திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது தொடர்பாகத் தலைமை தேர்தல் ஆணையம் வரும் 30ஆம் தேதிக்குள் பதிலளிக்கச் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் மறைவை அடுத்து திருவாரூர் தொகுதிக்கு வரும் ஜனவரி 28ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. திமுக சார்பில் பூண்டி கலைவாணனும், அமமுக. சார்பில் எஸ்.காமராஜும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர். இதனிடையே திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுவதாக கடந்த ஜனவரி 27ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.
இந்நிலையில், திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக திருமங்கலத்தை சேர்ந்த தாமோதரன் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்
இதில், அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தலை ரத்து செய்ய தலைமை தேர்தல் ஆணையருக்கு அதிகாரம் இல்லை. தேர்தலை ரத்து செய்ய மத்திய அரசுடன் ஆலோசனை நடத்திய பிறகே தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க முடியும். தற்போது, இடைத்தேர்தலை ரத்து செய்யப்பட்டது சட்டவிரோதமானது. எனவே தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு தடை விதிக்கவேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு இன்று (ஜனவரி 23) விசாரணைக்கு வந்த போது தேர்தல் ஆணையம் சார்பில், கஜா புயல் நிவாரணம் முழுமையாக வழங்கப்படாததால் தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், சசிதரன் ஆதிகேசவலு அமர்வு, இடைத்தேர்தலை ரத்து செய்வதற்கு முன்னர் மத்திய அரசிடம் தேர்தல் ஆணையம் ஆலோசித்ததா என்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. முன்னதாக, 18 தொகுதி இடைத்தேர்தல் குறித்து ஏப்ரல் 24ஆம் தேதிக்குள் முடிவு செய்யப்படும் என தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் பதில் அளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.�,