(அதிமுக எம்.எல்.ஏ. வெற்றிவேல் அளித்த புகார் கடிதம்)
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிமுக-வில் ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சரானார். இதையடுத்து, அதிமுக-வின் தற்காலிக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட சசிகலா, முதலமைச்சராவதற்கு முனைந்தார். அதற்காக சட்டமன்றக்குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனிடையே. ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தினார். இதைத் தொடர்ந்து அதிமுக பன்னீர் – சசிகலா தலைமைகளில் இரண்டாகப் பிரிந்தது. இதனால் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கத்தில் அதிமுக எம்.எல்.ஏ-க்களை சசிகலா கூவத்தூர் சொகுசு விடுதியில் சிறைப்பிடித்து வைத்திருந்தார். இந்நிலையில் அவருக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம். தண்டனையை உறுதிசெய்து சிறையில் அடைத்தது. இதனால் அதிமுக-வுக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டது.
அதேநேரம் சசிகலாவின் அணியில் இருந்து பன்னீர் அணிக்கு 11 எம்.எல்.ஏ-க்கள் தாவினார்கள். மேலும் பல எம்.எல்.ஏ-க்கள் வரவிருப்பதாக தகவல் வெளியானது. பன்னீருக்கு ஆதரவாக பல எம்.எல்.ஏ-க்கள் வரவிருப்பதை அறிந்த பன்னீர், எம்.எல்.ஏ-க்களை சட்ட விரோதமாக கூவத்தூரில் அடைத்து வைத்திருப்பதாக ஆளுநரிடம் புகாராக தெரிவித்தார்.
இதன் பிறகு எடப்பாடி பழனிசாமி, சசிகலாவின் தரப்பில் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து ஆளுநர், எடப்பாடி பழனிசாமியைச் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கச் சொல்லி உத்தரவிட்டார்.
கடந்த பிப்ரவரி 18இல் சட்டமன்றத்தில், அதிமுக அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க கூடிய சட்டமன்றக் கூட்டத்தில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று திமுக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. சபாநாயகர் தனபால் நேரடியான வாக்கெடுப்பு மட்டும்தான் நடத்த முடியும் என்று மறுத்ததால் சட்டசபையை நடத்தவிடாமல் திமுக எம்.எல்.ஏ-க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
ஒருகட்டத்தில் சபாநாயகரின் இருக்கையில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஏறி அமர்ந்ததால் ‘சட்டசபையின் மாண்பு போய்விட்டது’ என்று சபாநாயகர் தனபால் கடுமையான குற்றத்தை திமுக எம்.எல்.ஏ-க்கள் மீது சுமத்தினார். அதோடு சட்டசபையில் சட்டைகள் கிழிந்து சண்டை சபையாக மாறியது.
மீடியாக்களில் இதுகுறித்து செய்திகள் வெளியானது. ஸ்டாலின் சட்டையும் கிழிந்து சட்டசபையில் இருந்து வெளியே வந்தவர், நேராக ஆளுநரிடம் சென்று புகார் கொடுத்தார். அடுத்து, மெரினா சென்று அறப்போராட்டம் நடத்தினார். இந்த சம்பவம் நீதிமன்றம் வரை சென்றது. அடுத்து சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் ஸ்டாலினால் கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையில் சமீபத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆரம்பமானது. இதில் திமுக எம்.எல்.ஏ-க்கள் ஆயிரம்விளக்கு கு.க.செல்வம், எழும்பூர் கே.எஸ்.ரவிச்சந்திரன், கன்னியாகுமரி சுரேஷ்ராஜன், வந்தவாசி அம்பேத்கர் குமார், வேலூர் கார்த்திக்கேயன், செஞ்சி மஸ்தான், வேப்பனஹள்ளி முருகன் ஆகிய ஏழு பேருக்கும் சட்டமன்ற உரிமை மீறல் குழு, தாமாக முன்வந்து நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. அந்த நோட்டீஸில் சட்டசபையின் மாண்பை குலைக்கும் வகையில் நடந்து கொண்ட சம்பவத்துக்கு விளக்கம் கேட்டு உள்ளது. இதுகுறித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் ஸ்டாலினிடம் முறையிட்டார்கள்.
ஸ்டாலின், சபாநாயகர் மீது கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை இது முறியடிக்கும் திட்டமென்று திமுக-வினர் கருதினார்கள். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து திமுக-வினர் ஆலோசித்து வந்தனர். இந்த நிலையில் சட்டமன்றத்தில் சபாநாயகர் தனபால் மீது திமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை வரும் 23ஆம் தேதி நடத்த சபாநாயகர் முடிவு செய்து விட்டார். இந்த தகவலை சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன் அறிவித்தார்.
அறிவாலயத்தில் நேற்று மாலை மாவட்டச் செயலாளர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்திக்கொண்டிருந்த, அதே வேளையில் கோட்டையில் ரகசிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் நோட்டீஸ் கொடுக்கப்பட்ட ஏழு திமுக எம்.எல்.ஏ-க்களையும் சஸ்பெண்டு செய்யப்போவதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம். இந்த முடிவு சபாநாயகர் மீது 23இல் நடத்தப்படும், நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் திமுக-வுக்குத் தோல்வியை உண்டாக்கவே, முன் ஏற்பாடாக செய்யப்பட்டியிருக்கிறது என்று அதிமுக-வின் தரப்பில் சொல்லி வருகிறார்கள். 23ஆம் தேதி, சட்டசபையில் பெரும் அமளி காத்திருக்கும் என்று தெரிகிறது.�,”