மக்களவைத் தேர்தல், சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வேட்பாளர் நேர்காணல் தேதியை திமுக அறிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, சிபிஎம், சிபிஐ, விசிக, கொமதேக, ஐஜேக ஆகியவை இடம்பெற்றுள்ளன. இக்கட்சிகளுக்களுடனான தொகுதிப் பங்கீடை முடித்துள்ள திமுக, அடுத்தக்கட்ட பணிகளை துவங்கிவிட்டது. எந்தெந்த தொகுதிகளை பங்கிட்டுக் கொள்வது என்பது குறித்து திமுகவுடன் கூட்டணிக் கட்சிகள் இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன. இந்த நிலையில் திமுக சார்பில் போட்டியிடுவதற்கான வேட்பாளர் நேர்காணல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் நேற்று (மார்ச் 6) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்பி தலைமைக் கழகத்திற்கு விண்ணப்பம் தந்துள்ளவர்களை கழகத் தலைவர் ஸ்டாலின், வரும் 10.03.2019 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் சென்னை அண்ணா அறிவாலயத்திலுள்ள கழக அலுவலகத்தில் நேர்காணல் வாயிலாக சந்தித்து தொகுதி நிலவரம்-வெற்றி வாய்ப்புகள் குறித்து ஆராய்ந்து அறிந்திட இருக்கிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “இந்த நேர்காணலின்போது அந்தந்த மக்களவை தொகுதியைச் சேர்ந்த மாவட்டக் கழக செயலாளர்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள், செயற்குழு-பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய-நகர-பகுதிக் கழக செயலாளர்கள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும். வேட்பாளர்கள் தங்களுக்கான ஆதரவாளர்களையோ-பரிந்துரையாளர்களையோ அழைத்துவரக் கூடாது என்றும், அவர்களையெல்லாம் நேர்காணலுக்கு கண்டிப்பாக அனுமதிக்க இயலாது” என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோலவே 21 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் வேட்பாளர் நேர்காணல் வரும் 9ஆம் தேதி நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே இன்று மாலை 6மணிக்குள் முடிவடைய இருந்த திமுக விருப்ப மனு விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நாளை மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
வரும் 10ஆம் தேதி மக்களவைத் தேர்தல் வேட்பாளர் நேர்காணல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு மறுநாள் (மார்ச் 11) சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டமும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் வேட்பாளர்கள் தேர்வு குறித்து விவாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அதற்குள் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்படலாம் என்றும்,அதன்பின்னர் திமுக போட்டியிடும் 20 தொகுதிகளுக்கான வேட்பாளர் அறிவிப்பு இருக்கும் என்றும் கூறப்படுகிறது.�,