ்க்கையில் எல்லாம் திரும்பிவரும். எதற்காக பிரச்சாரம், எப்படி பிரச்சாரம் செய்தீர்கள் எனச் சொல்லுங்கள்?

சன்னி: அடல்ட் துறையை பாதிக்கும்படி அவரின் கருத்துகள் இருந்ததனால் நடந்த பிரச்சாரம் அது.

சேகர்: ஏனெனில், அமெரிக்கச் சட்டங்கள் பழமைவாதம் நிறைந்தவை.

சன்னி: ஆமாம், எங்கள் துறைக்கு சட்டங்களும் விதிமுறைகளும் இருக்கும் போது, சிலர் மாற்ற நினைத்தால் நிச்சயமாக அங்கு கலகம் நடக்கத்தானே செய்யும். அதுதான் நடந்தது. அந்த மாற்றங்கள் நடக்கவிடாமல் செய்யவே பிரச்சாரங்கள் செய்தோம்.

சேகர்: எனவே, அடல்ட் நடிகைகள் மட்டுமே போராடமுடியும் வழியில் நீங்கள் போராடினீர்கள்.

சன்னி: இருபது வயதிருக்கும்போது, அதிகம் யோசிக்காமல் செய்த காரியம் அது. உடனடியாக, ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்ற சூழ்நிலையில் செய்தோம்.

சேகர்: எனவே, உங்கள் அந்தரங்க முடியை மழித்தெடுத்து, ‘நோ புஷ்’ என அதைப் புகைப்படம் எடுத்தீர்கள்.

சன்னி: ‘நோ புஷ்’. ஆமாம். ஆனால், அது வேலை செய்யவில்லை.(சிரிக்கிறார்)

சேகர்: பீட்டாவிற்காக வேலை செய்தீர்கள் அல்லவா?

சன்னி: ஆமாம். இங்கே இந்தியாவில்தான். என்னால் செய்யமுடியும் என, நான் கற்பனை செய்திராத பல காரியங்களை இங்கே செய்ய முடிந்ததுதான் ஆச்சரியம். இங்கே வரவேண்டும் என்ற முடிவை நான் எடுத்திருக்காவிட்டால், பீட்டாவில் சேவை செய்ய அழைப்பு வந்திருக்காதென நினைக்கிறேன்.

சேகர்: தெரு விலங்குகளின் எண்ணிக்கையைக் குறைத்தீர்கள்?

சன்னி: ஆம். கூடுதல் ‘செக்ஸ்’ மோசமானது. (சிரிக்கிறார்)

சேகர்: கூடுதலான பாதுகாப்பற்ற ‘செக்ஸ்’தான் மோசமானது.

சன்னி: சரிதான். அமெரிக்காவில் நான் வளர்க்கும் செல்லப் பிராணிகள் இரண்டும் பாதுகாப்பு மையத்திலிருந்து எடுத்துவரப்பட்டவைதான். அமெரிக்காவில் பாதுகாப்பு மையத்துக்கு கொண்டு வரப்படும் நாய்கள் உடனே ஸ்டெரிலைஸ் செய்யப்படும்.

சேகர்: தமிழ்நாட்டில் தற்போதிருக்கும் சர்ச்சையைப் பற்றி ஏதாவது புரிதல் இருக்கிறதா?

சன்னி: முழுமையாகப் படிக்கவில்லை என்றாலும், கொஞ்சமாக படித்துத் தெரிந்துகொண்டேன். விலங்குகளை ஈடுபடுத்தும் விளையாட்டோ, பண்டிகையோ தவறு என்றுதான் நினைக்கிறேன். அந்த விலங்குக்கு, ‘இல்லை, எனக்கு இதைச் செய்யவேண்டாம்’ எனச் சொல்ல, குரல் இல்லை. அவற்றுக்கு வேறு தேர்வே இல்லை. வற்புறுத்தப்பட்டு, காயப்படுத்தப்பட்டு, தனித்து விடப்பட்டு, ஒழுங்காக உணவளிக்காமல் மோசமாக நடத்தப்படுகின்றன.

ஒரு பயிற்சியாளர் சிங்கத்தை அடிக்கும் வீடியோ ஒன்றைப் பார்த்தேன். அது அருவருக்கக்கூடிய நடத்தை. மனிதர்களுக்கு தங்களுக்கென மனம் இருக்கிறது, சிந்தனை இருக்கிறது, அவர்களால் பேசமுடியும். ஆனால், குரல் இல்லாத ஒன்றை எப்படி காயப்படுத்த முடிகிறது?

சேகர்: இந்த நிகழ்ச்சியில் நான் இதுவரை சந்தித்ததிலேயே தெளிவாகப் பேசிய பெண் நட்சத்திரம் நீங்கள்தான் எனச் சொல்வேன்! இந்த நிகழ்ச்சி காரணமாய் இணையத்தில் நான் கேலி செய்யப்படலாம். இருந்தாலும் உங்களோடு பேசியது மகிழ்ச்சி.

சன்னி: இணையத்தில் நீங்கள் கேலி செய்யப்படக்கூடாதென வேண்டுகிறேன்.

சேகர்: அது நம்மால் தடுக்க முடியாதது.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *