�
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து சிபிஐ தொடர்ந்து விசாரிக்கலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடியில் கடந்தாண்டு ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி நடைபெற்ற போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர். இது தொடர்பாக முதலில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்த நிலையில், பின்னர் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த மனு மீதான விசாரணை இன்று (பிப்ரவரி 18) உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு வந்தது. அப்போது, “துப்பாக்கிச் சூடு தொடர்பாக சிபிஐ தொடர்ந்து விசாரிக்கலாம். உயர் நீதிமன்றம் பிறப்பித்த நிபந்தனைகளைப் பின்பற்றத் தேவையில்லை. சுயேச்சையான விசாரணையை மேற்கொள்ளலாம்” என்று தெரிவித்தது நீதிபதிகள் அமர்வு. இந்த வழக்கில் நியாயமாகவும், பாரபட்சமின்றியும் விசாரணை நடத்த வேண்டும் என சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.�,