சின்னத்திரையில் ஒளிபரப்பான காமெடி ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றின் மூலம் அறிமுகமாகி வெள்ளித்திரையில் தனக்கெனத் தடம் பதித்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். ‘கனா’ திரைப்படத்தைத் தொடர்ந்து அவர் தயாரித்துள்ள இரண்டாவது படம் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’. தமிழின் புகழ்பெற்ற யூடியூப் சானல் பிரபலங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ரியோ ராஜ் ஹீரோவாக அறிமுகமாகிறார்.
அனாதை இல்லத்தில் வளர்ந்த அரவிந்த், தனக்கு வேலை கிடைத்ததும் தன்னுடன் வளர்ந்த ரியோவையும் விக்னேஷ்காந்தையும் உடன் அழைத்து வந்துவிடுகிறார்.
யூடியூப் சானல் வைத்திருக்கும் ரியோவும் விக்னேஷ்காந்தும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் கேலியும் கிண்டலும் என ஜாலியான வாழ்க்கை வாழ்பவர்கள். ஒரு முறை தங்கள் சானலுக்காக ‘பிராங்க் ஷோ’ நடத்தும்போது, முக்கியப் பிரமுகரான ராதா ரவியையும் ஊடகவியலாளரான ஷெரினையும் பிரபல மால் ஒன்றின் மத்தியில் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டுகிறார்கள்.
அவர்களின் தைரியத்தையும், விளையாட்டாய் அவர்கள் கூறும் ஆழமான அர்த்தம் பொதிந்த வார்த்தைகளையும் கண்ட ராதா ரவி, அவர்களை அழைத்து அவர்கள் கேட்கும் பணத்தைத் தருவதாகவும், அதற்காக அவர்கள் மூன்று டாஸ்க்குகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் கூறுகிறார். என்ன டாஸ்க்குகள் அவை, ராதா ரவி இந்த டாஸ்க்குகளை அவர்களைச் செய்யச் சொல்வதன் பின்னணி என்ன, ரியோவும் விக்னேஷும் அந்தக் கடினமான பரீட்சைகளில் வென்று பணத்தைப் பெற்றார்களா என்ற கேள்விகளுக்கு விடைதருவதாக ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ திரைப்படத்தின் திரைக்கதை விரிகிறது.
படக் குழுவினர் தங்களுக்குப் பழக்கப்பட்ட களமான ஊடகம், இணையதளம் ஆகியவற்றை மையமாக வைத்து எடுத்துள்ளதால், படம் சரளமாக, இயல்பாக நகர்கிறது. வழக்கமான அவர்கள் நிகழ்ச்சிகள் போன்றே கலாய்த்து எடுக்கிறார்கள்.
ராதா ரவி அந்த மூன்று டாஸ்க்குகளை ஏன் அவர்களிடம் செய்யச் சொல்கிறார் என்பதன் பின்னணிதான் கதையின் மையக்கரு. அதற்கு இன்னும் வலுவூட்டியிருக்கலாம். கதாநாயகியின் நிஜ அடையாளத்தை மறைத்து வைத்திருப்பதன் காரணம் கதைக்கு எந்த விதத்திலும் வலு சேர்க்கவில்லை. நம்பும்படியாகவும் இல்லை.
ஊழலால் ஊறிப்போன அரசியல்வாதியாக நாஞ்சில் சம்பத். அவர் வரும் காட்சிகளில் திரையரங்கில் விசில் பறக்கிறது. ‘ஒரு மாநிலத்தில் இரண்டு முதல்வர் இருக்கும்போது, ஒரு தொகுதியில் இரண்டு எம்.எல்.ஏ.க்கள் இருக்கக் கூடாதா’ என்பதுபோல அவருடைய அரசியல் நையாண்டி வசனங்கள் அரங்கத்தை சிரிப்பலையில் ஆழ்த்துகின்றன. யு.கே.நகர் தேர்தல், மக்கள் என்றால் யாரு என அவர் தரும் விளக்கம் எல்லாம் ரசிக்கும்படியாக உள்ளன. ஓட்டு எண்ணுபவர்களுக்கே பணம் கொடுத்தேன் என்று அவர் கூறுவதும், மனநலம் பாதிப்படைந்த ஒருவரை எம்.எல்.ஏ. ஆக்குவதும் ரொம்பவே ஓவர்.
நடிகர் விக்னேஷ்காந்த், தனது திறமையாலும் கடின உழைப்பாலும் உயர்ந்துவந்தவர். சாதனை புரிய உருவமோ நிறமோ தடை இல்லை என்பதை உணர வைத்துப் பலருக்கும் முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர். அவரது நண்பர்கள் கூட்டம் இணைந்து ஒரு படத்தை எடுக்கும் போதும், அவர் உருவத்தைக் கேலி செய்து காமெடி என்ற பெயரில் புண்படுத்தியிருப்பது கசப்பை ஏற்படுத்துகிறது.
படத்தின் கதாநாயகன் ரியோராஜ் டைமிங் காமெடி, கலாய் என அவரது இயல்பான குணாதிசயங்களுடன் ரசிக்க வைக்கிறார். ஆனால் காதல், சண்டை, சென்டிமென்ட் காட்சிகளில் அசத்தலான நடிப்பு அவரை விட்டுச் சற்று தள்ளியே நிற்கிறது.
விக்னேஷ்காந்த் வழக்கம்போல நாயகனின் நண்பன், ஆனால், வெறும் நண்பனாக இல்லாமல் இரண்டாம் கதாநாயகனாகப் பயணிக்கிறார். பல இடங்களில் வெளுத்துவாங்குகிறார். எப்படிப் பிரபலமாவது என கற்பனை செய்யும் காட்சிகளில் அனைவரையும் நக்கலடித்துச் சிரிக்கவைக்கிறார்கள்.
கதாநாயகி ஷெரினுக்குப் படத்தில் பெரிதாக வேலை இல்லை. அவரது பாத்திரமே கதைக்குப் பெரிதாகத் தேவையில்லை. மிகப் பெரிய ஆறுதல், படத்தில் டூயட் இல்லை என்பதுதான். அதையும் அவர்களே கலாய்த்துவிட்டார்கள்.
அரவிந்த், ராதாரவி, மயில்சாமி, விவேக் பிரசன்னா போன்றோர் தங்களது யதார்த்தமான நடிப்பின் மூலமாக படத்தை ஒரு படி மேலே தூக்கி நிறுத்துகிறார்கள். அரவிந்த் பல காட்சிகளில் அழவைக்கிறார்.
ராதா ரவி, கடினமான காட்சிகளையும் மிக எளிதாகக் கையாண்டு தன் திரை அனுபவத்தை உணர்த்திப் பாராட்டவைக்கிறார்.
ஷபீரின் இசையில் பாடல்கள் ரசிக்கவைக்கின்றன. யு.கே. செந்தில்குமாரின் ஒளிப்பதிவு பாராட்டவைக்கிறது. ஃபென்னி ஒலிபர் படத்தொகுப்பு செய்துள்ளார்.
அறிமுக இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலின் திறமை படத்தின் இறுதி இருபது நிமிடங்களில் தெரிகிறது. படத்தில் வரும் யதார்த்தத்தை மீறிய சில காட்சிகளைத் தவிர்த்திருக்கலாம். கிளைமாக்ஸில் கூறியிருக்கும் மெசேஜும் அதனைக் காட்சிப்படுத்தியிருக்கும் விதமும் எழுந்து நின்று கைதட்ட வைக்கின்றன. அதில் செலுத்தியிருக்கும் கவனத்தைப் படம் முழுவதிலும் செலுத்தியிருந்தால் சிறந்த படங்களின் வரிசையில் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’வும் சேர்ந்திருக்கும்.
**
மேலும் படிக்க
**
**[டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கலைப்பு- ஸ்டாலினை குறிவைக்கும் வருமான வரித்துறை!](https://minnambalam.com/k/2019/06/14/65)**
**[தினகரன் தளபதிக்கு எடப்பாடி தூது: ஜெயக்குமார் எதிர்ப்பு!](https://minnambalam.com/k/2019/06/14/51)**
**[அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?](https://minnambalam.com/k/2019/06/13/22)**
**[மூடப்படும் அருவிகள்: கேரளத்தில் பண மழை!](https://minnambalam.com/k/2019/06/14/20)**
**[பாக்கியராஜ் அணிக்கு விஜயகாந்த் ஆதரவு!](https://minnambalam.com/k/2019/06/13/44)**
�,”