துருக்கி, இஸ்தான்புல் விமான நிலையக் குண்டுவெடிப்பு: 36 பேர் பலி!

public

நேற்று இரவு 9.30 மணியளவில் துருக்கி தலைநகர் இஸ்தான்புல் விமான நிலையத்தினுள் நுழைந்து முதலில் துப்பாக்கிச் சூடு நடத்திய தற்கொலைப் படையினர், பின்னர் தங்கள் உடலில் இருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்திருக்கின்றனர். இந்தத் தாக்குதலில் 36 உயிரிழப்புகளும், 150 பேருக்கு உடலில் காயங்களும் ஏற்பட்டிருக்கிறது.

இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு காரணமாக இருக்கலாம் என துருக்கியின் பிரதமர் தெரிவித்திருக்கிறார். ஐரோப்பாவின் மூன்றாவது பரபரப்பான விமான நிலையத்தில் நடந்திருக்கும் இத்தாக்குதல், துருக்கியில் இதுவரை நடந்திருக்கும் தற்கொலைப் படை தாக்குதலிலேயே மிக மோசமானதாகக் கருதப்படுகிறது. ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான, (அமெரிக்கா தாக்குதல்

நடத்தும்) கூட்டணியில் துருக்கியும் இருப்பதும் ஐ.எஸ்.ஐ.எஸ்-ன் வன்மத்துக்குக் காரணமாக இருக்கலாம். இது ஒருபுறம் எனில் மறுபுறம், அருகாமை தேசமான சிரியாவில் நடந்துகொண்டிருக்கும் போரின் தாக்கங்கள், குர்திஷ் மக்கள் நிறைந்திருக்கும் தென்கிழக்குப் பகுதிகளில் குர்திஷ் போராளிகளின் தாக்குதல்களையும் ஒரே நேரத்தில் சந்தித்துக் கொண்டிருக்கிறது துருக்கி.

தாக்குதல் நடத்திய நபர்களுள் ஒருவர், தானியங்கி துப்பாக்கியைக் கொண்டு பயணிகள் புறப்படும் வளாகத்தில் இருந்தவர்களை சுடத் தொடங்கினார். அங்கிருந்த மக்கள் ஓடி ஒளிந்து பதுங்கியபிறகு, மூன்று நபர்களும் தங்கள் உடலில் இருந்த குண்டுகளை, பயணிகள் வந்திறங்கும் தளத்தில் வெடிக்கச் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். பயணிகள் வந்து வெளியேறும் இடத்தில் குண்டுகளை வெடிக்கச் செய்வதற்கு முன்னர், இரண்டு நபர்களை தடுத்து நிறுத்த காவல் அதிகாரிகள் துப்பாக்கியால் சுட்டனர் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.பயங்கரவாத எதிர்ப்பைச் சேர்ந்த அமெரிக்க அதிகாரிகள் இருவர், விசாரணையின் முதல் கட்டங்களை அறிந்துகொண்டு, சாட்சியங்கள் எதுவும் இல்லாதபோதிலும், ஐ.எஸ்.ஐ.எஸ்-தான் சந்தேகத்துக்குறிய குற்றவாளிகள் பட்டியலில் முதலில் இருப்பதாகத் தெரிவித்தனர்.

வழக்கமாக, குர்தீஷ் போராளிகள் தாக்குதல் நடத்தும்போது, அவர்கள் அப்பாவி மக்களைக் கொல்வதில்லை. அரசு அதிகாரிகளையே குறிவைப்பார்கள். ஆனால், இந்தத் தாக்குதலில் அப்பாவி மக்கள் குறி வைக்கப்பட்டுள்ளார்கள். எனவே, இவர்கள் ஐ.எஸ். அமைப்பினர் என்கிறார்கள் அதிகாரிகள்.

நேற்று இரவு 9. 50 மணிக்கு தொடங்கிய இந்தத் தாக்குதலுக்கு, ஒன்பது மணி நேரம் கழித்தும் எந்த தீவிரவாதக் குழுவும் பொறுப்பேற்கவில்லை. மார்ச் மாதம், ப்ரஸ்ஸல்ஸ் விமான நிலையத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ்-ஆல் நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் இந்தத் தாக்குதலுக்கு நிறைய ஒற்றுமைகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் துருக்கியர்கள்தான் எனினும், சில வெளிநாட்டவர்களும் இத்தாக்குதலில் மரித்திருக்கின்றனர்.

விருந்தாளி ஒருவருக்காக காத்திருந்த அலி டெகின், குண்டு வெடிப்பால் விமான நிலையத்தின் கூரை இடிந்து கீழே விழுந்தது, “விமான நிலையத்துக்குள் சேதம் அதிகமாக இருக்கிறது. விமான நிலையத்தை அடையாளமே காண முடியவில்லை” என்று அவர் சொல்கிறார்.

ஜெர்மனியிலிருந்து திரும்பியிருந்த டுக்யூ எனும் பெண், “எல்லோரும் ஓடத் தொடங்கினார்கள். எல்லா இடமும் ரத்தத்தாலும், உடல் உறுப்புகளாலும் நிறைந்திருந்தது. கதவுகளில் தோட்டாக்களின் ஓட்டை இருந்தது” என்றார்.

பிரதமர் பினாலி யில்ட்ரின், “அப்பாவி மக்களை இலக்காக்கியிருக்கும் இந்தத் தாக்குதல், மோசமான தீவிரவாதச் செயல்” என இச்சம்பவத்தை விவரித்தார். துருக்கி ஜனாதிபதி தாயீப் எர்தோகன், போராளிக் குழுக்களுக்கு எதிரான சர்வதேச போராட்டங்களில் இது ஒரு திருப்புமுனையாக இருக்க வேண்டுமெனவும், ரம்ஜான் புனித மாதத்தில் நடந்திருக்கும் இந்தத் தாக்குதல், தீவிரவாதம் நம்பிக்கைகளையும், மதிப்புகளையும் கணக்கில் கொள்ளாமல் இயங்கும் எனவும் தெரிவித்தார்.

தாக்குதல் நடந்தபிறகு, காவல் துறையினர் மக்களை வெளியேற்றத் தொடங்கினர். சில பயணிகள் தங்கள் பைகளை எடுத்துக்கொண்டு, டாக்சிகள் பிடிக்கச் சென்றனர். அமெரிக்கத் தூதரகம், அமெரிக்க குடிமக்கள் தாக்குதல் நடந்த இடத்தை தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டது.

சில விமானங்கள் நிறுத்தப்பட்டன. சில விமானங்களின் தடம் மாற்றப்பட்டன. புதன் காலை எட்டு மணி வரை விமானச் சேவை நிறுத்தப்பட்டதாக துருக்கி ஏர்லைன்ஸ் தெரிவித்தது. பிரபல சுற்றுலாத் தளங்களில் நடந்த தற்கொலைப் படை தாக்குதல்கள், தலைநகர் அன்காரவில் நடந்த இரண்டு கார் குண்டுவெடிப்புகள் உட்பட, மிக மோசமான வெடிகுண்டுத் தாக்குதல்களை துருக்கி இந்த வருடம் சந்தித்திருக்கிறது.

http://www.reuters.com/article/us-turkey-blast-idUSKCN0ZE2J1�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *