திமுக பொருளாளர் துரைமுருகனின் வீட்டில் நேற்று நள்ளிரவில் தொடங்கிய வருமான வரிச் சோதனை இன்று காலை அவரது குடும்பத்தினரின் கல்வி நிறுவனங்களிலும் தொடர்கிறது.
மக்களவைத் தேர்தலில் வேலூர் தொகுதியின் திமுக வேட்பாளராக களமிறங்கியுள்ளார் திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த். வேட்பாளராக அறிவிக்கப்பட்டதிலிருந்து வேலூர் தொகுதியை சுற்றிவரும் துரைமுருகன், மகனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் காட்பாடி காந்தி நகரிலுள்ள துரைமுருகன் இல்லத்தில் நேற்று இரவு வருமான வரித் துறை மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள், திமுக முன்னாள் மாவட்டச் செயலாளர் தேவராஜ் இல்லத்திலும் சோதனை நடத்தப்பட்டது. துரைமுருகன் இல்லத்தில் 5.30 மணி நேரம் சோதனை நடத்திய அதிகாரிகள், காலை 8.30 மணியளவில் சோதனையை முடித்து 2 பைகளில் ஆவணங்களை எடுத்துச் சென்றனர். கல்வி நிறுவனங்களில் சோதனை தொடர்ந்துவருகிறது.
துரைமுருகன் இல்லத்தில் 10 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள், பண்ணை வீடுகளில் சோதனை தொடர்ந்து வருவதாகவும் வருமான வரித் துறை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்த துரைமுருகன், “வீட்டில் அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தினர். ஒன்றும் இல்லை என்று தெரிந்து சென்றுவிட்டனர். வருமான வரித் துறையோ பறக்கும் படை அதிகாரிகளோ சோதனையிடுவதற்கான காலம் இதுவல்ல. நாங்கள் ஒன்றும் கார்பரேட் கம்பெனியை நடத்தவில்லை, சாதாரணமாக கல்லூரி நடத்திவருகிறோம். தேர்தல் வேலைகளில் ஈடுபட்டுவரும் நிலையில், எங்கள் வீட்டில் நள்ளிரவில் நுழைய வேண்டிய அவசியம் என்ன? போன மாதமே சோதனை நடத்தி இருக்கலாம் அல்லவா?” என்று கேள்வி எழுப்பினார்.
“கதிர் ஆனந்துக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. அதனை திசைதிருப்பி தடுக்க வேண்டும் என்ற நோக்கோடும் மன உளைச்சலை ஏற்படுத்தி பணிய வைத்துவிடலாம் என்று களத்தில் எங்களை எதிர்க்க திராணியில்லாத மத்திய, மாநில அரசுகளோடு உறவு வைத்திருக்கும் சில கடைந்தெடுத்த கழிசடை அரசியல்வாதிகள் செய்துள்ள சூழ்ச்சி இது” என்று குற்றம் சாட்டிய துரைமுருகன், நேருக்கு நேர் மோத முடியாமல் வருமான வரித் துறை மூலம் முதுகில் குத்தப் பார்க்கிறார்கள். இப்படி மிரட்டுவது, பொய் வழக்கு போடுவது பூச்சாண்டி காட்டுவதற்கெல்லாம் திமுகவினர் பயப்பட மாட்டோம். ஏனெனில் நாங்கள் மிசாவையே பார்த்தவர்கள். மோதுவதாக இருந்தால் நேரடியாக மோதுங்கள், புறம்போக்குத் தனமான வேலைகளில் ஈடுபடாதீர்கள் என்று சாடினார்.
மேலும், “வருமான வரித் துறையை ஏவிவிடுவதன் மூலம் எதிர்க்கட்சிகளை அடக்கிவிடலாம், அவர்களும் பயந்து மோடிக்கு ஜே போடுவார்கள் என்று மத்திய அரசு தப்புக் கணக்கு போடுகிறது. இவ்வாறு தப்புக்கணக்குப் போட்டவர்கள் அரசியலில் தோற்றுதான் போயிருக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.
சோதனை குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்ப, துரைமுருகன் தனது பாணியில், “எனது அறையிலும் சோதனை நடத்த வேண்டும் என்றார்கள். சரி நடத்துங்கள் என்று கூறி குளிக்கச் சென்றுவிட்டேன். இப்போது என்னுடைய பணிகளை கவனிக்கச் செல்கிறேன்” என்று பதில் கூறினார்.
சோதனை குறித்து திமுக தலைவர் ஸ்டாலின், இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.�,