மக்களவைத் தேர்தலில் இந்திய அளவில் பாஜக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்க, தமிழகத்தில் அதற்கு நேர்மாறாக 2014 மக்களவைத் தேர்தலில் நடந்ததுதான் தற்போதும் நடந்துள்ளது. கடந்த தேர்தலின்போது மோடி அலையை வீழ்த்தி அதிமுக 37 இடங்களில் வென்ற நிலையில், தற்போது திமுக கூட்டணி அதுபோலவே 37 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியைக் கண்டு, புதிதாகப் பொறுப்பேற்க உள்ள பல திமுக எம்.பி.க்கள் வெளியில் மகிழ்ச்சியாகக் காட்டிக்கொண்டாலும் உள்ளுக்குள் புலம்பித் தவிக்கிறார்கள்.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் அல்லது மாநிலக் கட்சிகள் பலம் பெற்ற கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பு திமுகவில் பலமாக இருந்த நேரத்தில் அசுர பலத்தோடு பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்ததுதான் அதற்குக் காரணம்.
இதுதொடர்பாக திமுக வட்டாரங்களில் விசாரித்தோம்.
கடந்த 10 வருடங்களாக அதிகாரத்தில் இருக்கும் அதிமுக, தேர்தலில் எப்படியேனும் வெற்றிபெற வேண்டும் என்பதற்காகத் தேர்தல் களத்தில் பணத்தைத் தண்ணீராகச் செலவழித்தனர். ஆனால், திமுக ஆட்சியை இழந்து கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் ஆகிவிட்டது, மத்தியில் அங்கம் வகித்தும் ஐந்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.
இதனால் பெரிய அளவில் திமுக தரப்பில் பணம் புரளாத சூழலில், அதிமுகவுக்கு இணையாகச் செலவு செய்ய வேண்டும் என்பதற்காக திமுக வேட்பாளர்கள் தங்களின் சொத்துகளை விற்றும், மார்வாடிகளிடம் வட்டிக்குக் கடன் வாங்கியும்தான் தேர்தலுக்குச் செலவழித்திருக்கிறார்கள். மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட திமுக வேட்பாளர்கள் பலரும் குறைந்தபட்சம் ரூ.30 கோடி வரை செலவு செய்திருக்கிறார்கள். ஒருசில இடங்களில் 80-90 கோடி வரையில் கூட பட்ஜெட் சென்றுள்ளது. இதில் பலரும் கடன் வாங்கித்தான் தேர்தல் செலவுகளைக் கவனித்துள்ளனர்.
கடைசி நேரத்தில் தலைமையிடமிருந்து பணம் வரும் என்று நம்பி, சில சிக்கல்கள் காரணமாக அது கிடைக்காமல் போகவே மேலும் கடன் வாங்கி செலவழித்தனர். கோடீஸ்வரர்கள் என்று அறியப்பட்ட பல திமுக வேட்பாளர்கள்கூட தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாட்களில் பணத்துக்காக அலைந்தது பெருங்கதை. இந்த நிலையில்தான் தங்களது வெற்றி, விழலுக்கு இறைத்த நீராகி விட்டதாகக் குமுறி வருகிறார்கள் திமுகவின் புதிய எம்.பி.க்கள்.
காங்கிரஸ்தான் ஆட்சிக்கு வரும் அதில் திமுகவும் அங்கம் வகிக்கும் என உறுதியாக நம்பியதால் தங்களை வளப்படுத்திக் கொள்ளலாம் என்று நினைத்த திமுக எம்.பி.க்களுக்குக் கொலுபொம்மையாய் வீற்றிருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது.
லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற ஒரு திமுக எம்.பி.க்கு வாழ்த்து சொன்னபோது, “மெத்தை வாங்கினோம்… தூக்கத்த வாங்கலையே?” என்றார் தனக்கே உரிய குசும்போடு! இது ஒரு எம்.பி.யின் குரல் அல்ல. மொத்த திமுக எம்.பி.க்களின் குரல்.�,