இந்திய – ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டி குறித்த அலசல்!
“அவர்களுக்கு ஓய்வு தேவை. வலைப் பயிற்சி நாசமாய்ப் போகட்டும் (to hell with the nets)” என்றார் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி. முதல் டெஸ்ட் முடிந்த பிறகு இரண்டாவது டெஸ்டுக்கான திட்டம் என்ன என்று சோனி தொலைக்காட்சி நிருபர் கேட்டதற்கு அவர் அளித்த பதில் இது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக முதல் டெஸ்டில் இந்திய அணி பெற்ற வெற்றியின் மகிழ்ச்சியில் திளைத்துக்கொண்டிருந்தபோது வந்த இந்தச் சொற்களை அந்தத் தருணத்துக்கே உரிய வெளிப்பாடாக எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர, திமிராகவோ அலட்சியமாகவோ எடுத்துக்கொள்ளக் கூடாது. ஆனால், பயிற்சியாவது மண்ணாங்கட்டியாவது, பசங்க ரெஸ்ட் எடுக்கட்டும் என்று பயிற்சியாளர் குதூகலிக்கும் அளவுக்கு இது பெரிய வெற்றிதானா?
இது முக்கியமான வெற்றி என்பதில் ஐயமில்லை. ஆஸ்திரேலியாவில் பல தொடர்களில் ஆடியும் இந்தியா இதுவரை ஐந்து போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்றிருக்கிறது. இது ஆறாவது. இதுவரை எந்தத் தொடரையும் வென்றதில்லை. எந்தத் தொடரிலும் முதல் டெஸ்டில் வென்றதில்லை. இந்த வெற்றி, ஆஸ்திரேலியாவில் முதல் முறையாகத் தொடரை வெல்வதற்கான உத்வேகத்தை அளிக்கும். இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்க்கும்போது இந்த வெற்றி முக்கியமானதுதான்.
ஆனால், ரவி சாஸ்திரியின் அதீத உற்சாகம் பொருத்தமானதுதானா? பந்து வீச்சாளர்கள் எதிரணியை இரண்டு முறை ஆட்டமிழக்கச் செய்தார்கள். வேகப்பந்து வீச்சாளர்களிடம் கட்டுக்கோப்பும் துணிச்சலான முயற்சிகளும் காணப்பட்டன. எதிரணி மட்டையாளர்கள் உறுதியுடனும் பொறுமையாகவும் ஆடிக்கொண்டிருந்த நிலையிலும் மனதைத் தளரவிடாமல், அயராமல் தமது தாக்குதலைத் தொடர்ந்துகொண்டிருந்தார்கள். இந்திய மட்டையாளர்களால் முதல் இன்னிங்ஸில் 250 ரன்களையே அடிக்க முடிந்தது. ஆனால், இந்தியப் பந்து வீச்சாளர்களால் 235 ரன்களுக்குள் எதிரணியைச் சுருட்ட முடிந்தது. முன்பெல்லாம் இந்தியா 400 ரன்களைக் குவித்தாலும் போதாது என்னும் நிலையில் அதன் பந்து வீச்சு இருந்தது. இப்போது குறைவான ரன் அடித்தாலும் அதையும் தற்காத்துக்கொள்ளும் அளவுக்குப் பந்துவீச்சு இருக்கிறது. இது இந்திய அணியின் முன்னேற்றத்துக்குச் சிறந்த சான்று.
**மட்டை வரிசையில் விரிசல்**
ஆனால், மட்டையாளர்கள் எதிர்பார்த்த அளவுக்குச் சிறப்பாக விளையாடினார்களா என்றால் இல்லை. முன்னிலை மட்டையாளர்களில் சத்தேஸ்வர் புஜாரா, அஜிங்க்ய ரஹானே, கே.எல்.ராகுல் ஆகியோரைத் தவிர மற்றவர்கள் குறிப்பிடத்தக்க அளவில் பங்களிக்கவில்லை. ரன் அடிக்கவில்லை என்பதைவிடவும் ஆபத்தான அம்சம், தற்கொலைக்கொப்பான முறையில் விக்கெட்டைப் பறிகொடுப்பது. முதல் இன்னிங்ஸில் முதல் அறுவரில் புஜாராவைத் தவிர மற்ற அனைவரும் அப்படித்தான் விக்கெட்டை இழந்தார்கள். இரண்டாவது இன்னிங்ஸில் நிலைபெற்று ஆடிக்கொண்டிருந்த ராகுல் தேவையற்ற ஆவேசத்தைக் காட்டப்போய் ஆட்டமிழந்தார். முதல் இன்னிங்ஸில் ரோஹித் ஷர்மா இதேபோல ஆட்டமிழந்தார். வெற்றி பெற்றுவிட்டதால் இவையெல்லாம் சரியாகிவிடாது. உண்மையில் ஒவ்வொரு இன்னிங்ஸிலும் இந்தியா 50 – 100 ரன்களையேனும் கூடுதலாக எடுத்திருக்க முடியும்.
முடியும் என்பது மட்டுமல்ல. அப்படித்தான் எடுத்திருக்க வேண்டும். பந்து வீச்சாளர்கள் எவ்வளவுதான் சிறப்பாக வீசினாலும் எதிரணியின் ஆட்டத்தையும் பொறுத்துத்தான் வெற்றி கிடைக்கும். ஆஸ்திரேலியாவின் தற்போதைய மட்டை வரிசை வலுவாக இல்லை என்பது சிறு குழந்தைக்கும் தெரியும். அந்த மட்டை வரிசையை வைத்துக்கொண்டே அந்த அணி இரண்டு இன்னிங்ஸிலும் இலக்கை நெருங்கத்தான் செய்தது. கடைசியில் 31 ரன் வித்தியாசத்தில்தான் இந்தியாவால் வெற்றிபெற முடிந்தது. ஆஸ்திரேலியாவின் கடைநிலை மட்டையாளர்கள் விடாமல் போராடினார்கள். முதல்நிலை மட்டையாளர்களின் பங்களிப்பு சற்று அதிகமாக இருந்திருந்தாலும் இந்தியா இந்தப் போட்டியில் தோற்றிருக்கும். தோற்றிருந்தாலும் ரவி சாஸ்திரி “வலைப் பயிற்சி நாசமாய்ப் போகட்டும்” என்று சொல்லியிருக்கக்கூடும். ஆனால், களிப்போடு அல்ல, விரக்தியோடு சொல்லியிருப்பார்.
**இரு அணிகளின் நிலை என்ன?**
இன்றைய நிலையில் இதர அணிகளோடு ஒப்பிடுகையில் இந்தியாவின் மட்டை வரிசை ஆகச் சிறந்தது என்று சொல்ல முடியாவிட்டாலும் வலுவானது. தற்போதைய ஆஸ்திரேலிய அணியைக் காட்டிலும் நிச்சயமாக வலுவானது. இந்த மட்டை வரிசையை வைத்துக்கொண்டு இந்தியாவால் 250, 307 ஆகிய ரன்களைத்தான் அடிக்க முடிந்தது. டேவிட் வார்னரும் ஸ்டீவன் ஸ்மித்தும் இல்லாத நிலையில் வலுக் குறைந்த மட்டை வரிசையை வைத்துக்கொண்டு ஆஸ்திரேலிய அணி கடுமையாகப் போராடி இலக்கை நெருங்கியது. இந்தப் பின்னணியில் பார்க்கும்போது இந்தியாவின் மட்டை வீச்சு, பந்து வீச்சு இரண்டையும் முழு மனதோடு பாராட்ட முடியவில்லை. குறிப்பாக மட்டை வீச்சின் பலவீனம் பந்து வீச்சின் பலத்தால் பூசி மெழுகப்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும். எதிரணியின் பலவீனமும் இதற்குப் பங்களித்திருக்கிறது.
ஆக, ரவி சாஸ்திரி இந்த அளவுக்குத் துள்ளிக் குதிக்கும் அளவுக்கு இந்தியா ஆடிவிடவில்லை என்பதே உண்மை. 2006இல் ராகுல் திராவிட் தலைமையில் தென்னாப்பிரிக்காவில் இந்திய அணி பெற்ற வெற்றி, வலுவான அணிக்கெதிராகப் பெற்ற மெச்சத்தகுந்த வெற்றி. க்ரீம் ஸ்மித், ஜேக் காலிஸ், ஏபி டிவிலியர்ஸ், ஷான் பொல்லாக், டேல் ஸ்டெய்ன் ஆகியோரைக் கொண்ட அணி. 2007இல் ஆஸ்திரேலியாவில் அனில் கும்ப்ளே தலைமையிலான இந்திய அணி பெர்த் மைதானத்தில் பெற்ற வெற்றியும் அத்தகையது. அதே 2007இல் இங்கிலாந்தில் திராவிட் தலைமையில் பெற்ற வெற்றியையும் இந்தக் கணக்கில் சேர்க்கலாம். அண்மையில் இங்கிலாந்தில் ஒரு டெஸ்ட் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி பெற்ற வெற்றியும் இதில் சேரும். ஆனால், இந்த வெற்றி அப்படிப்பட்டதல்ல. வலுக் குறைவான அணிக்கு எதிராகச் சற்றே திணறிப் பெற்ற வெற்றி.
ஆடுகளத்தில் வெற்றி என்பது எப்போதும் மகிழ்ச்சிக்குரியது. ஆனால், எந்த வெற்றியும் தலைக்கு ஏறிக் கண்களை மறைக்கும் அளவுக்கு ஒருவரை ஆக்கிரமித்துவிடக் கூடாது. அடிலெய்டில் பெற்ற வெற்றி வரும் 14 அன்று அடுத்த டெஸ்ட் நடக்கவிருக்கும் பெர்த் மைதானத்துக்கான எச்சரிக்கை மணியை அடித்திருக்கிறது என்றுதான் கொள்ள வேண்டும்.
ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா முதன்முறையாகத் தொடரை வெல்லும் வாய்ப்பு இருப்பதாகப் பலரும் கணிப்பது இந்திய அணியின் திறமையை வைத்து என்பதைவிடத் தற்போதைய ஆஸ்திரேலிய அணியின் பலவீனத்தை வைத்து என்பதே துல்லியமான புரிதலாக இருக்கும். இந்த நிலையில் அலட்சியமோ, முட்டாள்தனமான போக்கோ நுழைந்துவிட இடம் கொடுக்காமல் தீவிரமாகவும் கவனமாகவும் விளையாட வேண்டும்.
இந்தியா ஆஸ்திரேலியாவில் முதன்முறையாகத் தொடரை வெல்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அப்படி வென்று, வரலாற்றில் இடம்பெறும் வாய்ப்பு இந்த இந்திய அணிக்குக் கிடைத்திருக்கிறது. வரலாறு இந்தப் பெருமையைக் குறிக்கும்போது, பலவீனமான அணியை வென்ற இந்திய அணி என்னும் தகவலையும் பின்குறிப்பாகச் சேர்க்கும் என்பதை மறந்துவிடக் கூடாது. அப்படி நிகழாமல் இருக்க வேண்டுமென்றால் பெரிய வித்தியாசத்தில் வெற்றி அமைய வேண்டும். மாறாக, அதீத தன்னம்பிக்கையும் அலட்சியமும் சேர்ந்து இந்த முறையும் தொடரை வெல்ல முடியவில்லை என்றால் வரலாறு மன்னிக்காது. ஏனென்றால் ஆஸ்திரேலியாவில் தொடரை வெல்ல இப்போது கிடைத்திருக்கும் வாய்ப்பு மீண்டும் கிடைக்கும் என்று சொல்ல முடியாது.�,”