தமிழகத்தின் 34, 35 ஆவது மாவட்டங்களாக நெல்லையிலிருந்து தென்காசி மாவட்டமும், காஞ்சியிலிருந்து செங்கல்பட்டு மாவட்டமும் பிரிக்கப்பட்டிருக்கின்றன.
சட்டமன்றத்தில் ஜூலை 18 ம் தேதி, 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “தற்போது பெரிய மாவட்டங்களாக உள்ள திருநெல்வேலி மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களைப் பிரிக்க வேண்டும் என்று அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்தன. இதனை பரிசீலித்து நிர்வாக வசதிக்காக திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய மாவட்டம் உருவாக்கப்படும். காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பிரித்து செங்கல்பட்டை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய மாவட்டம் தோற்றுவிக்கப்படும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்விரு மாவட்டங்களுக்கும் தலா ஒரு இந்திய ஆட்சிப் பணி அதிகாரி தனி அதிகாரியாக நியமிக்கப்படுவர்” என்று கூறினார்.
ஜூலை 6 ஆம் தேதி தென்காசி நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் எடப்பாடி, “நெல்லை மாவட்டத்தில் இருந்து தனி மாவட்டமாக தென்காசியை உருவாக்க பரிசீலிக்கப்படும்” என உறுதியளித்திருந்தார். அதன்படியே புதிய மாவட்டத்தை இன்று அறிவித்திருக்கிறார்.
இந்த அறிவிப்பு மக்களின் நீண்ட கால கோரிக்கையை பூர்த்தி செய்திருப்பதால் தென் காசி வட்டாரத்தில் மகிழ்ச்சியோடு இருக்கின்றனர்.
தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம், தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், சிவகிரி ஆகிய பகுதிகள் தென் காசி மாவட்டத்துக்குள் வருகின்றன.
இதுபற்றி நெல்லை மேற்கு மாவட்ட திமுக செயலாளரான சிவ பத்மநாதனிடம் பேசினோம்.
”தாமதமாக அறிவிக்கப்பட்டாலும் வரவேற்கத் தக்க அறிவிப்புதான். ஆயினும் எங்கள் தலைவர் கலைஞர், தென்காசியை மாவட்டமாக அறிவிப்பதற்கான அத்தனை ஏற்பாடுகளையும் 2006-11 திமுக ஆட்சி காலத்திலேயே செய்துவிட்டார். 2006-11 திமுக ஆட்சியில் 2008 ஆம் ஆண்டு தென்காசி மின்சார வாரியத்தை தனி கோட்டமாக அறிவித்தார் அப்போதைய முதல்வர் கலைஞர். அதன் நெடுஞ்சாலைத் துறையும் தென் காசி தனி கோட்டமாக அறிவிக்கப்பட்டது. அதேபோல பொதுப்பணித்துறையயும் அப்போதே தனி கோட்டமாக அறிவித்தார் கலைஞர். மின்சாரம், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை ஆகியவை தனி கோட்டமானாலே அது ஒரு மாவட்டம் ஆவதற்கான முழு தகுதிதான். வருவாய் துறையையும் பிரித்திருந்தால் தென்காசி அன்றே தனி மாவட்டமாக ஆகியிருக்கும்.
மேலும், 1989 இல் கலைஞர் ஆட்சியில் மாவட்ட தலைமை மருத்துவமனையையே தென் காசியில் கொண்டுவந்துவிட்டார். ஆக தென்காசியை மாவட்டமாக அறிவிப்பதற்கான அத்தனை ஏற்பாடுகளும் கலைஞர் முதல்வராகவும், தளபதி துணை முதல்வராகவும் இருந்தபோதே தொடங்கிவிட்டன. ஆட்சி தொடர்ந்திருந்தால் வருவாய் துறையையும் தனியாக பிரித்து தென்காசி மாவட்டத்தை 2011 லேயே கொண்டுவந்திருப்பார் கலைஞர். இந்த ஆட்சியில் மாவட்ட கூடுதல் நீதிமன்றம் தென் காசிக்கு வந்திருக்கிறது. அதையடுத்து தனி மாவட்ட அறிவிப்பும் வந்திருக்கிறது. 2011 இல் திமுக ஆட்சி மாறியதால் இத்தனை வருடங்கள் தாமதமாக வந்திருக்கிறது. ஆக கலைஞர் பாஷையிலேயே சொல்ல வேண்டுமென்றால் தென்காசி மாவட்டம் என்ற சிலையை அங்க லட்சணங்களோடு முழுமையாக வடித்தது கலைஞர். அதற்கு மிகத் தாமதமாக கண் திறந்திருக்கிறார் எடப்பாடி ” என்கிறார்.
நேற்று சட்டப்பேரவையில் பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடி, கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவித்து 7 மாதமாகிவிட்டது. இதுவரை அதற்கான அரசாணை வெளியிடப்படவில்லை என்னாச்சு?” என்ற கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த முதல்வர், “2 நாட்களுக்கு முன்பு தான் அதற்காக தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். மக்களின் கருத்துகளை அறிந்து எந்ததெந்த தாலுகாவை புதிய மாவட்டத்தில் சேர்ப்பது என்பது குறித்து முடிவெடுக்க வேண்டியுள்ளது. அதற்குத்தான் காலதாமதம் ஆகிறது” என்று பதில் அளித்தார்.
ஜனவரியில் அறிவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சிக்கே இந்த கதியென்றால், இப்போது அறிவிக்கப்பட்ட தென்காசி, செங்கல்பட்டு மாவட்டங்களின் நிலை என்னவோ என்ற கேள்வியும் எழுகிறது.
**-ஆரா**
**
மேலும் படிக்க
**
**[டிஜிட்டல் திண்ணை: சசிகலா நடத்திய மெகா குடும்ப பஞ்சாயத்து!](https://minnambalam.com/k/2019/07/19/85)**
**[பிக் பாஸ் 3: ஜஸ்ட் லைக் தட் சிறுசுகள்!](https://minnambalam.com/k/2019/07/19/9)**
**[ அடிக்கப் பாய்ந்த சத்யா – அடக்கிய சேகர்பாபு: சட்டமன்ற காட்சிகள்!](https://minnambalam.com/k/2019/07/18/25)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! – 2](https://minnambalam.com/k/2019/07/13/54)**
�,”