(அமைச்சர் சி.வி .சண்முகம்)
தஞ்சை பொங்கல் விழாவில் சசிகலாவின் தம்பி திவாகரன் சொன்ன தகவல்களுக்கு முன்னாள் அதிமுக அமைச்சரும், முன்னாள் அதிமுக மாவட்டச் செயலாளருமான கே.பி.முனுசாமி கடுமையான விமர்சனங்களை முன்வைத்ததோடு, திவாகரன் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார். இந்நிலையில் கே.பி.முனுசாமிக்கு அவர் இனத்தைச் சேர்ந்த சட்டம், நீதித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பதிலளித்துள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது ‘வைகை’ இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் சண்முகம்.
“கே.பி.முனுசாமி உள்நோக்கத்துடன் ஆதாயத்துக்காக தவறான தகவல்களை தெரிவித்து வருகிறார். கட்சியை காட்டிக்கொடுக்கிற வகையில் அவர் செயல்பட்டு வருகிறார். இன்று, அவர் கட்சியின் துரோகிகள் பட்டியலில் இணைந்துள்ளார். முனுசாமிக்கு கட்சியில் உள்ளவர்கள் குறித்து பேசும் தகுதி கிடையாது. பல்வேறு சோதனையான காலக்கட்டங்களிலும் கட்சி உடைந்துவிடாமல் அம்மாவுக்கு துணையாக இருந்தவர்கள் அவர்கள்.
இன்று பேசுகிற முனுசாமி, அன்று பதவியில் இருக்கும்போது ஏன் பேச முன்வரவில்லை. இப்போது யாரையோ திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக, வேறு ஏதோ ஆதாயம் அடைய வேண்டும் என்பதற்காக கழகத்தை காட்டிக்கொடுக்கும் துரோகியாகச் செயல்படுகிறார். முனுசாமி போன்றவர்களை என்றைக்கும் அதிமுக தொண்டர்கள் மன்னிக்கமாட்டார்கள். திவாகரன் அப்படி என்னதான் சொல்லிவிட்டார். “இந்தக் கட்சியை அழிப்பவர்கள் யாராக இருந்தாலும் தன்னுடைய சடலத்தின் மீதுதான் அது நடக்கும்” என்றார். அவர் கூறியதில் என்ன தவறு இருக்கிறது? அதிமுக-வை காப்பாற்றுவேன் என்று யார் சொன்னாலும் அவர்கள் அதிமுக தொண்டர்கள்தான். இந்த இயக்கத்துக்கு தனி நபர் யாரும் உரிமை கொண்டாட முடியாது. இந்தக் கட்சி தொண்டர்களின் கட்சி. இன்றைக்கு கட்சியின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு சின்னம்மா அவர்கள் தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். கே.பி.முனுசாமி என்ன ஆதாயத்துக்காக இந்தக் கருத்தை பதிவுசெய்தாரோ… இவர் கட்சியின் பேச்சாளர் கிடையாது. இவருடைய கருத்து அதிமுக-வின் கருத்தும் கிடையாது. இவருடைய கருத்தை அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என்றார் அமைச்சர் சண்முகம்.
கே.பி.முனுசாமி பத்திரிகையாளர்கள் சந்திப்பு
இன்று காலை நடத்திய செய்தியாளர் சந்திப்பின் முழு விபரத்தையும் கீழே தந்திருக்கிறோம்.
“ ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியின் முக்கிய இடத்தில் இருக்கும் நிர்வாகிகள், அமைச்சர்கள், பிரபலங்கள் கூட எதிர் கருத்து சொல்லாதநிலையில், சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சராமாரி குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார் கே.பி.முனுசாமி.
ஒரு துணிவான தலைவர் இந்தியக் கண்டத்தில் வேறு யாரு இருந்திருக்க முடியும். அவ்வளவு பெரிய மாபெரும் இரு தலைவர்கள் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களையும் புரட்சித்தலைவி அம்மா அவர்களையும் இருட்டடிப்புச் செய்ய முயற்சி செய்துகொண்டிருக்கிறார். இது எவ்வளவு பெரிய மோசமான செயல். அதேபோல இன்று முதலமைச்சராக இருக்கக்கூடிய மாண்புமிகு முதலமைச்சர் திரு.பன்னீர்செல்வம் அவர்களிடம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பொறுப்பை ஒப்படைத்தார்கள். அடக்கமாக ஆட்சி செய்தார். அம்மாவின் மறைவுக்குப் பின்பும் அந்த வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை இன்று பயன்படுத்திக்கொண்டு மக்கள் எளிதில் அணுகக்கூடிய முதலமைச்சராக மாறியிருக்கிறார். அதற்கு உதாரணம், வர்தா புயலில் சக அமைச்சரோடும் அதிகாரிகளோடும் இணைந்து அந்தப் புயலின் தாக்கத்தை விரைவில் தூக்கியெறிந்து சகஜ வாழ்க்கைக்கு மக்களைக் கொண்டுவந்தார், அதேபோல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று சென்னையில் குடிநீர் பிரச்னை இருக்கிறது என்ற உடனே, எந்தவிதமான ஈகோவும் பார்க்காமல் நேராக ஆந்திர முதலமைச்சரிடம் கேட்டுச் சென்றார். அதற்கிணங்க அவரும் கூடுதலாக 2.5 டி.எம்.சி. தண்ணீர் வழங்க உத்தரவு பிறப்பித்தார். இவ்வளவு எளிமையான நடைமுறையில் இருக்கக்கூடிய ஒரு முதலமைச்சர், ஆக்கபூர்வமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் முதலமைச்சர் இவர்களுக்கு ஏதாவது துணை கொடுக்க வேண்டும் என கருதுகிறார்கள். இது தேவையில்லாத ஒன்று. இன்று திவாகரன் பேசும் கருத்து கழகத்தின் பொதுச்செயலாளருக்கு மிகப்பெரிய தர்மசங்கடத்தை உருவாக்கக்கூடிய சூழல் உருவாகியிருகிறது. அவருக்கு மிகப்பெரிய நிர்பந்தத்தை இவர்கள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்கள். அதிகாரம் ஒரு இடத்தில்தான் இருக்க வேண்டும் என நினைகிறோம். ஆனால் இந்த அதிகார மையம் ஏற்கனவே இருகிற மற்ற கட்சிகளைப்போல குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் இருக்க வேண்டும் என்பவர்கள் தங்களை, இது முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும். அதற்காகத்தான் இந்தக் கருத்தை உங்களிடம் கூறக் கடமைப்பட்டிருக்கிறேன். நீங்கள் என்ன தியாகம் செய்துள்ளீர்கள்? நீங்கள் முதலில் கட்சியிலேயே இல்லை.
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஏற்கனவே உங்களை கட்சியிலிருந்து வெளியேற்றியிருக்கிறார்கள். கட்சியிலே இல்லாத ஒரு நபர், ஒரு தலைமைக்கு விசுவாசம் இல்லாத ஒரு நபர், இன்று இந்த இயக்கத்தை காப்பாற்றுவேன் என்று ஒரு அதிகார மையத்தை உருவாக்குவதற்கு முயற்சி செய்துகொண்டிருக்கிறார். நான் ஒரு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டன் என்ற முறையிலே இதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காக உங்களிடத்திலே இந்தக் கருத்தை சொல்லியிருக்கிறேன். இந்தக் கருத்து என் ஒருவனுடைய கருத்து மட்டுமல்ல; என்னைப்போன்ற லட்சக்கணக்கான அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்களின் கருத்து. நிர்வாகிகள் இருக்கலாம் ஆனால் அவர்களால் சொல்ல முடியாது, நிர்வாகிகள் பலவிதமாக இருக்கிறார்கள். என்ன காரணத்தினாலோ சொல்ல முடியாமல் ஒதுங்கியிருக்கலாம் அல்லது பதவியினால் ஒதுங்கியிருக்கலாம். ஆனால் எங்களைப் போன்ற சராசரி சாதாரண தொண்டன் தலைவர்களை மட்டும் வணங்குகிற தொண்டர்கள் இதுபோன்ற கருத்துகளுக்கு எந்த நேரத்திலும் எப்போதும் செவிசாய்க்கமாட்டார்கள். இதற்காக திவாகரன் அவர்கள் ஒவ்வொரு அண்ணா திமுக தொண்டரிடத்திலும் தன்னுடைய வருத்தத்தை தெரிவிக்க வேண்டும். இனிமேல் இதுபோன்ற அடாவடித்தனமான பேச்சைப் பேசி அண்ணா திமுக தொண்டர்களை பயமுறுத்துவதாகவோ அல்லது அண்ணா திமுக தொண்டர்களை தன் வசம் இழுப்பதற்குரிய வேறுவிதமான நடவடிக்கைகளிலோ இறங்கக் கூடாது. இதுவே ஒரு தொண்டனின் எச்சரிக்கையாக நான் விடுக்கிறேன்.
(பொங்கல் விழாவில் திவாகரன்)
கட்சி இரண்டாக உடைந்த நேரத்தில் மீண்டும் ஒன்றிணைப்பதற்காக கட்சியில் இருக்கிற அனைத்து நிர்வாகிகளும், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட, தீய சக்தி என்ற திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக எல்லா தலைவர்களும் புரட்சித்தலைவி அம்மாவுடன் இருந்தவர்களும் சரி, ஜானகி அம்மாவுடன் இருந்தவர்களும் சரி, இரண்டு தலைவர்களும் ஒன்றிணைந்து இந்த இயக்கத்தை காப்பாற்ற வேண்டும் என்று முயற்சி செய்யும்போது அதற்கு ஜானகி அம்மையார் முழுச் சம்மதம் தெரிவித்து இணைந்து செயல்பட்ட காரணத்தால்தான் இந்தச் சின்னம் உடனடியாக கிடைத்துவிட்டது. இந்தச் சின்னம் கிடைத்தவுடனேயே இரண்டு இடைத்தேர்தல் வந்தது. மருங்காபுரியிலும், மதுரை கிழக்கிலும். இப்போது திவாகர் அவர்கள் சொல்லியிருக்கிறார், தேர்தலை முன்னின்று நடத்தியவர் ம.நடராஜன் என்று. இப்படி அவர் தவறான கருத்தைச் சொல்லுகிறபோது வேதனையாக இருக்கிறது, காரணம், இந்தத் தேர்தலில் நானும் பங்குபெற்றிருக்கிறேன்.
திவாகரனுடைய பேச்சு ஒவ்வொரு அதிமுக தொண்டரையும் புண்படுத்தியிருக்கிறது. அவருடைய பேச்சு முதல்வர் பன்னீர்செல்வத்துக்கும், பொதுச்செயலாளர் சசிகலாவுக்கும் இடையே பூசலை உருவாக்கியிருக்கிறது. ஆகவே திவாரகன் மன்னிப்புக் கேட்க வேண்டும்” என்றார் முனுசாமி.
�,”