சுயஉதவிக் குழுக்களை ஊக்குவித்து, தூய்மையை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்ததற்காக தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கும்பகோணம் நகராட்சிக்கு மூன்றாம் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
தூய்மை இந்தியா திட்டத்தின் குறிக்கோள்களை நிறைவேற்றுவதற்காக சுயஉதவிக் குழுக்களுக்கு ஊக்கமளிக்கும் உள்ளாட்சி அமைப்புகளைக் கண்டறிந்து தூய்மைக்கான சிறந்த விருது மத்திய வீடமைப்பு மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தால் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நகராட்சிக்கு மூன்றாவது பரிசு வழங்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்கர் மற்றும் அம்பிகாபூர் ஆகிய நகரங்கள் முறையே முதல் பரிசையும், இரண்டாம் பரிசையும் தட்டிச் சென்றுள்ளன. இந்த விருதைப் பெறுவதற்கு துப்புரவுத் தொழிலாளர்கள் மற்றும் சுயஉதவிக் குழுக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முயற்சிகளை எடுத்திருக்க வேண்டும்.
பொது சுகாதாரத்துக்காகவும், தூய்மையை ஊக்குவிப்பதற்காகவும் கும்பகோணம் நகராட்சி 80 சுயஉதவிக் குழுக்களை நியமித்துள்ளது. மேலும், 6,000 சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் தங்களது சமூக – பொருளாதார நிலையை மேம்படுத்திக் கொள்வதற்கும் உதவி புரிந்துள்ளது. 2019ஆம் ஆண்டுக்கான தூய்மை இந்தியா விருதுகளுக்காகக் கடந்த டிசம்பர் மாதம் கும்பகோணம் நகராட்சி விண்ணப்பித்தது. தமிழகத்திலேயே இந்த விருதை முதன்முறையாகப் பெறும் நகரமாக கும்பகோணம் பெயர் பெற்றுள்ளது.�,