தீவிரவாதத்தை ஒழிப்பதற்குக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்காவிடம் உறுதியளித்துள்ளது பாகிஸ்தான்.
புல்வாமா தாக்குதலையடுத்து, இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே சுமூகமற்ற நிலை நிலவி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பதற்றத்தைத் தணிக்க அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. இந்நிலையில், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெக்மூத் குரோஷியை அழைத்துப் பேசியுள்ளார் அமெரிக்க தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் பால்டான்.
அப்போது, பாகிஸ்தானை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஜெய்ஷ் இ முகமது மற்றும் சில பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக பாகிஸ்தான் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்காவின் சார்பில் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, இந்தியாவுடனான பதற்றத்தைத் தணிக்க தீவிரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என குரேஷி உறுதி அளித்துள்ளார். இத்தகவலை ஜான் பால்டான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோவைச் சந்தித்துப் பேசினார் இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் விஜய் கோகலே. அப்போது, புல்வாமா தாக்குதல் குறித்தும், தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில், தீவிரவாதத்தை ஒழிக்க பாகிஸ்தான் எந்தவித ஒத்துழைப்பும் தருவதில்லை என ஆப்கானிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது.
ஆப்கானிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹம்துல்லா மோஹிப் நிகழ்ச்சியொன்றில் பேசியபோது, “சகோதரத்துவம், வரலாறு போன்றவற்றை குறித்து பாகிஸ்தான் பேசுகிறது. ஆனால், தீவிரவாதத்தை ஒழிப்பதில் அந்தளவுக்கு ஆர்வம் காட்டுவதில்லை. எந்தவொரு ஒத்துழைப்பும் தெரியவில்லை” என்று தெரிவித்தார்.
இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் தீவிரவாதத்தால் பெரும் பாதிப்புக்கு உட்பட்டுள்ளதாகக் கூறினார். “இது இரு நாடுகளுக்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்தாது. தீவிரவாதம் என்பது புற்றுநோய் போன்றது. இன்றைக்கு நம்முடைய பிரச்சினையாக இருக்கும், நாளைக்கு வேறு ஒருவருக்குப் பிரச்சினையாக இருக்கும்” என்று அவர் கூறினார்.
�,