தூத்துக்குடியில் வ. கௌதமன் போட்டி?

Published On:

| By Balaji

தமிழ்நாட்டின் பல்வேறு பிரச்னைகளுக்காக போராடி வரும் இயக்குனரும், தமிழ்ப் பேரரசு கட்சியின் தலைவருமான வ. கௌதமன், தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடக் கூடும் என்று தூத்துக்குடியில் இருந்து தகவல்கள் கிடைக்கின்றன.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் கனிமொழியும், அதிமுக கூட்டணி சார்பில் தமிழிசையும் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த மே 22 ஆம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நடத்திய போராட்டத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து சென்னை சேப்பாக்கத்தில் ஸ்டெர்லைட் குழும தலைவர் வேதாந்தாவின் உருவ பொம்மையை எரித்து இயக்குனர் கௌதமன் கைதானார். இதன் பின் ஸ்டெர்லைட் தொடர்பான பல போராட்டங்களில் கலந்துகொண்டிருக்கிறார்.

இந்நிலையில் வர இருக்கிற மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும்படி கௌதமனுக்கு அங்கிருக்கும் போராட்டக் குழுவினர் சார்பில் அழைப்புவிடப்பட்டிருக்கிறதாம். தேர்தலில் வெற்றி தோல்வி ஒருபக்கம் இருந்தாலும் நாம் இந்த தேர்தல் பரப்புரை மூலம் ஸ்டெர்லைட் விவகாரத்தில் மத்திய, மாநில ஆளுங்கட்சிகள், எதிர்க்கட்சிகளின் முகமூடிகளைக் கிழிக்க ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று கௌதமனிடம் சொல்லியிருக்கிறார்கள்.

இந்தத் தகவல் கிடைத்ததும் நாம் கௌதமனைத் தொடர்புகொண்டு கேட்டோம். “தமிழனின் வளம் எங்கே சுரண்டப்பட்டாலும் அங்கே நான் எந்த விளைவையும் பொருட்படுத்தாமல் போராடி வருகிறேன். அந்த வகையில் தமிழர்களின் வாழ்வும், உயிரும் சூறையாடப்பட்ட தூத்துக்குடியில் களமாட சில நல்ல உள்ளங்கள் அழைத்திருக்கிறார்கள். அதற்கான சாத்தியம் பற்றி ஆராய்ந்துகொண்டிருக்கிறேன். அப்படிப் போட்டியிட்டால் விரைவில் உங்களுக்குச் சொல்லுவேன்” என்றார் வ. கௌதமன்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share