போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளனர் தொழிற்சங்கத்தினர்.
தீபாவளி பண்டிகைக்கு முன்பணம், நிலுவைத் தொகை, ஒழுங்கு நடவடிக்கை ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசுப் போக்குவரத்து தொழிலாளர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்த நிலையில் 3ஆவது கட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை நேற்று முன்தினம்(அக்டோபர் 31) சென்னை தேனாம்பேட்டையில் தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. இதில் தொ.மு.ச., ஏ.ஐ.டி.யூ.சி, சி.ஐ.டி.யூ., எச்.எம்.எஸ்., பாட்டாளி தொழிற்சங்கம் உட்பட 14 தொழிற்சங்கங்கள் கலந்து கொண்டன.
இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும், அது குறித்த அறிவிப்பை நவம்பர் 2ஆம் தேதியன்று அறிவிக்கவிருப்பதாகவும் கூறின தொழிற்சங்க அமைப்புகள்.
இந்நிலையில், சென்னை பல்லவன் இல்லத்தில் இன்று (நவம்பர் 2) தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டும், தீபாவளிக்கு சிறப்புப் பேருந்துகளை இயக்க வேண்டிய அவசியம் இருப்பதாலும், போராட்டத்தை ஒத்திவைப்பதாக இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தீபாவளி பண்டிகைக்குப் பிறகு, தங்களது கோரிக்கை குறித்து அரசு தீவிரமாகப் பரிசீலிக்கும் என்ற நம்பிக்கையில் இருப்பதாகத் தெரிவித்தனர் தொழிற்சங்கத்தினர்.
அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் முன்னரே அறிவித்தபடி, போக்குவரத்து ஊழியர்களின் வங்கிக் கணக்கில் தீபாவளி முன்பணம் இன்று வரவு வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
**சிறப்புப் பேருந்துகள்**
தீபாவளிக்காக, தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு நான்கு நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளதால், இன்று முதலே மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல ஆரம்பித்துவிட்டனர்.
சென்னையிலிருந்து வெளியூர்களுக்குச் செல்வதற்காக 21,000 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழகப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. சென்னை கோயம்பேடு, பூந்தமல்லி, தாம்பரம், கே.கே.நகர் மற்றும் மாதவரம் பகுதியிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நவம்பர் 3ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது. இதற்காக, சென்னை கோயம்பேடு உட்பட 30 இடங்களில் முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆம்னி பேருந்துகளில் அதிகக் கட்டணம் வசூலித்தால் 18004256151 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்று தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.�,