திருவிழாவுக்காக தேர்தலை மாற்ற முடியாது: தேர்தல் ஆணையம்!

Published On:

| By Balaji

மதுரையில் தேர்தல் தேதியை மாற்றுவதற்கான சாத்தியக் கூறுகள் இல்லையென்றும், துணை ராணுவ வீரர்களின் உதவியோடு தேர்தலை நடத்த முடியும் என்றும் தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கறிஞர் பார்த்தசாரதி என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதில், மதுரையில் தேர்தல் அன்று சித்திரைத் திருவிழா நடைபெறவுள்ளது. எனவே, மதுரையில் தேர்தலைத் தள்ளி வைக்க வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த வழக்கைக் கிருபாகரன், எஸ்.எஸ். சுந்தர் அமர்வு விசாரித்து வருகிறது. முன்னதாக நடந்த விசாரணையின்போது, தேர்தலை ஒத்தி வைப்பது குறித்துத் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று(மார்ச் 14) மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.

“மதுரையில் சித்திரைத் திருவிழாவுக்காக தேர்தல் தேதியை மாற்ற முடியாது. வாக்குப்பதிவு நேரத்தை வேண்டுமானால் 2 மணி நேரம் நீட்டிக்கிறோம். பாதுகாப்பிற்காக அண்டை மாநிலத்திலிருந்து போலீசார்களை வரவழைத்துத் தேர்தலை நடத்துவோம். மதுரையில் மட்டும் தேர்தலை ஒத்திவைத்தால் பிற இடங்களில் விளைவுகளை ஏற்படுத்தும்” என தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, பல லட்சம் பேர் கூடும் கோயில் திருவிழாவைக் கவனத்தில் கொள்ளாமல் காலை 6 மணிக்கு வாக்குப்பதிவை நடத்த முடிவெடுத்தது எப்படி, விழாக் காலங்களில் தேர்தல் நடத்தினால் வாக்களிக்க மக்கள் வரமாட்டார்கள் என்று நீதிபதிகள் கூறினார்.

மதுரை தேரோடும் வீதியில் மட்டும் 51 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்த சூழ்நிலையில், அந்த 51 வாக்குச்சாவடிகளில் மக்கள் எப்படி வாக்களிப்பர். பொதுமக்கள் மட்டுமின்றி அரசு அதிகாரிகளும் திருவிழாவுக்காக ஊருக்குச் செல்வர் என்றனர் நீதிபதிகள்.

தேர்தல் ஆணையத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை. இதுகுறித்து நாளை பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும். தவறினால் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியை நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்றும் நீதிபதிகள் கூறினர்.

இதையடுத்து, வழக்கு விசாரணை நாளைக்கு(மார்ச் 15) ஒத்திவைக்கப்பட்டது.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share