உள்ளாட்சித் தேர்தல் வரவுள்ளதை முன்னிட்டு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் திமுக நிர்வாகிகளுடன் அக்கட்சியின் செயல்தலைவர் ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.
உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் 2016ஆம் ஆண்டு நடைபெற இருந்தது. ஆனால் தேர்தலுக்காக முறையான இடஒதுக்கீட்டு நடைமுறை பின்பற்றப்படவில்லை என்ற குற்றம் சாட்டி திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் உள்ளாட்சித் தேர்தலை நடத்தத் தடை விதித்து, டிசம்பர் 31ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்த வேண்டுமென உத்தரவிட்டது. ஆனால் ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை தேர்தல் நடைபெறவில்லை. இந்த நிலையில் வரும் ஏப்ரல் மாதத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து பல்வேறு கட்சிகளும் உள்ளாட்சித் தேர்தலுக்கான ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் இன்று (ஜனவரி 22) வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் பிப்ரவரி 1 முதல் மார்ச் 22ஆம் தேதி வரை சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் திமுக நிர்வாகிகளுடன் செயல்தலைவர் ஸ்டாலின் ஆய்வுக் கூட்டம் நடத்த உள்ளார். மாவட்டம் வாரியாக நடத்தப்படும் இந்த ஆய்வுக்கூட்டத்தில் திமுகவின் அனைத்து மாவட்ட கழகங்களிலும் உள்ள ஊராட்சி செயலாளர்கள் முதல் துணை அமைப்புகளின் நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர் வரை அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. திமுகவின் பணிகளை செம்மைப்படுத்த இந்தக் கூட்டம் நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின்படி, பிப்ரவரி 1,3 ஆகிய தேதிகளில் கோவை மற்றும் நீலகிரி மாவட்ட நிர்வாகிகளுடனும், பிப்ரவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் ஈரோடு, திருப்பூர் மாவட்ட நிர்வாகிகளையும் ஸ்டாலின் சந்திக்கவுள்ளார். இதே போன்று 9, 10, 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் சேலம், தருமபுரி, நாமக்கல், திருச்சி மாவட்ட நிர்வாகிகளின் ஆய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளது.
மேலும் அந்த அறிவிப்பில் 14,15,16 ஆகிய தேதிகளில் அரியலூர், பெரம்பலூர், கரூர், திருவாரூர் ஆகிய மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெறவுள்ளது. தொடர்ந்து பல மாவட்ட நிர்வாகிகளையும் ஸ்டாலின் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார். பிப்ரவரி 1ஆம் தேதி முதல் மார்ச் 22ஆம் தேதி வரை 32 நாட்களுக்கு காலையும், மாலையும் திமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடனான சந்திப்பு நடைபெறும் என்று கூறப்படுகிறது.�,”