மறுவாக்குப்பதிவு நடைபெற்றது நியாயமல்ல என்று தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் மறுவாக்குப்பதிவைத் திணித்து பதற்றத்தை ஏற்படுத்திய திமுக, தருமபுரி மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவை தேர்தல், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் ஒரு சில வாக்குச்சாவடிகளை பாமக கைப்பற்றியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்தன. முன்னதாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது, ”நம்மதான் பூத்தில் இருக்கப்போகிறோம், புரியுதா, புரியுதா” என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறியிருந்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தநிலையில் நேற்று தருமபுரியில் 8 வாக்குச்சாவடிகளிலும், தேனியில் இரண்டு வாக்குச்சாவடிகளிலும், திருவள்ளூர், கடலூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப்பதிவு நடைபெற்றன.
தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் தருமபுரியில் மறுவாக்குப்பதிவு நடைபெற்றது நியாயமல்ல என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இன்று (மே 20) அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தருமபுரி தொகுதிக்குட்பட்ட 8 வாக்குச்சாவடிகளைப் பாட்டாளி மக்கள் கட்சியினர் கைப்பற்றி, அதிக வாக்குகளைப் பதிவு செய்தனர் என்ற ஆதாரமற்ற, அவதூறான குற்றச்சாட்டைக் கூறித் தான், மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று திமுக தேர்தல் ஆணையத்திடமும், மாவட்ட ஆட்சியரிடமும் கோரிக்கை வைத்தது. திமுகவுக்கு ஆதரவாக தி இந்து ஆங்கில நாளிதழும், அதன் தருமபுரி செய்தியாளரும் அவதூறு பரப்பினர். திமுகவின் குற்றச்சாட்டு உண்மை என்றால் மறுவாக்குப்பதிவு நடத்தப்பட்ட இடங்களில் கணிசமான அளவில் வாக்குப்பதிவு விகிதம் குறைந்திருக்க வேண்டும். ஆனால், எந்த வாக்குச்சாவடியிலும் அப்படி நடக்கவில்லை.
தருமபுரி தொகுதியில் மறுவாக்குப்பதிவு நடைபெற்ற 8 வாக்குச்சாவடிகளில் கடந்த 18.04.2019 அன்று நடந்த தேர்தலில் மொத்தமுள்ள 6059 வாக்குகளில் 5447 வாக்குகள், அதாவது 89.90% வாக்குகள் பதிவாகியிருந்தன. நேற்று நடைபெற்ற மறுவாக்குப் பதிவில் 5433, அதாவது 89.67% வாக்குகள் பதிவாகியுள்ளன. ஒட்டுமொத்தமாக 14 வாக்குகள் மட்டுமே குறைவாகப் பதிவாகியுள்ளன. விழுக்காடு கணக்கில் பார்த்தால் கால் விழுக்காட்டுக்கும் குறைவாக 0.23% மட்டுமே வாக்குப்பதிவு குறைந்துள்ளது.
ஜாலிபுதூர் கிராமத்தில் அமைந்துள்ள இரு வாக்குச்சாவடிகளில், கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலில் பதிவான அதே அளவில் முறையே 723, 708 வாக்குகள் பதிவாகியுள்ளன. நத்தமோடு பகுதியுள்ள 4 வாக்குச்சாவடிகளில் மூன்றில் கடந்த முறை பதிவானதை விட இம்முறை கூடுதலான வாக்குகள் பதிவாகியுள்ளன. 192ஆவது வாக்குச்சாவடியில் கடந்த முறை பதிவான 694 வாக்குகளை விட 27 வாக்குகள் கூடுதலாக 721 வாக்குகள் பதிவாகியுள்ளன. 194ஆவது வாக்குச்சாவடியில் கடந்த முறை 807 வாக்குகள் பதிவான நிலையில் இப்போது 821 வாக்குகள் பதிவாகியுள்ளன. 195-ஆவது வாக்குச் சாவடியில் இரு வாக்குகள் கூடுதலாகப் பதிவாகியுள்ளன. 193-ஆவது வாக்குச்சாவடியில் மட்டும் 16 வாக்குகள் குறைந்துள்ளன. அய்யம்பட்டியிலுள்ள இரு வாக்குச்சாவடிகளில் முறையே 3 வாக்குகளும், 38 வாக்குகளும் குறைந்துள்ளன. இதன்மூலம் கடந்த மாதம் நடந்த தேர்தலில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்பதும், இப்போது வாக்களித்ததைப் போலவே கடந்த மாதம் நடந்த தேர்தலிலும் மக்கள் அச்சமின்றியும், சுதந்திரமாகவும் வாக்களித்தனர் என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் எந்தத் தவறும் நடக்காத நிலையில், ஆதாரமற்ற குற்றச்சாட்டின் பேரில் மறுவாக்குப்பதிவு நடத்த வைத்ததன் மூலம், தருமபுரி மக்களவை தொகுதி வேட்பாளர் அன்புமணியின் நற்பெயரைக் கெடுக்க வேண்டும் என்று திமுகவினர் செய்த சதி அம்பலமாகியுள்ளது மட்டுமின்றி, தோல்வியும் அடைந்து விட்டது. ஒரு வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடியில் பணியாற்றிய வேட்பாளர்களின் முகவர்கள், தேர்தல் அதிகாரிகள், நுண் பார்வையாளர்கள், வாக்குப்பதிவு அதிகாரிகள், இவர்களுக்கெல்லாம் மேலாகப் பொதுமக்கள் ஆகிய 5 தரப்பினரில் எவரேனும் ஒருவர் புகார் அளித்திருக்க வேண்டும். ஆனால், அவர்களில் ஒருவர் கூட மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கவில்லை. எனினும், தங்களின் தோல்விக்குக் காரணம் தேட வேண்டும் என்ற நோக்கத்துடன் திமுக மறுவாக்குப்பதிவு நடத்த வைத்தது. ஆனால், அதே அளவில் வாக்களித்ததன் மூலம் திமுக முகத்தில் மக்கள் கரியை பூசியுள்ளனர்.
தேவையின்றி மறுவாக்குப்பதிவு நடத்த வைத்ததன் மூலம் மக்களின் நேரமும், வரிப்பணமும் வீணாகி உள்ளது. தேர்தலுக்காக அதிகாரிகள், மத்திய துணை ராணுவப் படையினர் வரவழைக்கப்பட்டு அவர்களின் மனித சக்தி வீணடிக்கப்பட்டது. எனவே, தேவையின்றி, மறுவாக்குப்பதிவைத் திணித்து, பதற்றத்தை ஏற்படுத்த முயன்ற திமுகவும், அதன் தலைமையும் தருமபுரி தொகுதி மக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
.
.
**
மேலும் படிக்க
**
.
**
[சோனியா திடீர் உற்சாகம்: காரணம் என்ன?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/16)
**
.
**
[வாக்குக் கணிப்பும் மக்கள் முடிவும்: தேர்தல் வரலாறு சொல்வது என்ன?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/18)
**
.
**
[தமிழகம்: திமுக கூட்டணிக்கே சாதகம்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/20)
**
.
**
[அமமுகவின் க்ளைமாக்ஸ் வியூகம்- சமாளித்தாரா செந்தில்பாலாஜி?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/37)
**
.
**
[ஸ்டாலின் –மம்தாவுக்கு இடையே போட்டி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/38)
**
.
.�,”