துப்புரவுத் தொழிலாளர்கள் வாழ்க்கையும் அவர்கள் பிரச்சினைகளும்
நேஹல் கார்க்
இந்தியாவின் சுகாதாரப் பிரச்சினைகளுக்குப் புதுமையான தீர்வுகளைத் திட்டமிட வேண்டும். நம் நாட்டின் துப்புரவுத் தொழிலார்கள் குறித்த ஆழமான புரிதலை அடிப்படையாகக் கொண்டதாக அந்தத் தீர்வு அமைய வேண்டும்.
நம் நாட்டின் சுகாதாரப் பிரச்சினைகளின் மீதான அரசின் கவனம் அதிகரித்துள்ளது. ஸ்வச் பாரத் அபியான் போன்ற திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இருந்தபோதிலும் துப்புரவுத் தொழிலாளர்களின் வாழ்க்கை என்னவோ இன்னும் பாதாளத்தில்தான் உள்ளது. சுமார் ஐந்து மில்லியன் மக்கள் இந்தத் தொழிலைச் செய்து வருகின்றனர். இதில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் ‘அதிக ஆபத்தான’ நிலைமைகளில் வேலை செய்கிறார்கள்.
சுகாதாரத் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருக்கும்போது விஷவாயு தாக்கி இறந்துவிட்டனர் என கேள்வியுறும்தெல்லாம் நம் மனதில் அடிப்படையான கேள்வி ஒன்று எழுகிறது. ஏன் சுகாதாரத் தொழிலாளர்கள் இத்தகைய வேலைகளில் நுழைகிறார்கள்? உயிருக்கு ஆபத்து இருக்கும் எனத் தெளிவான சான்றுகள் இருந்தும் அவர்கள் ஏன் இத்தகைய வேலைகளில் தொடர்கிறார்கள்?
இந்தக் கேள்விக்கான பதிலை டல்பர்க் அட்வைசர்ஸ் (Dalberg Advisors) எனும் உலகளாவிய ஆலோசனை நிறுவனம் நடத்திய ஆராய்ச்சி தருகிறது. நாட்டின் சுகாதாரத் துறையின் நிலைதொடர்பான முக்கியப் பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
**குடும்பப் பின்னணி**
பெரும்பான்மை துப்புரவுத் தொழிலாளர்களின் பெற்றோர்கள் துப்புரவுத் தொழிலாளர்களாக இருப்பதால் அவர்களும் இதே தொழிலில் நுழைகின்றனர். அவர்களின் பெற்றோர்களுக்கு இந்தத் தொழிலில் உள்ள ஆபத்துகள் தெரிந்தும் தங்களின் பிள்ளைகளை அவர்கள் தடுப்பதில்லை. ஏனெனில் இது ஓர் அரசாங்க நிரந்தர வேலை. மேலும், அரசாங்கம் துப்புரவுத் தொழிலுக்கு ஆள் எடுக்கும்போதே உங்களுக்கு எதாவது நேர்ந்தால் உங்கள் பிள்ளைகளுக்கு இந்த வேலையைத் தருகிறோம் என்ற வாக்குறுதி அளிக்கிறது.
மேலும், சில குடும்பங்களில் கணவன், மனைவி இருவரும் துப்புரவுத் தொழிலாளர்களாக இருக்கின்றனர். ஆதலால் அவர்கள் பிள்ளைகளின் கல்வி பாதிப்படைகிறது. அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கான வழியும் குறைந்துவிடுகிறது.
**முறையான ஒப்பந்தங்கள் இல்லாமல் இயங்குவது**
பெரும்பாலான சந்தர்ப்பங்களில், துப்புரவுத் தொழிலாளர்கள் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து அதே வேலையைச் செய்து வந்தாலும், அந்த வேலைக்கான ஆதாரங்களோ, முறையான ஒப்பந்தங்களோ இல்லாமல் வேலை செய்ததே இதற்குக் காரணம். தொழிலாளர்களுக்குத் தங்கள் வேலைவாய்ப்புகள், வேலைவாய்ப்புக்காகப் புதுப்பித்தல் முதலானவை பற்றிய விழிப்புணர்வு குறைவாக உள்ளது. தங்களுக்கான முழு ஊதியம் எவ்வளவு என்பதுகூட அவர்களுக்குத் தெரியாது. ஏனெனில் அவர்களுக்குச் சம்பளச் சீட்டுகள் (salary slips) தருவதில்லை. அவர்கள் தங்கள் சம்பளத்தைப் பற்றிக் கேட்டால், வேலை போய்விடும் என்று அச்சுறுத்தப்படுகிறார்கள்.
**ஒன்றுபட்ட குரல் இல்லை**
துப்புரவுத் தொழிலாளர்கள் அடிக்கடி வேறு வேறு இடங்களில் பணியில் அமர்த்தப்படுகின்றனர். எனவே, அவர்களால் ஒன்றாகச் சேர்ந்து ஒரு யூனியன் அமைக்க முடியவில்லை. மேலும், பொதுக் கழிப்பறையைச் சுத்தம் செய்வது போன்ற வேலைகளுக்கான ஒப்பந்தங்கள் நகரங்களில் செயல்படும் நிறுவனங்களுக்கே பெரும்பாலும் வழங்கப்படுகின்றன. இந்த முகவர்களால் பணியமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் பெரும்பாலும் நகரங்களுக்கு இடையில் சுழற்சிக்கு விடப்பட்டு, கூட்டு நிறுவனத்தால் மேலும் கட்டுப்படுத்தப்படுகின்றனர்.
தொழிலாளர்கள் பெருமளவில் எங்கு இருந்தாலும், கூட்டுப் பேரம் பேசும் சக்தியைப் பெற முடிவதில்லை. வடிகால் சுத்திகரிப்பு, கழிவுநீர் சுத்திகரிப்பு போன்ற வேலைகளுக்கு நகரத்தில் உள்ளூர் தொழிலாளர்களை வைத்துள்ளனர். மேலும், அவர்கள் எதிர்க்கத் தொடங்கினால், தங்கள் வேலைகளை இழந்துவிடுவோமோ என அஞ்சுகின்றனர். கூட்டு உருவாக்கம் மற்றும் நடவடிக்கையைத் தொடங்க உதவுவதற்கு வெளிப்புற ஆதரவையும் தொழிலாளர்கள் கொண்டிருக்கவில்லை.
இந்தத் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் தாழ்த்தப்பட்ட சாதியினரின் “மிகக் குறைந்த” மதிப்பைச் சேர்ந்தவர்கள். இந்தத் துணை சாதிகளில், சுத்திகரிப்பு ஊழியர்களாகச் சேர்ந்தவர்கள் மட்டும் 12-13 சதவிகிதம் உள்ளனர்.
**பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு**
சில வேலைகளை இயந்திரம் இல்லாமல் செய்வது கடினம் என்று அவர்களுக்குத் தெரிந்தபோதும் அவர்கள் அத்தகைய இயந்திரத்துக்காகக் காத்திருப்பதில்லை. பாதுகாப்பு விதிமுறைகள் மிகவும் குறைவாகவே பின்பற்றப்படுகின்றன. பல சமயம் முழுமையாகவே பின்பற்றப்படுவதில்லை.
இந்த வேலையில் ஏற்படக்கூடிய அபாயங்களைப் பற்றி 5 சதவிகித ஊழியர்களுக்கு மட்டுமே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று ஓர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 7 சதவிகிதத்துக்கும் அதிகமான வேலை ஆட்கள் அந்த வேலைகளில் உள்ள ஆபத்துகளைப் பற்றி எதுவுமே தெரியாது என்று கூறுகின்றனர்.
மேலும் சில நாட்கள் வேலை செய்து அந்தப் பணத்தைக் கொண்டு ஏதாவது தொழில் செய்யலாம் என அவர்களிடம் கேட்டால் அவர்கள் அந்த அளவுக்குப் பணம் இல்லை எனக் கூறுகின்றனர்.
**தீர்வு உண்டா?**
தீர்வுகளை உருவாக்குவதற்கான தற்போதைய முயற்சிகள் மிகவும் மாறுபட்டவை, NGO மூலம் நடக்கும் வேலைகள் முதல் அரசாங்க வேலைகளை விடுவது வரை ஒரு வழியைக் கண்டுபிடிக்க மாறுபட்ட முயற்சிகளை எடுக்கின்றனர். ஆனால், எவ்வித மாற்றமும் நிகழவில்லை என்பதை அன்றாடம் வந்துகொண்டிருக்கும் தொழிலாளர்களின் இறப்புச் செய்திகள் சொல்கின்றன.
துப்புரவுத் தொழிலார்களுக்கான ஆழமான புரிதலை அடிப்படையாகக் கொண்ட இந்தியாவின் சுகாதாரப் பிரச்சினைகளுக்குப் புதுமையான தீர்வுகளைத் திட்டமிட வேண்டும்.
நன்றி: [தி வயர்](https://thewire.in/labour/understanding-indias-sanitation-workers-to-better-solve-their-problems)
தமிழில்: நரேஷ்
�,”