N
கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டை இன்றைக்குள் முடித்து நாளைக்குள் அனைத்துத் தொகுதிப் பங்கீட்டையும் அறிவித்திட திட்டமிட்டிருக்கிறார் திமுக தலைவர். அதற்கான வேலைகள் தீவிரமாக அறிவாலயத்தில் நடைபெற்று வருகின்றன.
இன்று விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யும் முக்கிய ஆலோசனை நடக்கிறது.
காங்கிரஸைப் பொறுத்தவரை ஏற்கனவே ராகுல் காந்தி கொடுத்தனுப்பிய 13 தொகுதிகளில் தமிழகத்துக்கான ஒன்பது தொகுதிகளை இறுதி செய்யும் பணி இன்று இரவுக்குள் முடிந்துவிடும் என்கிறார்கள்.
முன்னாள் தலைவர்கள், செயல் தலைவர்களுக்கு சீட் கிடையாது என்று ஏற்கனவே சொல்லப்பட்ட நிலையில் திருநாவுக்கரசர் திருச்சியை போராடிப் பெற்றுவிட்டார் என்கிறார்கள். அதேபோல ராகுல் கொடுத்த தொகுதிப் பட்டியலில் இரண்டு, மூன்று தொகுதிகளைத் தர திமுக தொடர்ந்து மறுத்து வருகிறது. அதில் முக்கியமான தொகுதியாக நெல்லை இருக்கிறது. நெல்லையை ஏற்கனவே பீட்டர் அல்போன்ஸ் கேட்டிருந்தாலும், இப்போது சூழல் மாறியிருக்கிறது.
“அதிமுகவுல பாஜகவுக்கு 5 சீட்டு கொடுத்து முடிச்சிட்டாங்க. ஆனா உங்களுக்கு 10 சீட் கொடுத்திருக்கோம். கன்னியாகுமரி கொடுத்தாச்சு. சிவகங்கை கொடுத்தாச்சு. நெல்லையையும் கேட்டால் எப்படி?” என்று திமுக தரப்பில் கேட்டிருக்கிறார்கள்.
இன்றைக்கு இரவுக்குள் திமுக – காங்கிரஸ் தொகுதிப் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் என்ற தகவல் அறிவாலயத்திலிருந்து கிடைக்கிறது.�,