பெருகிவரும் சமத்துவமின்மையால் முதலாளித்துவத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.
ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த ரகுராம் ராஜன் ஓய்வுக்குப் பிறகு அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். நேற்று (மார்ச் 12) பிபிசி ரேடியோ 4 நிகழ்ச்சியில் ரகுராம் ராஜன் பேசுகையில், “பொருளாதார மற்றும் அரசியல் அமைப்புகள் பெரும்பான்மையான மக்களுக்கு எதையும் வழங்குவதை நிறுத்திவிட்டது. குறிப்பாக 2008ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு அவை நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் முதலாளித்துவத்துக்கு எதிராகக் கிளர்ச்சி அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் பொருளாதாரத்தைக் கருத்தில்கொண்டு சமூகச் சமத்துவமின்மையைப் புறக்கணிக்க முடியாது. முதலாளித்துவ வர்க்கம் சமமான வாய்ப்புகளை வழங்காததால், அது உடைந்து விழுவதாக நான் நம்புகிறேன். பெரும்பான்மையானோரின் பொருளாதாரக் கவலைகளை முதலாளித்துவம் தீர்க்கவில்லை. சமவாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இதனால் முதலாளித்துவத்துக்கு எதிரான கிளர்ச்சி ஏற்படும்” என்றார்.
மேலும், “உண்மையில் வீழ்ச்சியுற்ற மக்கள் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இப்போது நீங்கள் உண்மையில் வெற்றி பெற விரும்பினால், உங்களுக்கு நல்ல கல்வி வேண்டும். 2008ஆம் ஆண்டிலிருந்து அரசு கடன் 77 விழுக்காடு அதிகரித்துள்ளது. அதேவேளையில் கார்ப்பரேட் கடன் 51 விழுக்காடு அதிகரித்துள்ளது. ஆய்வாளர்கள் அடுத்த சரிவு 2008 நிதி நெருக்கடியின் அளவை விடக் கடுமையானதாகவே இருக்கும் என எச்சரிக்கின்றனர்” என்றும் ரகுராம் ராஜன் பேசினார்.�,