திமுக சுட்டிக்காட்டும் பிரதமர் தலைமையில்தான் புதிய ஆட்சி மத்தியில் அமையும் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ரிஷிவந்தியம் தொகுதி எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் இல்ல திருமண விழா கள்ளக்குறிச்சியில் நேற்று (பிப்ரவரி 17) நடந்தது. இதில் கலந்துகொண்ட ஸ்டாலின் பேசுகையில், “மே மாத இறுதிக்குள் நாடாளுமன்றத் தேர்தல் முழுமையாக முடிந்து ஒரு புதிய ஆட்சி அமையப்போகிறது. உறுதியாகச் சொல்கிறேன், திராவிட முன்னேற்றக் கழகம் சுட்டிக்காட்டுகிற பிரதமர் தலைமையில் அந்தப் புதிய ஆட்சி அமையவிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்து தமிழகத்தில் காலியாக இருக்கிற 21 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வரும்” என்றார்.
தமிழகத்தில் மிரட்டி பலவந்தப்படுத்தி ஒரு கூட்டணி உருவாக்கப்படவுள்ளதாக அதிமுக, பாஜகவை விமர்சித்த ஸ்டாலின், “தன்னால் தமிழ்நாட்டில் எங்கு வேண்டுமானாலும் தனியாகச் செல்ல இயலும். என்னை யார் என்று மக்களுக்கு தெரியும். ஆனால் தமிழக முதல்வராக இருக்கிற கே.பழனிசாமியால் காவல்துறை துணையில்லாமல் அவருடைய சொந்தத் தொகுதியான எடப்பாடிக்கு செல்ல இயலுமா என்று பந்தயம் வைத்துக்கொள்ளலாம். கொடநாடு விவகாரம், குட்கா முறைகேடு, வருமான வரி சோதனை போன்றவற்றை வைத்து மிரட்டி அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது” என்று குற்றம்சாட்டினார்.
மேலும் அரசின் வரிப்பணத்தைக் கொண்டு செய்தித்தாள்களில் அதிமுக அரசு பத்திரிகைகளில் முதல் பக்கத்தில் விளம்பரம் செய்வதாகவும் இந்த நிகழ்ச்சியில் ஸ்டாலின் குற்றம்சாட்டினார். ”இரு தினங்களுக்கு முன்பு தமிழ் பத்திரிகை, ஆங்கில பத்திரிகை என எல்லா ஊடகங்களிலும் அரசின் சார்பில் முதல் பக்கத்திலும், இரண்டாம் பக்கத்திலும் விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு கட்சியின் சார்பில் விளம்பரம் கொடுக்கட்டும். அதைத் தவறு என்று நாம் வாதிடவில்லை. அது அக்கட்சியின் கொள்கை, உணர்வு, விருப்பத்துக்குட்பட்டது. ஆனால் அரசு வரிப்பணத்தில் வெளியிடலாமா?” என்று ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.�,