திராவிடம் சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்: கனிமொழி

public

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை ஒட்டி, இன்றைய தலைமுறையினருக்கான திராவிடம்,அதாவது ‘திராவிடம் 2. O’ என்ற நிகழ்வு டிசம்பர் 3 ஆம் தேதி சென்னை பெரியார் திடல் மணியம்மை அரங்கத்தில் நடைபெற்றது. இதில் சிறப்புப் பேச்சாளராக திமுக மகளிரணிச் செயலாளரும், மாநிலங்களவை திமுக குழுத் தலைவருமான கனிமொழி தலைமையுரை ஆற்றினார்.

இதுவரை திராவிட மேடைகளில் திராவிடம் பற்றிய சுயவிமர்சனப் பேச்சுகள் உள் கூட்டங்களில் மட்டுமே எதிரொலித்த நிலையில், மிக தைரியமாக திராவிட இயக்கம் தன்னை சுய பரிசோதனை செய்ய வேண்டிய கட்டத்தில் இருக்கிறது என்று பேசியிருக்கிறார் கனிமொழி. அதுவும் பெரியார் திடலில் நின்று இதைப் பேசியிருக்கிறார்.

கனிமொழியின் பேச்சு திராவிட இயக்க வட்டாரத்தில் ஆக்கபூர்வமான விவாதமாகியிருக்கிறது. கனிமொழியை இப்படி பேச வைத்தது தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் ஆணவக் கொலைகளும், அதற்கு திராவிட இயக்கத்தினரின் கண்டுகொள்ளாமையுமே என்கிறார்கள் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள்.

கனிமொழி பேசியது என்ன?

“நாம் யார் நாம் கடந்து வந்த பாதை என்ன? திராவிடம் இல்லையென்றால் நாம் எங்கே நின்றிருப்போம் என்று விழிப்புணர்வு ஊட்டும் பணியை 2. O செய்திருக்கிறது’” என்றவர் கலைஞருடனான தனது சில அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். பின் ஆணவக் கொலைகள் பற்றி பேச ஆரம்பித்தார்.

**ஆணவக் கொலைகளின் அரசியல்**

“இன்று நாம் ஆணவக் கொலைகளைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். இதுபற்றி பேசுவதே கேவலமான அவமானப்பட வேண்டிய விஷயம், பெரியார் மண்னில் நின்று இன்னும் ஆணவக் கொலைகள் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். அதன் பின்னால் ஒரு அரசியல் இருக்கிறது. ஆணாதிக்கம் இருக்கிறது, ஜாதி இருக்கிறது. எல்லாம் உண்மை. அதன் பின்னால் இருக்கும் அரசியலை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்த ஐந்து வருடத்தில் நாடு முழுதும் ஆணவக் கொலைகள் அதிகரித்திருக்கின்றன. தமிழ்நாட்டில் 187 ஆணவப் படுகொலைகள் நடந்திருக்கின்றன. அதில் பாதிப் பேருக்கு மேல் பெண்கள். இதற்கு என்ன காரணம்? இந்த ஆட்சி இது பற்றியெல்லாம் கவலைப்படாத, எதிர்த்துப் போராடும் மனப்பான்மையை ஊக்குவிக்காத ஆட்சியாக இருக்கிறது. மத்திய ஆட்சியும் இதையெல்லாம் தனது அரசியலுக்கு பயன்படுத்தும் அரசாக இருக்கிறது.

உன் விடுதலைக்கு எதுவெல்லாம் தடையாக இருக்கிறதோ, அது உன் கர்ப்பப் பையாக இருந்தாலும் அதை தூக்கி எறிந்துவிட்டு வா என்று சொன்ன ஒரே தலைவர் பெரியார்தான்.

**பெரியார் சிலைக்கும் உயிர் இருக்கிறது**

ஒரு சிலைக்கு 3000 கோடி. தமிழ்நாட்டில் கஜா புயலால் அடிபட்டு வாழத் துடிப்பவர்களுக்கு 300 கோடி என்று ட்விட் செய்திருந்தேன். அதற்கு பிஜேபியில இருக்கிற பெரியவர் ஒருத்தர், பதில் போட்டிருந்தார். அவர் போடவில்லை. அவரோட அட்மின் போட்டிருப்பார். ‘பெரியார் சிலை உயிரற்ற சிலை இல்லையா’ என்று கேட்டிருந்தார். அதற்கு ஒரு தோழர் அழகாக பதில் போட்டிருந்தார். ‘அது உயிரற்ற சிலை இல்லை என்பதால்தான் அதைப் பார்த்து இன்னும் நீ பதறிக்கொண்டிருக்கிறாய் ‘ என்று. கையை வச்சிப் பார்த்தீங்கள்ல… அப்போ தெரிஞ்சதா… உயிர் இருந்ததா இல்லையானு? இந்த உணர்வை நாம் தக்க வைத்துக்கொள்ள வேண்டும்” என்று ஹெச்.ராஜாவுக்கு பதிலடி கொடுத்த கனிமொழி தொடர்ந்து பேசினார்.

**கேள்வி கேட்பது சித்தர் மரபு**

“பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு மிக முக்கியமாக ஊடகத் துறையினரோ, சிந்தனையாளர்களோ அவர்களை எதிர்த்துக் கேள்விக் கேடகக் கூடாத நிலை உண்டாகிக்கொண்டிருக்கிறது. மதம், ஜாதி பற்றி தொடர்ந்து நாம் விவாதித்துக்கொண்டிருக்கிறோம். ஜாதியை எதிர்த்துக் கேள்வி கேட்டதும் சித்தர் பாடல்கள்தான். வேதங்களை எதிர்த்துக் கேள்வி கேட்டதும் சித்தர் பாடல்கள்தான். அந்த மரபு நமக்கு தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது.

ஆனால், இப்போது இன்று என்ன சூழல்? யாரும் எந்த மதத்தையும் கேள்வி கேட்க முடியாது. அதற்கான உரையாடலே இருக்கக் கூடாது. எனக்கு ஒரு சந்தேகம். ஒரு கேள்வி. உன்னிடம் சரியான பதில் இருந்தால் கூறு. என் கேள்விக்கு சரியான பதில் உன்னிடம் இல்லையென்றால் எனக்கான கேள்வி என்னிடமே இருக்கட்டும் உனக்கான பதில் உன்னிடமே இருக்கட்டும். ஆனால் அதற்கான வாய்ப்பே கொடுக்காமல் கேள்வி கேட்டாலே நான் உடைந்துபோய்விடுவேன், என்ற சூழல் என்ன மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியும்?

**நாம் பயந்துவிட்டோமா?**

உரையாடலுக்குக்கூட நாம் தயாராக இல்லை. மதத்தைப் பற்றி உரையாடல் நடத்த முடியாது., சாதியைப் பற்றி உரையாடல் நடத்த முடியாது. நடத்தினால் தேசவிரோதி, அர்பன் நக்சல். கேட்க நல்லா இருக்கு. பெருமையா இருக்கு. ஆனா உரையாடல் நடத்த முடியாத நிலையை நோக்கி சூழல் சென்றுகொண்டிருக்கிறது. ஆனால் பல நேரங்களில் இதைப் பார்த்து நாம் பயந்து ஒடுங்கிவிடுகிறோமா என்ற கேள்வியும் எனக்குள் பலமுறை எழுகிறது” என்று சொல்லிதான் தனது சுய விமர்சனப் பேச்சைத் தொடங்குகிறார் கனிமொழி.

“ஆணவக் கொலை பற்றி கேள்வி கேட்க வேண்டும். நாம் கேட்கவில்லை என்றால் வேறு யார் கேட்க முடியும்? இந்தச் சமூகத்தை இதுபோல கேள்வி கேட்டு மாற்றிக் காண்பித்த இயக்கம்தான் திராவிட இயக்கம்.

**போர் என்றால் காயம்படும்**

நாம் யாருக்கும் எதிரானவர்கள் இல்லை, யாரையும் காயப்படுத்த வேண்டும் என்று பேசுவதில்லை. ஆனால் சில நேரம் பேச்சு காயப்படுத்தும். நீ என்னை எத்தனை காலமாக காயப்படுத்தியிருக்கிறாய்? நீ தீட்டு என்கிறபோது, நீ தாழ்ந்த சாதிக்காரன் என்கிறபோது நான் காயப்பட்டிருக்கிறேன். தொடர்ந்து காயப்படுத்தப்படுகிறேன். இன்றும் இரட்டைக் குவளை முறை இருக்கிறது. நாம் அதற்காக யாரைப் பார்த்தும் கோபப்படுவதில்லை. ஆனால், இதை எதிர்த்துக் கேள்வி கேட்டு அது காயப்படுத்துகிறது என்றால் காயப்படுத்தட்டும். ஏனென்றால் இது போர்க்களம். பரம்பரையாக நடந்து கொண்டிருக்கும் போர். போர்க் களத்தில் காயம் உனக்கும் படும், எனக்கும்படும். ஆனால் இதையெல்லாம் தாண்டி பெரியாரைப் போல், கலைஞரைப் போல் வெற்றிகள் கண்டு நாம் வரலாற்றில் நிற்க வேண்டும்.

**நாம் மிதிக்க கீழே சிலர்**

நமக்கு ஒரு சுயபரிசோதனை செய்ய வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். பிராமணியம் பற்றிப் பேச வேண்டும். அது கருத்தியல். ஆனால் இன்றைய காலகட்டத்தில் அதைப் பல பேர் உள்வாங்கிக்கொள்ள ஆரம்பித்திருக்கிறோம். கோயிலுக்குள் விட மறுக்கப்பட்டதற்காகத் தனியாகக் கோயில் கட்டிக்கொண்டவர்கள் இன்று அந்த கோயிலுக்குள் பிராமணன் வந்து பூஜை செய்ய வேண்டும் என்று தவம் கிடந்துகொண்டிருக்கிறார்கள். ஊர் பெரியவர்களை வைத்துத் திருமணம் நடத்திக்கொள்வோம் என்று சொன்னவர்கள் எல்லாம், இன்று பிராமணன் வந்து திருமணம் நடத்தி வைக்க வேண்டும் என்று ஏங்கிக்கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்.

திராவிட இயக்கத்தின் சுயமரியாதைத் திருமணங்கள் குறைந்துகொண்டேவருகின்றன. நாம் மேல்சாதிக்குப் போகணுமென்றால் அந்தத் திருமண முறையை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நாம் நினைக்க ஆரம்பித்துவிட்டோம். நாம் மேலே போக வேண்டும் என்று நினைக்கிறபோது, நாம் கீழே மிதிக்கச் சிலர் இருக்க வேண்டுமென்று நினைக்கிறோம்.

நாம் உயர்ந்துவந்துவிட்டோம். நம்மை யாராவது தாழ்ந்த சாதி என்றால் கோபம் வருகிறது. ஆனால், உனக்குக் கீழே சிலர் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறாய். நீயும் ரிசர்வேஷன்தான். அவனும் ரிசர்வேஷன்தான். ஆனால் அவனுக்கு ரிசர்வேஷன் கொடுக்கறப்ப உனக்கு வலிக்குது.

உன்னை கோயிலுக்குள் விட பெரியார் போராட வேண்டும். ஆனால் நீ வந்து சிலரை கோயிலுக்குள் விடக் கூடாது எனத் தடுப்பாய். இதுதான் நாம் அவர்களாக மாறிக்கொண்டிருக்கிறோம் என்ற அடையாளம். நாம் நம்மை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டிய இடத்தில் இருக்கிறோம். இல்லையென்றால் நாம் இருந்த இடத்துக்கே சென்று சேரக் கூடிய அபாயத்துக்கு ஆளாகிவிடுவோம்” என்று பேசி முடித்தார் கனிமொழி எம்.பி.

கனிமொழியின் இப்பேச்சு பல பெரியாரிய இயக்கங்கள் தங்கள் உள்ளரங்கங்களில் பேசிக் கொண்டிருப்பவைதான். ஆனால் திராவிடப் பொது மேடைகளில் இவை முன் வைக்கப்பட்டதில்லை. கனிமொழியின் இந்த துணிச்சலான சுய விமர்சனப் பேச்சை, சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் ஆக்கபூர்வமான சுய விமர்சனத்தைச் செய்துகொள்ளவில்லை என்றால் திராவிடத்தின் திசை மாறும்!

**-ஆரா**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *