உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது தெரிவதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
*ரிசர்வ் வங்கி* இதுகுறித்து ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8 விழுக்காட்டை தாண்டியுள்ளது. இது பொருளாதார வளர்ச்சியை நோக்கி மீண்டும் இந்தியா திரும்பியிருப்பதையே உணர்த்துகிறது. 2017-18 நிதியாண்டின் முதல் காலாண்டில் 5.6 விழுக்காடு மட்டுமே மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வளர்ச்சி காணப்பட்டிருந்தது. இப்போது நடுத்தர நிறுவனங்கள் மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பியுள்ளன. நடுத்தர நிறுவனங்களுக்கான கடன் வழங்குதல் அதிகரித்துள்ளதே இதை உணர்த்துகிறது.
பெரு நிறுவனங்களின் கடன் பெறும் விகிதமும் 0.8 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இது 2016-17ஆம் நிதியாண்டில் -1.7 விழுக்காடாக இருந்தது. திறன் பயன்பாடு அதிகரித்திருப்பதும் பொருளாதாரம் வளர்ச்சி நிலையில் சென்று கொண்டிருக்கிறது என்பதற்கு மேலும் ஒரு உதாரணமாகும். முதலீட்டு நடவடிக்கைகள் அதிகரித்து வருவதும் இதில் முக்கியக் காரணமாகும். முதன்மை பொருட்களின் உற்பத்தி 2017 ஆகஸ்ட் முதல் வளர்ச்சி கண்டு வருகிறது. ஏப்ரல் 2017 முதல் இதன் ஆண்டு வளர்ச்சி விகிதம் 16.8 விழுக்காடாக உள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.�,