|துப்புரவுப் பணிகள் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு!

Published On:

| By Balaji

சென்னை மாநகராட்சிப் பணியாளர் தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, மாநகராட்சியில் எட்டு மண்டலங்களுக்கான துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளத் தனியார் நிறுவனங்களிடம் வழங்க இருந்த ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் சென்னை மாநகராட்சியின் 9, 10, 13 ஆகிய மண்டலங்களில் துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள ராம்கி என்ஜினீயரிங் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தன மாநகராட்சிப் பணியாளர் தொழிற்சங்கங்கள். இது நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில், பணிகள் சரிவர நடைபெறவில்லை என்று தொடர்ந்து புகார்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

சென்னை முழுவதும் 1,000க்கும் அதிகமான துப்புரவுப் பணியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. 12 மண்டலங்களிலும் துப்புரவுப் பணியாளர் காலிப் பணியிடங்களை நிரப்பாமல், தனியாரிடம் துப்புரவுப் பணிகளை ஒப்படைக்கச் சென்னை மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வந்தது.

இதனால் தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள் என்றும், அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் கூறி எதிர்ப்பு தெரிவித்தனர் மாநகராட்சிப் பணியாளர்கள். இதனை எதிர்த்து, தொழிற்சங்கங்கள் போராட்டங்களில் ஈடுபட்டன. இதையடுத்து, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் துப்புரவுப் பணிகளுக்காகத் தனியார் நிறுவனங்களுடன் மேற்கொள்ள இருந்த ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாகச் சென்னை மாநகராட்சி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share