கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதியால் நியமிக்கப்பட்டவர்களை நீக்கம் செய்துவிட்டு புதிதாக நியமனம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.
உதவிப் பேராசிரியர் பணி நியமனத்திற்கு ரூ. 30 லட்சம் லஞ்சம் வாங்கியதாகக் கோவை பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கணபதியை லஞ்ச ஒழிப்புப் போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். அவருடன் இடைத்தரகராகச் செயல்பட்ட பேராசிரியர் தர்மராஜும் கைது செய்யப்பட்டார். இதேபோல், பாரதியார் பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்குநர் மதிவாணன் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் அவர்கள் இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
**நியமனம் செய்யப்பட்டவர்கள் பணிக்கு ஆபத்து?**
துணைவேந்தராகக் கடந்த 2016ஆம் ஆண்டு கணபதி பொறுப்பேற்ற நாள் முதல் இந்த மாதம் வரை சுமார் 2 ஆண்டுகளில் அவர் 84 பேரைப் பல்வேறு பதவியிடங்களுக்குப் பணி நியமனம் செய்துள்ளார். இந்த 84 பேரில் எத்தனை பேர் லஞ்சம் கொடுத்து பணியில் சேர்ந்துள்ளனர் என்பது குறித்து லஞ்ச ஒழிப்புப் போலீசார் விசாரித்துவருகின்றனர். இந்நிலையில், துணைவேந்தர் கணபதியால் நிரப்பப்பட்ட அனைத்துப் பணியிடங்கள் குறித்தும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியில் உள்ள நீதிபதியின் தலைமையின் கீழ் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கத்தினர் மற்றும் சிண்டிகேட் உறுப்பினர்களில் ஒரு பிரிவினர் வலியுறுத்தியுள்ளனர். அதேபோல், தகுதி வாய்ந்த தங்களுக்கு உதவிப் பேராசிரியர் பணி வழங்கப்படவில்லை எனக் கோரி பணி வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று(பிப்ரவரி 5) கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, துணைவேந்தர் மூலம் நியமிக்கப்பட்டவர்களை நீக்கிவிட்டு நேர்மையாக நியமனம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.
**துணை வேந்தரை சஸ்பெண்ட் செய்ய நடவடிக்கை**
இதற்கிடையே, துணை வேந்தர் பதவியில் இருந்து கணபதியை சஸ்பெண்ட் செய்வதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாக உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். “துணை வேந்தரை சஸ்பெண்ட் செய்யும் ஆதிகாரம் ஆளுநரிடம் உள்ளது. லஞ்ச ஒழிப்புதுறையின் அறிக்கையைப் பெற்ற பின் ஆளுநர் இது குறித்து முடிவெடுப்பார். புதிய துணைவேந்தர் நியமனம் தொடர்பாக குழு அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது” என்று அவர் கூறியுள்ளார். கணபதியின் செயல்பாடுகள் குறித்த விரிவான அறிக்கையை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடன் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நாளை வழங்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்பின்னர் அவர் சஸ்பெண்ட் செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, இந்த விவகாரத்தில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த பலருக்கும் தொடர்பு உள்ளதாகவும் அதனால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் ஸ்டாலின், அன்புமணி ராமதாஸ் போன்றோர் வலியுறுத்தியுள்ளனர்.பணியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து பாரதியார் பல்கலைக்கழக ஊழல் வழக்கு விசாரிக்கப்பட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
**ஆண்டு விழா கொண்டாட்டங்கள் ரத்து**
பாரதியார் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட 35வது ஆண்டு விழா கொண்டாட்டங்கள் இன்று கொண்டாடப்படுவதாக இருந்தது. துணை வேந்தர் கைது செய்யப்பட்டதையடுத்து, இந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
�,