|துப்பாக்கி நீளும்போது உரையாடல் நின்றுவிடும்!

Published On:

| By Balaji

காஷ்மீர் மக்களின் துயரங்களைப் பதிவுசெய்யும் புகைப்படங்கள்

பியர்சன் லினேக்கர். ச.ரே

சென்னைப் புகைப்படக் காட்சி இந்தியாவின் பிரதான புகைப்பட நிகழ்ச்சிகளில் ஒன்று. சென்னையின் பல்வேறு கலை சார்ந்த இடங்களில், கடந்த பிப்ரவரி 22இல் தொடங்கிய இந்தக் காட்சி, மார்ச் 24 வரை நடக்கவிருக்கிறது. 2019 ஆண்டுக்கான பதிப்பில் 60க்கும் மேற்பட்ட புகைப்படக் கலைஞர்களின் படைப்புகள் இடம்பெற்றுள்ளன. கலைத்துறை வல்லுநர்களின் பயிற்சிப் பட்டறைகளும் நடக்கின்றன.

கேமரா வைத்திருக்கும் யார் வேண்டுமானாலும் புகைப்படங்கள் எடுக்கலாம். ஆனால் எடுக்கப்படும் நோக்கத்தை வைத்துத்தான் படங்கள் சிறப்பு பெறுகின்றன. எதைப் பதிவு செய்வது, யாரைப் பிரதிநிதித்துவம் செய்வது, அதனால் எந்த வகையான மாற்றத்தை அவர்களுக்கும் சமூகத்துக்கும் ஏற்படுத்த முடியும் என்பதில் தெளிவு இருப்பவர்கள்தான் காலம் கடந்து நிற்கும் கலைஞர்களாக இருக்கிறார்கள் .

கலை சமூக மாற்றத்துக்குப் பயன்பட வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டு செயல்படும் கலைஞர்கள்தான் ஷீபா சாச்சியும் சோனியா ஜப்பாரும். அதற்கு அவர்கள் படைப்புகளே சாட்சி. சென்னைப் புகைப்படக் காட்சியின் ஒரு பகுதியாக, சென்னைப் பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற, கலைநயம் மிகுந்த, கட்டடக் கலைகளுக்கு முன்னுதாரணமாக விளங்கும் செனட் ஹவுஸ் கட்டடத்தில் ‘துப்பாக்கி நீளும்போது உரையாடல் நின்றுவிடும்’ என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ள காஷ்மீர் மக்களைப் பற்றிய புகைப்படங்கள் பரந்த கவனத்தைப் பெற்றுள்ளன. இந்தப் புகைப்படங்களை எடுத்த ஷீபா சாச்சி, சோனியா ஜப்பார் ஆகியோர் அரசியல் செயற்பாட்டாளர்களும்கூட. பெண்ணிய நோக்கில் பல கலைப்படைப்புகளை இவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். மக்களின் வாழ்க்கையில் பல்வேறு தருணங்களில் உடனிருந்து அவர்களின் அன்றாடக் கதைகளை உள்வாங்கிய பிறகு எடுக்கப்படுவதால் இவர்களுடைய படங்கள் வரலாற்று ஆவணமாகவே திகழ்கின்றன.

காஷ்மீர் மக்களின் அன்றாட வாழ்கையில் பயன்படுத்தப்படும் எளிய பொருட்களான களிமண், செங்கல், அரிசி ஆகியவை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டிருக்க அதன் மேல் புத்தகத் தாங்கிகளாகப் பயன்படும் ரிஹால்களின் மீது இந்த புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

தங்களது படைப்பின் நோக்கத்தையும் அது உருவான முறை பற்றியும் கலைஞர்கள் இவ்வாறு விளக்குகிறார்கள்:

“ஆயுதக் கலவரம், துப்பாக்கி ஏந்திய குழுவினரின் அடக்குமுறை ஆகியவை பற்றி ஊடகங்களின் பிரதிநிதித்துவத்தில் இடையீடு செய்வதன் மூலம் இந்த இன்ஸடலேஷன் போரின் அந்தரங்கமான இடங்களுக்குப் பார்வையாளரை இட்டுச் செல்கிறது. பொதுவாக வெளியில் தெரியாத காஷ்மீரின் சாதாரணப் பெண்களின் குரல் ஒரே மாதிரியான சித்திரங்களுக்குள்ளான போட்டியில் நிகழும் ஆரவாரங்களுக்கு மத்தியில் அமிழ்ந்து போய்விடுகின்றன. இந்தப் புகைப்படங்கள் அக்குரல்களைக் கேட்க வழி செய்கின்றன.

1995இல் இருந்து ஆறு ஆண்டுகளாகச் சேகரிக்கப்பட்ட இந்த வாக்குமூலங்கள், எதிரெதிர் துருவங்களாக்கப்பட்ட இந்து – முஸ்லிம், இந்தியன் – பாகிஸ்தானி, நாம் – அவர்கள் ஆகியவற்றை ஒரே வகைமைக்குள் ஆழ்த்தும் செயல்பாடுகளை உடைத்துப் போடுகின்றன. பரவலான பல்வேறு சமூக பின்னணியிலிருந்து வரும் பெண்கள் இதற்குச் சாட்சியாக இருக்கிறார்கள்

காஷ்மீரின் போராட்டத்தின் பல்வேறு மதங்கள், இனக் குழுக்கள், அனுபவங்கள் ஆகியவற்றையும் கடந்து வன்முறையைச் சந்தேகத்துக்கு இடமின்றி நிராகரித்தல் மூலம் ஒன்றிணைக்கப்படும் இந்தக் குரல்கள் வலிமை, பகுத்தறிவு, பரிவு ஆகியவற்றின் பதிவுகள்” என்கிறார்கள் இந்தக் கலைஞர்கள்.

**உண்மை சொல்லும் படங்கள்**

புகைப்படக் காட்சியைப் பார்வையிட வந்த இதழியல் மாணவி மானசி பன்சாலி இந்தப் புகைப்படங்கள் நமக்கு மாற்றுக் கதைகளைக் கூறுகின்றன என்பதைச் சுட்டிக்காட்டினார். “காஷ்மீர் மக்களின் அன்றாட வாழ்க்கையை இந்திய ராணுவமும் ஆயுதம் ஏந்திய குழுக்களும் எவ்வாறு கட்டுப்படுத்த முயற்சி செய்கின்றன என்பதை இப்புகைப்படங்கள் காட்டுகின்றன. புல்வாமாவில் தாக்குதல் நடந்தபோது, இந்தியா முழுவதும் வாழும் காஷ்மீரிகள் மீது மிக மோசமான தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதற்குக் காரணம் இதுவரை காஷ்மீரைப் பற்றிய இந்தியமயமான கருத்துகள்தான் பொதுவெளியில் உலவுகின்றன. இந்த விவகாரத்தை ஒரே கண்ணோட்டத்தில் பார்க்கத்தான் பழக்கப்பட்டிருக்கிறோம். அவர்களது வாழ்க்கையின் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டு சேர்ப்பதை இங்கிருக்கும் ஊடகங்கள் திட்டமிட்டே தவிர்த்துவிட்டன. பெரும் ஊடகங்கள் காட்டும் சித்திரங்கள் ஒருதலைபட்சமானவை. உண்மைகளை மறைப்பவை. ஆனால், இங்கு இடம்பெற்றிருக்கும் புகைப்படங்கள் காஷ்மீர் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பவை. மாற்றுக் கதைகளைச் சொல்பவை. இவற்றை மக்களிடம் கொண்டு சேர்த்தால் உண்மையை அறிந்துகொள்வார்கள்” என்றார்

இதழியல் மாணவரான பிரியங்கா கவுர் தன்னை காஷ்மீர் பண்டிட் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு தன் கருத்தை முன்வைத்தார். “காஷ்மீரி முஸ்லிம்கள், பண்டிட்கள் மீது வெறுப்பு கொண்டவர்கள், அவர்களது இருப்பை அறவே வெறுத்தவர்கள். அதனால்தான் பண்டிட்கள் காஷ்மீரிலிருந்து வெளியேறினார்கள் என்று பலராலும் சொல்லப்பட்டாலும் காஷ்மீர் முஸ்லிம்கள், பண்டிட்களை நேசித்தவர்கள் என்றும், தற்போதும் அவர்களை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறார்கள் என்பதும் எவராலும் பேசப்படுவதே இல்லை. அப்படி நினைப்பவர்களும் இருக்கிறார்கள் என்பதை இங்கு காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் புகைப்படங்கள் நமக்குத் தெரிவிக்கின்றன. ஒரு பண்டிட்டாக இஸ்லாமியர்கள் மீது எனக்குப் பாரபட்சமான பார்வை இருப்பதற்குக் காரணம், என் வாழ்க்கை முழுவதும் சொல்லப்பட்டுவந்த கதைகள்தான். இந்தப் புகைப்படங்களைப் பார்த்த பிறகுதான் இங்கு சொல்லப்படும் கதைகள் இது வரை எனக்கு ஏன் சொல்லப்படவில்லை என்ற கேள்வி எழுகிறது. அதனால் தெளிவையும் பெற முடிகிறது” என்றார்.

“காஷ்மீரை முழுக்க முழுக்கப் பெண்களின் பார்வையிலிருந்து அணுகியது மிகவும் சிறப்பு. ஆயுதம் ஏந்தி சண்டையிடும் நபர்களின் மனைவிகள் தங்களின் கணவர்கள் உயிருடன் இருக்கிறார்களா, இறந்துவிட்டார்களா என்று எண்ணியபடியே காத்திருக்கும் வலியை இது பதிவு செய்திருக்கிறது. இது காஷ்மீர் பண்டிட்களின் குரலா அல்லது காஷ்மீர் முஸ்லிம்களின் குரலா என்று இந்தப் புகைப்படங்களில் நீங்கள் கண்டுபிடிக்க முடியாது. அடிப்படையில் அங்கு ஒலிக்கும் குரல்கள் ஒன்றுதான். எல்லோரும் சமமாகப் பாதிக்கப்படுகிறார்கள்” என்று மேலும் கூறினார் பிரியங்கா கவுர்.

**வரலாற்றின் மேல் படிந்த ரத்தக் கறைகள்**

ராணுவக் கட்டுப்பாட்டில் இருக்கும் எந்த இடத்திலும் அத்துமீறலும் அராஜகமும் இருக்கும் என்பதுதான் உலக வரலாறு. பல ஆண்டுகளாகச் சிறப்புரிமை கொடுக்கப்பட்ட ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீரிலும் அராஜகத்துக்கும் வன்முறைக்கும் பஞ்சமில்லை. இவர்களை எதிர்த்து இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உருவாகியிருக்கும் போராளிக் குழுக்கள். இவர்களுக்கு எதிராக அவர்கள். அவர்களுக்கு எதிராக இவர்கள். இவர்களுக்கு மத்தியில் சாமானிய மக்கள். இதனால் காஷ்மீர் பெண்கள் இழந்தவை அதிகம். அவர்களின் அழுகுரல்கள் வரலாற்றின் மேல் படிந்திருக்கும் ரத்தக் கறைகள் என்பதை இந்தக் காட்சியின் மூலமாக நாம் உணரலாம்.

இந்தப் படங்களுடன் காஷ்மீரிகளின் குரல்களும் இந்தக் காட்சியில் எழுத்துபூர்வமாகப் பதிவாகியிருக்கின்றன. அவற்றில் சிலவற்றை இங்கே தருகிறோம்:

**குல்சலாம், ஸ்ரீநகர்:**

இன்று பிரிவினையைப் பற்றிப் பேசுவது எனக்கு வேதனையை ஏற்படுத்துகிறது. ஆனால் நாங்கள் என்ன செய்ய முடியும்? எங்கள் குரலுக்கு யாரும் செவிமடுக்கவில்லை.

1947க்கு முன்புவரை காஷ்மீர் இந்தியாவில் இல்லை. 1947இல் இந்தியாவில் இணைந்ததிலிருந்தே பனிப்போர் போன்ற சூழல் உருவாகத் தொடங்கிவிட்டது. அதிருப்திகள் இருந்தபோதும், வெளியே சொல்ல அனுமதிக்கப்படவில்லை. பேச நினைத்தவர்களும் கடுமையாக ஒடுக்கப்பட்டார்கள்.

தேர்தல்களிலும், தேசிய விளையாட்டுகளிலும் நாங்கள் பங்கேற்கத் தொடங்கினோம். இந்தியா எங்கள் நாடு என்பதை நாங்கள் நம்பத் தொடங்கினோம்.

அப்போதுதான் 1987 தேர்தலில் மிக மோசமாக மோசடி செய்யப்பட்டது. மீண்டும் அனைத்தும் கலையத் தொடங்கின. தேர்தல் மோசடி, துப்பாக்கிச் சூடு… எப்படி இதை நாங்கள் எங்களது தேசமாக எடுத்துக்கொள்ள முடியும்?

வீட்டை விட்டு அதிகம் வெளியே வராதவர்களுக்கு அரசாங்கத்தையும் மக்களையும் வேறுபடுத்திப் பார்க்கத் தெரியாது. அவர்கள் இந்திய மக்கள் எங்களது எதிரிகள் என எண்ணத் தொடங்கினார்கள்.

இந்தக் குழப்பத்தின் மத்தியில் இந்தப் போர் தொடங்கியது. சிலர் தங்களது அறிவுக்குப் பதிலாகத் துப்பாக்கியை ஏந்தினர். கேள்விகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டுத் துப்பாக்கி முன்னுக்கு வந்தது. துப்பாக்கி ஏந்தப்படும்போது உரையாடல் நின்றுவிடுகிறது. உரையாடல் நின்றுபோகும்போது மக்கள் அந்நியப்படத் தொடங்குகிறார்கள்.

**மோஹதர்மா, அரசியல்வாதி:**

இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீரை ஆக்கிரமித்துள்ளன. காஷ்மீர் பெண்களாகிய நாங்கள் அதன் பாலை குடித்து வளர்ந்தவர்கள். அதனால் எங்களது லட்சியம் சுதந்திரம் பெற்ற காஷ்மீர்தான். நாங்கள் எல்லா மதத்தையும் மதிக்கிறோம். நாங்கள் அடிப்படைவாதிகள் அல்ல. எல்லா மதத்தினரும் ஒன்றாக வாழ்கிறோம். காஷ்மீரிலிருந்து சென்ற பண்டிதர்கள் தங்கள் தாயகம் திரும்ப விரும்புகிறோம். காஷ்மீரின் சுயநிர்ணயத்துக்கான எங்கள் போராட்டத்தில் சேர்வார்களானால் அவர்களை வரவேற்போம்.

**பர்வீன்:**

காஷ்மீர் எப்படி இருக்கிறதென்று பாருங்கள். காஷ்மீரிகள் போராடுகிறார்கள் என்று சொன்னால் அது மிகவும் எளிமையானதாக இருக்கும். இங்கு ராணுவத்துக்கு எதிராகப் போராளிகள் இருக்கிறார்கள்; ராணுவம் யாரையெல்லாம் போராளிகள் என்று முடிவு செய்கிறதோ அவர்களுக்கு எதிராக இருக்கிறார்கள். ஹிஸ்புல் முஜாஹிதீனுக்கு எதிராக ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி இருக்கிறது. அரசு ஆதரவு பெற்ற இக்வான் படைக்கு எதிராக ஹிஸ்புல் முஜாஹிதீன் இருக்கிறது.

இவர்களுக்கு மத்தியில் சாதாரண மக்கள்தான் கொல்லப்படுகிறார்கள். முதலில் பண்டிட்கள். அடுத்து தேசிய மாநாட்டு கட்சிக்காரர்கள். பிறகு சீக்கியர்கள். தற்போது நாங்கள் (முஸ்லிம்கள்).

இந்த நிலை வரும் என்று என் மகள்களுக்கும் தெரியும். அதனால்தான் முன்பே ஜம்முவில் இடம் வாங்கினோம். இப்போது அங்கேயே செல்கிறோம்.

– இத்தகைய குரல்களையும் அவற்றுக்கு வலுவூட்டும் காட்சிப் பதிவுகளையும் கொண்ட இந்தப் புகைப்பட ஆவணம், காலம் கடந்து உண்மையைக் கூறும் நடுநிலையான, தனித்து நிற்கும் சாட்சியாக விளங்குகிறது.

*(கட்டுரையாளர் காயிதேமில்லத் சர்வதேச ஊடகக் கல்வி அகாடமியில் பயிலும் மாணவர்)*

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share