திருமாவளவன்: அரசியல் பாதை ஒரு ஸ்கேனிங் ரிப்போர்ட்

public

பள்ளிக்குச் செல்வதும், படிப்பதும், விளையாடுவதும் என எல்லோரையும்போலத்தான் அந்தச் சிறுவனும் வளர்ந்து வந்தார். இயல்பான ஒன்றாகவே பால்யம் பயணிக்க அத்தருணத்தில், தான் எதிர்கொண்ட சம்பவம் அச்சிறுவனுக்குள் பல கேள்விகளை உருவாக்கியது. ஒருநாள், நண்பர்களுடன் விளையாடும்போது சக நண்பனின் அணியை இவர் வெல்ல, தோற்ற நண்பர்களோ இவரை ‘கீழ்ச்சாதிப் பயலே’ என்று திட்டுகிறார்கள். அதுவரை நண்பர்களாக இருந்தவர்களை ஒரு தோல்வி, சாதியமாகப் பிரிக்கிறது. துவண்டுபோன சிறுவன் வீடு திரும்புகிறான். சமூக உணர்வுள்ள கூலி விவசாயியான தனது தந்தையிடம் கேட்கிறார்:

‘அப்பா சாதி என்றால் என்ன?’

‘பிறப்பின் அடிப்படையில் மனிதனை மனிதன் பிரிக்கும், எளியவர்களைச் சுரண்டும் ஒரு சதி’ என்றார் அப்பா.

‘சாதியை ஒழிக்கவே முடியாதா?’ என்கிறான் மகன்.

‘முடியும். சிறந்த கல்விகற்று, அதன்மூலம் உன் மக்களையும் மேம்படுத்த முயற்சி செய். அதற்கு இவரைப் படி’ என நம்பிக்கையூட்டி, தன் மகனுக்கு அண்ணல் அம்பேத்கரை அறிமுகம் செய்கிறார்.

அன்று பெரம்பலூர் மாவட்டம், அங்கனூர் எனும் குக்கிராமத்தில் பிறந்து அம்பேத்கரை படிக்கத் தொடங்கிய அச்சிறுவன்தான் பிற்பாடு, சாதி ஒழிப்புப் போராட்டக் களத்தில் தமிழகத்தில் தவிர்க்கமுடியாத சக்தியாக உயர்ந்துநிற்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்.இவர் பெயரை உச்சரிக்கும்போது, தலித் மக்களின் ஒரு பகுதியினர்

ஆர்ப்பரிக்கின்றனர்.‘தலித் என்றால் தள்ளி வை’ எனும் சாதிய சமூகத்தில் இருந்துதான் தனது பயணத்தைத் தொடங்கினார் திருமாவளவன். இன்று, அவரைத் தவிர்த்துவிட்டு சமகால அரசியல் இயங்காது. முறுக்கிய மீசை, கூரிய பார்வை, கம்பீரத் தோற்றம், மேடையில் ஏறி நின்றால் தெறிக்கும் வார்த்தைகள் என, இவரின் அடையாளத்தை தலித் மக்கள் கடந்தும் ஒரு பெருங்கூட்டம் நேசிக்கிறது. அரசுப் பணியாளராக வாழ்க்கையைத் தொடங்கி இன்று, பெரும் அரசியல் கட்சித் தலைவராக உயர்ந்திருக்கும் இவரின் வளர்ச்சிக்குப்பின்னே, கடந்துவந்த பாதை கடினமானது.

1962ம் ஆண்டு, ஆகஸ்ட் 17-ம் தேதி இராமசாமி-பெரியம்மாள் தம்பதிக்கு இரண்டாவது பிள்ளையாகப் பிறந்த திருமாவளவன் காலப்போக்கில், தன் அரசியல்கூறான தமிழ்த்தேசிய வழியில் தனது தந்தைக்கே தொல்காப்பியன் எனப் பெயர் சூட்டினார்.சமத்துவம் எனும் இலக்கை அடைய, தனது கல்லூரிகால பருவத்தில் இலங்கை வெளிக்கிடை சிறையில் தமிழ் அரசியல் கைதிகளான ஜெகன், குட்டிமணி, தங்கதுரை ஆகியோர் படுகொலை செய்யப்பட்டது, அன்றைக்கிருந்த சமகால தமிழ் இளைஞர்களைப் போலவே திருமாவளவனின் ரத்தநாளங்களையும் கொதிக்கச் செய்தன. சிறுவயதில் தான்கண்ட சாதியக் கொடுமைகளும், ஈழத்தில் தமிழர்கள்மீதான இனப்படுகொலையும் திருமாவளவனை தலித் விடுதலை, தமிழ்த் தேசியம் என்ற இரட்டை இலக்கை நோக்கி உந்தித் தள்ளியது. வளர்ச்சிப்போக்கில் 1982-ல் உருவான ‘பாரதிய தலித் பேந்தர்ஸ்’ இயக்கம், தமிழக அமைப்பாளர் வழக்கறிஞர் அ.மலைச்சாமிமூலம் அறிமுகமாகி, அவருடன் தலித் விடுதலைத் தளத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். அவர் மறைவுக்குப்பின், 1990 சனவரி 21 அன்று அந்த அமைப்பின் தலைவரானார்.

ஆக்ரோஷமும் துடிப்பும்கொண்ட திருமாவளவனை இயல்பிலேயே, அன்றைய காலகட்டத்தில் வட மாவட்ட முந்திரிக் காடுகளில் விரவியிருந்த எம்.எல். அரசியல் பற்றிக்கொண்டதில் ஆச்சரியமொன்றுமில்லை. தலித் பேந்தர்ஸ் இயக்கத்தை ‘விடுதலைச் சிறுத்தைக’ளாக மாற்றினார்.

திருமாவளவனின் இரண்டாவது அத்தியாயத்தின் நீண்டநெடிய டெஸ்ட் ஆட்டத்தில் இன்னிங்ஸ் இங்கிருந்துதான் தொடங்கியது. ஐந்து நாள் ஆட்டத்தை, ஐந்து ஐந்தாண்டு அரசியல் ஆட்டமாகப் புரிந்துகொண்டால் தோழர் திருமா, ‘தலைவர் திருமாவளவன்’ ஆன வரலாற்றை எளிதில் உள்வாங்கிக் கொள்ளலாம்.

1991-1996

இந்த காலகட்டத்தின் தொடக்கத்தில், தமிழக விடுதலையைக் கோட்பாடாகவைத்து கருவிவழி போராட்டத்தை இலக்காகக் கொண்டிருந்த தமிழரசனின் சகாவான வள்ளுவன், தடா பெரியசாமியின் நட்பு திருமாவளவனை தேர்தல் புறக்கணிப்பு அரசியலில் ஆர்வம்கொள்ளச் செய்தது. சாதி ஒழிப்பும், தமிழ்த் தேசியமும் என்ற தனது கொள்கையை வெல்ல ஒரு யூ.ஜி. தோழரைப்போல கிராமம் கிராமமாக பயணம் மேற்கொண்டார். அரசியல் வகுப்புகளை எடுத்தார். 1992ல் மேலூரில் நடந்த இரட்டைக் கொலை, 1997 மேலவளவில் நடந்த ஏழுபேர் கொலை என தலித் மக்களுக்கெதிரான, சாதி இந்துக்களின் தாக்குதல் அவரை தீவிர தலித் அரசியலின் பக்கம் தள்ளியது. ‘நாம் எந்த ஆயுதம் ஏந்த வேண்டும் என்பதை நம் எதிரிதான் தீர்மானிக்கிறான்’ எனும் மாவோ கூற்றுக்கேற்ப, சாதி இந்துக்களின் ஆதிக்கத்துக்கு எதிர்வினையாக முன்வைத்ததுதான் ‘அத்து மீறு-அடங்க மறு-திருப்பி அடி’ முழக்கம்.

1996-2001

‘நமக்கென்று ஒரு அமைப்பு, நமக்கென்று ஒரு கொள்கை, நமக்கென்று ஒரு களம்’ என்பதை முன்வைத்து இயங்க இது, தாரக மந்திரம்போல தலித் மக்களிடையே தீயாக பற்றிக்கொண்டது. திருமாவளவனின் எழுச்சியை ஒடுக்க நினைத்த முந்தைய ஜெயலலிதா அரசும், அதன்பின்னான கருணாநிதி அரசும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர்மீது வழக்குகள் தொடுத்து அடக்குமுறைகளை ஏவினர். பலர் கைது செய்யப்பட்டனர். தீவிர ஒடுக்குமுறை, கருக்கொண்ட நிலையிலேயே அமைப்பைச் சிதைத்துவிடும் என்ற சூழலில், மூப்பனார் அழைப்பின்மூலம் 1999ம் ஆண்டு தேர்தல் புறக்கணிப்பு அரசியலைக் கைவிட்டு தேர்தல் நீரோடையில் ஐக்கியமானார் திருமாவளவன். சிதம்பரம், பெரம்பலூர் எனும் இரண்டு நாடாளுமன்றத் தொகுதியில் மூப்பனாருடன் கை கோர்த்தது விடுதலைச் சிறுத்தைகள். தனது, தடய அறிவியல் துறை அரசுப் பணியை ராஜினாமா செய்துவிட்டு, சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு 2.25 இலட்சம் வாக்குகளைப் பெற்றார் திருமாவளவன். பெரம்பலூரில் சுமார் 1 இலட்சம் வாக்குகளையும் பெற்று விடுதலைச் சிறுத்தைகளை தனியொரு அரசியல் சக்தியாக முன்னிறுத்தினார் திருமாவளவன்.

2001-2006

தங்களது அடுத்தகட்ட முன்நகர்வுக்கு வலிமையான வழித்துணையாக திமுக இருக்குமெனக் கருதி, 2001 சட்டமன்றத் தேர்தலில் அதனுடன் கூட்டணி சேர்ந்தார். தமிழ்நாட்டில் 8, புதுவையில் 2 தொகுதிகளில் போட்டியிட்டு, தமிழகத்தில், கடலூர் மாவட்டத்திலுள்ள மங்களூரில் போட்டியிட்ட திருமாவளவன் வெற்றி பெற்றார். போட்டியிட்ட மற்ற அனைத்துத் தொகுதிகளிலும் கணிசமான வாக்குளைப்பெற்ற கையோடு, இதே காலகட்டத்தில் தங்களது பலத்தைக் காட்டும்விதமாக சேலத்தில் இந்துத்வா எதிர்ப்பு மாநாடு நடத்தினார். லட்சக்கணக்கில் தொண்டர்கள் கூடினர். 2004ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் பொதுத்தேர்தலின்போது, விடுதலைச் சிறுத்தைகள் மேற்கொண்ட முன்முயற்சியில் மக்கள் கூட்டணி என்ற மூன்றாவது அணி உருவாக்கப்பட்டது. அப்போது விடுதலைச் சிறுத்தைகள் தமிழகத்தில் 8 தொகுதிகளிலும், புதுச்சேரியிலும் போட்டியிட்டன. சிதம்பரம் தொகுதியில், சுமார் 2 இலட்சத்து 57 ஆயிரம் வாக்குகளைப் பெற்று, தமிழக அரசியலில் புறக்கணிக்க முடியாத சக்தியாக விடுதலைச் சிறுத்தைகளின் தலை நிமிர்ந்தது.

2006-2011

2006ம் ஆண்டு சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள், அதிமுக தலைமையிலான மக்கள் சனநாயக கூட்டணியில் இடம்பெற்று தமிழகத்தில் 9 இடங்களிலும் புதுச்சேரியில் 2 இடங்களிலும் போட்டியிட்டு, அவற்றில் மங்களூரில் கு.செல்வப்பெருந்தகை, காட்டுமன்னார்குடியில் து.இரவிக்குமார் எம்எல்ஏ ஆனார்கள். 1999-ல், 1.25 லட்சம் வாக்குகளிலும், 2004ல் 87 ஆயிரம் வாக்குகளிலும் இதே சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் பாமக எ.பொன்னுசாமியிடம் தோற்ற திருமாவளவன், 2009-ல் திமுக கூட்டணியில் இணைந்து அதே தொகுதியில் அவரை விட, 99,083 கூடுதல் வாக்குகள்பெற்று வெற்றிபெற்றார். ஈழப்போர் காத்திரமாக நடந்த காலகட்டத்தில், இலங்கைக்கு உதவிய காங்கிரசுடன் கூட்டணியில் இருந்தும் இந்த வெற்றியைப் பெற்றது அனைவரின் கவனத்தையும் திருமாவளவன்மீது திருப்பியது. இந்த நான்காவது ஐந்தாண்டில் முடிந்தவரை தலித் மக்களின் இன்னல்களை நாடாளுமன்ற, சட்டமன்ற அவைகளில் முன்வைத்தது வி.சி.

2011-2016

எதிரும் புதிருமாக இருந்த பாமக-வுடன் கூட்டணியில் இணைந்து திமுக, காங்கிரஸ் என ஒரு மெகா கூட்டணியோடு, 2011-ல் 10 சட்டமன்றத் தொகுதிகளில் நம்பிக்கையோடு களமிறங்கினார். ஆனால் திமுக, காங்கிரஸ் எதிர்ப்பு அலையில் விடுதலைச் சிறுத்தைகளும் சேர்ந்து அடித்துக்கொண்டு சென்றது.அந்த தேர்தலின் தோல்வியும், திமுகவுடனான உறவில் ஏற்பட்ட இடைவெளியும் இரு கட்சிகளுக்கு இடையில் கசப்பை உருவாக்க திருமாவளவன் நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின்னர் திமுக கூட்டணியை விட்டு வெளியேறினார். ‘தேர்தல் தோல்விகளால் எங்களுக்குப் பெரிய இழப்பொன்றுமில்லை’ என வெளியே சொல்லிக்கொண்டாலும், தேர்தல் பயணத்தில் பெற்ற வாக்கு விழுக்காடு விடுதலைச் சிறுத்தைகளின் எதிர்கால அரசியலையொட்டி ஆழமாக சிந்திக்கத் தூண்டுகிறது.

25 ஆண்டு அரசியல் பயணத்தில், சாதி இந்துக்களின் ஆதிக்கம் உள்ள அரசியல் களத்தில் தொடர்ந்து ஒரு தலித் கட்சி, தனது இருத்தலை தக்கவைத்துகொண்டு வந்ததே பெரிய விஷயம்தான். அடக்குமுறைக்கு எதிராக பருண்மையான தலித் திரட்டல் ஏற்பட்டு, தலித் இளைஞர்களிடம் ஒரு சக்தியாக இன்று விடுதலைச் சிறுத்தைகள் வளர்ந்து நின்றாலும், ஒட்டுமொத்த தலித் மக்களின் (பட்டியலின சாதியினர்) பிரதிநிதியாக தம்மை வளர்த்துக்கொள்வதும், வடகிழக்கு மாவட்டங்களைக் கடந்து, தமிழகம் முழுக்க கட்சி கட்டமைப்பை பெருக்குவதும், குறைந்தது மொத்தமுள்ள தனித் தொகுதிகளில் செல்வாக்கு செலுத்துமளவு கட்சியைக் கட்டுவதும், தனிச் சின்னத்தை பெறுவதும், சாதி இந்துக்களும் தங்களை ஓர் அரசியல் சக்தியாக ஏற்றுக்கொள்ள கட்சியை அனைத்துப் பிரிவினருடனும் கொண்டுசென்று வாக்குவங்கியைப் பெருக்குவதும் என பெரும் சவால்கள் திருமா.வின் முன்னே நிற்கின்றன. இதில் வெல்ல திருமாவளவன் ஆடிய சதுரங்க ஆட்டத்தின் ஒரு பாசிட்டிவ் காய் நகர்த்தல்தான் ‘மக்கள் நலக் கூட்டணி’. ‘தனித்த கட்சி ஆட்சி சர்வாதிகாரம். கூட்டணிக் கட்சி ஆட்சியே ஜனநாயகம்’ என்று, முதலில் மார்க்சிஸ்ட் தோழர் ஜி.ராமகிருஷ்ணனைச் சந்தித்தார். அரங்கக் கூட்டம் நடத்தினார். அதன்பின் சிபிஐ, மதிமுக, தேமுதிக, தமாக வரை வந்துள்ளது.

‘கடந்த காலங்களில் மாறிமாறி திராவிடக் கட்சிகளின்மீது பயணம் செய்தது, வன்முறைக் கட்சி என்ற முத்திரை, ரவிக்குமாரின் பெரியார் விமர்சனத்தின்போது அழுத்தமான கண்டனத்தைப் பதிவு செய்யாதது, ஈழப்போர் காலகட்டத்தில் காங்கிரஸுடன் கூட்டு, திமுகமீது வீசப்பட்ட கணைகளை தான் ஏந்தித் தாங்கியது என, திருமாவளவனின்மீதான விமர்சனங்கள் பரவலாக முன்வைக்கப்பட்டாலும் ‘தலித் விடுதலை, தமிழ்த் தேசிய கொள்கையில் எங்கேயும் நான் சமரசம் செய்துகொண்டதில்லை’ என சொல்லிவிட்டு அதைக் கடந்து செல்கிறார். தமிழ்ப்பெயர் சூட்டல், தமிழ் பாதுகாப்பு இயக்கம் என அவ்வப்போது அனைத்துப் பிரிவு மக்களுக்கான அரசியல் பேசி, இதில் இடையிடையே சறுக்கினாலும் அதன் முயற்சிகளை நிறுத்துவதில்லை.

‘மாநிலம் முழுக்க கட்சிக் கிளைகளை உருவாக்குவது, உறுப்பினர்கள் சேர்ப்பது, தலைமை அலுவலகம் உள்ளிட்ட கட்சி அலுவலகங்கள் உருவாக்குவது, கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்துவது உள்ளிட்ட பணிகளை ஒருபக்கம் துரிதப்படுத்திவரும் அதேநேரம், கட்சிக்கு நாற்பத்தைந்து லட்சம் உறுப்பினர்களைச் சேர்க்கும் பணியில் பத்து ரூபாய் கட்டணம் செலுத்தி சுமார், பதினேழு லட்சம் பேரை இணைத்துள்ளனர். இறுதியாக, கட்சிக்கென வெளிச்சம் தொலைக்காட்சி ஒன்றையும் உருவாக்கி கட்சி உட்கட்டமைப்பை பாய்ச்சலோடு வலுவாக்கி வருகின்றனர். உத்தரப்பிரதேசம் போன்று தமிழகத்திலும் தலித் முதல்வர் ஆள வேண்டும் என்று. அதேவேளையில், வெளியே கூட்டணி தொகுதிப் பங்கீடுமூலம் அரசியல் அங்கீகாரத்தைப் பெரும் பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர். திமுக, அதிமுக-வுக்கு மாற்றாக மக்கள் நலக் கூட்டணியின்மூலம் 25 தொகுதிகள் பெற்று அதில், பொதுத் தொகுதியிலும் வேட்பாளரை நிறுத்துவதன்மூலமும் மைய நீரோட்டத்தில் இணைந்துள்ளனர். பொதுச் சமூகம், ‘பொதுக் கட்சியாக’ விடுதலைச் சிறுத்தைகளைப் பார்க்கும் காலம் நெருங்கியுள்ளது.

இப்படியான தனது நீண்டநெடிய அரசியல் டெஸ்ட் இன்னிங்சை வெற்றியுமில்லாமல், தோல்வியுமில்லாமல் டிராவில் முடித்துள்ளார் திருமாவளவன். இது ஒரு பாதுகாப்பான முடிவென்றாலும், தமது ஆதர்ச அணியை வெற்றியில் முடிக்கவைக்கும் அணித் தலைவரையே ரசிகர்கள் விரும்புவார்கள். ‘கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம். எளிய மனிதனுக்கும் அதிகாரம்’ எனும் தங்கள் கோட்பாட்டு இலக்கை வெல்ல திருமாவளவன் பயணிக்கவேண்டிய தூரம் இன்னும் இருக்கிறது.

-சே.த.இளங்கோவன்�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *