கஜா புயல் காரணமாக ராமநாதபுரம், திருவாரூர், நாகை, கடலூர், புதுக்கோட்டை மற்றும் புதுச்சேரியிலுள்ள காரைக்கால் ஆகிய 6 மாவட்டங்களிலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினத்திலிருந்து வடகிழக்கே 580 கி.மீ. தூரத்திலும், சென்னையிலிருந்து கிழக்கே 490 கி.மீ. தொலைவிலும் வங்கக் கடலில் கஜா புயல் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகரும் கஜா புயல், நாளை (நவம்பர் 15) மாலை கடலூருக்கும் பாம்பனுக்கும் இடையே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் மிகப் பெருமழை பெய்யும் என்றும், மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
“இன்று இரவு 11.30 மணியளவில், இது அதிதீவிரப் புயலாக மாறக்கூடும். காற்றின் அமைப்பைப் பொறுத்து புயலின் வேகம் இருக்கும். புயல் கரையைக் கடக்கும் வரையில் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம். கஜா புயல் புயலாகவோ அல்லது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவோ கரையைக் கடந்தாலும், கடலோர மாவட்டங்களில் நல்ல மழை இருக்கும். சென்னையில் நாளை முதல் மூன்று நாளுக்கு மிதமான மழை பெய்யும். தமிழகம் மற்றும் புதுவை மீனவர்கள் வரும் 15ஆம் தேதி வரை கடலுக்குச் செல்ல வேண்டாம்” என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
**தனுஷ்கோடிக்குத் தடை**
கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இன்று மாலை 5 மணியிலிருந்து தனுஷ்கோடிக்குச் செல்ல அனுமதி கிடையாது என்று கூறியுள்ளார் ராமநாதபுரம் ஆட்சியர் வீரராகவ ராவ். “காற்றின் வேகத்தைப் பொறுத்து பாம்பன் பாலத்தில் போக்குவரத்துக்கு அனுமதிக்கலாமா என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்திய கடலோரக் காவல் படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். கடற்பரப்பில் 2 ஹெலிகாப்டர்கள் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
**புதுச்சேரி**
கஜா புயலை எதிர்கொள்ளத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் புதுச்சேரி அரசு மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார் அம்மாநில முதல்வர் நாராயணசாமி.
குடிசைகளில் வாழும் மக்களைப் பள்ளிகள், சமுதாய நலக்கூடங்கள் உள்ளிட்டவற்றில் பாதுகாப்பாகத் தங்க வைக்கவும், முறையான குடிநீர் கிடைக்கவும் ஏற்பாடுகள் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கிராமம், நகரம் எதுவாக இருந்தாலும் மின்சாரம் தடைபட்டால் என்ஜின்கள் மூலமாகத் தண்ணீரை ஏற்றி மக்களுக்கு விநியோகிக்கவும், வெள்ளம் வந்தால் தண்ணீரை வெளியேற்றவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார். கஜா புயலினால், நாளை காரைக்கால் மாவட்டப் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவித்துள்ளது புதுச்சேரி அரசு.�,