திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை இடங்கள் என்பது பற்றிய விவாதம் டெல்லி வரைக்கும் நடந்து வருகிறது. தேர்தல் நேரத்தில் தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த திருநாவுக்கரசர் மாற்றப்பட்டு புதிய தலைவராக கே.எஸ். அழகிரி நியமிக்கப்பட்டார். அவருடன் ஐந்து செயல் தலைவர்களும் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில் காங்கிரஸ் தரப்பில் திமுகவிடம் தொகுதிப் பங்கீடு பற்றிய பேச்சுவார்த்தையில் இம்முறை வழக்கத்தை விட டெல்லியின் பங்கு அதிகமாக இருக்கும் என்கிறார்கள் காங்கிரஸ் தரப்பில். அதில் ப.சிதம்பரம் முக்கியத்துவம் பெறுகிறார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் பொறுப்பேற்ற உடனே கே.எஸ். அழகிரி மற்றும் அனைத்து செயல் தலைவர்களும் திமுக தலைவர் ஸ்டாலினைப் பார்த்து வாழ்த்து பெற்றனர். திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு போதிய இடங்கள் கிடைக்க வேண்டும் என்பதன் காரணமாகவே இந்த சந்திப்பு நடந்தது.
தொகுதிப் பங்கீடு பற்றி காங்கிரஸ் வட்டாரத்தில் பேசினோம்.
“2014 ஆம் ஆண்டு திமுகவோடு ஏற்பட்ட கசப்பின் காரணமாக தனித்துப் போட்டியிட்டோம். திமுக ஒருவேளை எங்களை அப்போது கூட்டணியில் சேர்த்துக் கொண்டிருந்தால் ஒட்டுமொத்தமாக அதிமுகவிடம் இழந்திருக்க வேண்டிய அவசியம் நேர்ந்திருக்காது.
இதற்கு முன் மக்களவைத் தேர்தலில் திமுகவோடு காங்கிரஸ் கூட்டணி என்றால் 2009 தேர்தலில்தான் வைத்தோம். அப்போது இலங்கைப் போர் காரணமாக காங்கிரஸுக்கு கடுமையான எதிர்ப்பு இருந்தபோதும் திமுக அணியில் 16 இடங்கள் வாங்கி 8 இடங்கள் ஜெயித்தோம்.
அன்று இருந்த நிலைமை இன்று ரொம்ப மாறியிருக்கிறது. அந்த அளவு எதிர்ப்பு காங்கிரசுக்கு இல்லை. இன்னும் சொல்லப் போனால் மோடி எதிர்ப்பலையும் ராகுல் மீதான ஆதரவுப் போக்கும் அதிகரித்துள்ளது. பிரியங்கா காந்தியையும் தமிழகத்துக்கு சிலமுறை அழைத்து வரும் திட்டம் இருக்கிறது. இதெல்லாம் காங்கிரசுக்கு 2019 தேர்தலில் சாதகமான அம்சங்கள்.
எனவே வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் 2009 இல் போட்டியிட்ட 16 இடங்களில் இருந்துதான் பேச்சைத் தொடங்கியிருக்கிறது. ஆனால் திமுக இதற்கு ஒப்புக் கொள்ளாது என்பது தெரியும். இதில் தொடங்கினால்தான் 12 தொகுதியிலாவது வந்து நிற்கும் என்பது காங்கிரஸ் டெல்லி தலைவர்களின் நம்பிக்கை. அதிமுக அணி என்று ஒன்று உருவாகிவிட்டால் காங்கிரஸ் கேட்கும் தொகுதிகளை திமுக தரவேண்டிய அவசியமும் ஏற்பட்டுவிடும்” என்கிறார்கள்.
திமுக தரப்பில் விசாரித்தபோது,
“காங்கிரசுக்கு எட்டு தொகுதிகள்தான் என்ற எண்ணத்தில் இருக்கிறார் தலைவர். பேச்சுவார்த்தை மூலம் இது எவ்வளவுதான் அதிகரித்தாலும் இரட்டை இலக்கத்தைத் தாண்ட வாய்ப்பில்லை. காங்கிரஸ் தொகுதிகள் பற்றிப் பேசுவதற்காக தனது மருமகன் சபரீசனை டெல்லிக்கு அனுப்பி சில முக்கியப் பிரமுகர்களுடன் பேச வைத்திருக்கிறார் தலைவர்.
திமுக தலைவர் ஸ்டாலின் தான் தலைவர் ஆனபின் முதல் டெல்லி அரசியல் பயணம் மேற்கொண்டபோது சோனியா, ராகுல் உடனான சந்திப்பில் சபரீசனும் அப்போது உடன் இருந்தார். இப்போது கடந்த சில தினங்களாக டெல்லியில் முகாமிட்ட சபரீசன் காங்கிரஸ் பிரமுகர்களோடு எத்தனை சீட்டுகள் என்பது பற்றி பேசியிருக்கிறார். ஸ்டாலினும் அவரிடம் இருந்து உடனுக்குடன் விவரங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்கிறார். காங்கிரஸ் உடனான பேச்சில் சில பிரச்சினைகள் இருந்தாலும் அவை பேசித் தீர்க்கப்படும்” என்கிறார்கள்.�,