இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்து வந்தது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 502 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. அதன்பின் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி தன் முதல் இன்னிங்சில் 431 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி 71 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்தியா, 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 323 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது.
இதனையடுத்து தென் ஆப்ரிக்கா வெற்றிபெற 395 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே தொடக்க ஆட்டக்காரரான எல்கார் 3 ரன்களில் வெளியேறினார். நேற்றைய ஆட்டநேர முடிவில் 9 ஓவர்களில் தென் ஆப்ரிக்கா 1 விக்கெட்டை இழந்து 11 ரன்களுடன் களத்தில் இருந்தது.
போட்டியின் ஐந்தாவது நாள் ஆட்டம் இன்று (அக்டோபர் 6) தொடங்கியது. 11 வது ஓவரை அஸ்வின் வீசினார். அந்த ஓவரின் 5ஆவது பந்தை டி புருயின் அடித்து ஆட முற்பட்டபோது, பந்து ஸ்டம்பில் பட்டு விக்கெட்டை பறிகொடுத்தார். டி புருயின் விக்கெட்டை கைப்பற்றிய அஸ்வின், டெஸ்ட் வரலாற்றில் 350 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்தார். அவர் இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் சாதனையை சமன் செய்தார்.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய பவுமாவின் விக்கெட்டை ஷமி கைப்பற்றினார். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் டூபிளேசிஸ், விக்கெட் கீப்பர் டி காக் ஆகியோரின் விக்கெட்டுகளையும் ஷமி கைப்பற்றினார். இந்திய அணியின் அபார பந்துவீட்டால் தென் ஆப்ரிக்க அணி 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.இந்திய அணியில் முகமது சமி 5 விக்கெட்டுகளும், ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளும், அஸ்வின் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது�,