மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, மக்களவைத் தேர்தலில் திமுக ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாது என்று தெரிவித்துள்ளார்.
கரூரில் நேற்று (பிப்ரவரி 16) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட கரூர் தொகுதியைக் கேட்டுள்ளேன் என்றார். உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்ததால்தான், ஒவ்வொரு ஊராட்சிக்கும் திமுக தலைவர் ஸ்டாலின் சென்று மக்களின் தேவை என்னவென்று கேட்கிறார். உள்ளாட்சித் தேர்தலை மனதில் வைத்துத்தான் அவர் இதுபோன்று செய்கிறாரே தவிர, மக்களவைத் தேர்தலுக்காக அல்ல என்று தெரிவித்துள்ளார். அதிக எம்.பி.க்களைக் கொண்ட கட்சிதான் நாட்டின் பிரதமர் யார் என்பதை முடிவெடுக்கும் என்று தெரிவித்த தம்பிதுரை மக்களவைத் தேர்தலில் திமுக ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறாது என்று குறிப்பிட்டார்.
அப்போது திமுக ஆட்சிக்கு வந்தால் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்கு யார் காரணம் என்று கண்டுபிடிக்கப்படும் என்று ஸ்டாலின் கூறியுள்ளாரே என்ற கேள்விக்குப் பதில் அளித்த தம்பிதுரை, ஜெயலலிதா மீது வழக்கு பதிந்து அவரை பெங்களூரு சிறையில் அடைத்து மன உளைச்சலை ஏற்படுத்தி அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்படக் காரணமானது திமுகதான். அவர்களுக்குத் துணை போனது காங்கிரஸ் . அதன்படி ஜெ மரணத்துக்கு, திமுகவும், காங்கிரஸும்தான் காரணம் என்று தெரிவித்துள்ளார்.
நேற்று, காலையில் மணப்பாறையில் பேசிய தம்பிதுரை, அதிமுக – பாஜக கூட்டணி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, தமிழகத்துக்கு யார் நன்மை செய்வார்களோ அவர்களுடன்தான் கூட்டணி என்று முதலமைச்சர், துணை முதலமைச்சர் கூறியுள்ளனர், அதன்படிதான் அதிமுக கூட்டணி அமையும் என்று கூறியுள்ளார். வைகை எக்ஸ்பிரஸ் இனி மணப்பாறையிலும் நின்று செல்லும் வகையில், ரயிலைக் கொடியசைத்து அனுப்பிவைத்த பிறகு தம்பிதுரை இவ்வாறு தெரிவித்தார் இது மக்கள் நலன் சார்ந்த விஷயம் என்பதால் இந்நிகழ்ச்சியில் அரசியல் பேச விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.
பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்து, தேர்தலைச் சந்திக்கவுள்ளதாகக் கூறப்படும் நிலையில், பாஜகவுக்கு எதிராகத் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வந்த தம்பிதுரை, பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றும் தெரிவித்துவந்தார். இதற்கிடையில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தமிழகம் வந்து அதிமுகவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஓரிரு தினங்களில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என்று ஓபிஎஸ் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஈபிஎஸ், ஓபிஎஸ் முடிவுபடி கூட்டணி அமைக்கப்படும் என்று கூறியுள்ளார் தம்பிதுரை.�,