தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிப்காட் காவல் ஆய்வாளர் ஹரிகரன் மற்றும் அவரது மனைவி தாளமுத்துநகர் காவல் ஆய்வாளர் வனிதா ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் 7 பேரின் உடல்கள் மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டன. சண்முகம் (38), செல்வசேகர் (42), கார்த்திக் (20), கந்தையா (58), காளியப்பன் (22), ஸ்னோலின் (17), தமிழரசன் (42) ஆகிய 7 பேரின் உடல்கள் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
முதலில் உயிரிழந்தவர்களின் உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுனர். பின்னர் அதிகாரிகளுடன் நடந்த பேச்சு வார்த்தைகளைத் தொடர்ந்து உடல்களை வாங்கிச் சென்றனர்.
இதனிடையே தூத்துக்குடி சிப்காட் காவல் ஆய்வாளர் ஹரிகரன் மற்றும் அவரது மனைவி தாளமுத்துநகர் காவல் ஆய்வாளர் வனிதா ஆகிய இருவரும், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்குச் சென்று வந்ததாகக் கூறப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டில் தவறுதலாகக் குண்டு பாய்ந்து இறந்துவிட்டதாகச் சொல்லி எழுதி கையெழுத்து போடுமாறும் மக்களை அவர்கள் வற்புறுத்தியதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் ஹரிஹரன் மற்றும் அவரது மனைவி வனிதா ஆகியோரை மதுரை மண்டலத்திற்குப் பணியிட மாற்றம் செய்து தென்மண்டல ஐஜி சைலேஷ்குமார் யாதவ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வந்த வெங்கடேஷ் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து வந்த மகேந்திரன் இருவரையும் இடம் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.�,