திருமணப்பதிவுக்கு மணமக்களின் மருத்துவ தகுதிச் சான்று கட்டாயம் என அறிவிக்கக் கோரிய மனுவுக்கு ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டுமென மத்திய, மாநில அரசுகளுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. .
தமிழகத்தில் 2009ஆம் ஆண்டு திருமண பதிவுச் சட்டம் கொண்டு வரப்பட்ட போதும், திருமணப் பதிவு கட்டாயமாக்கப்படவில்லை என்பதால், திருமணப் பதிவையும், மணமக்களின் மருத்துவத் தகுதிச் சான்றையும் கட்டாயமாக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த சூர்யா வெற்றிகொண்டான் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுவைத் தாக்கல் செய்தார்
இந்த மனு, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, திருமண பதிவுச் சட்டம் இருந்த போதும், பதிவு செய்யப்படாத திருமணங்கள் செல்லாது எனக் கூறப்படவில்லை. அதனால், அனைத்துத் திருமணங்களையும் பதிவு செய்வதைக் கட்டாயமாக்கும் வகையில் திட்டம் வகுக்க வேண்டும். மணமக்களின் ஆரோக்கியத்தைப் பரஸ்பரம் தெரிந்து கொள்ளும் வகையில் திருமண பதிவுக்கு, இருவரின் மருத்துவ தகுதிச் சான்றையும் கட்டாயமாக்க வேண்டும் என அரசுக்கு மனு அளித்தும் எந்தப் பதிலும் இல்லை என, மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக ஒரு வாரத்தில் பதில் அளிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளனர்.�,