சட்டமன்றத் தேர்தலுக்காக பிரஷாந்த் கிஷோருடன் இணைந்திருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.
தேர்தல் உத்தி வகுப்பாளரான பிரஷாந்த கிஷோர், ஐபேக் ( இந்திய அரசியல் நடவடிக்கைக் குழு _ Indian Political Action Committee) என்ற பெயரில் நிறுவனத்தை உருவாக்கி அரசியல் கட்சிகளுக்கு ஆலோசனை வழங்கும் பணியினை செய்து வருகிறார்.
2012 ஆம் ஆண்டு குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்கு மோடிக்கு ஆலோசகராக செயல்பட்ட பிரசாந்த் கிஷோர், அதன் பின் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் மோடிக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடிக் கொடுத்தார். அதன் பின் பீகாரில் நிதீஷ், ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி என்று தேர்தல் உத்தி வகுப்பாளராக செயல்பட்டு அவர்களின் வெற்றியை முடுக்கிவிட்ட பிரசாந்த் கிஷோர் தற்போது மேற்கு வங்காள முதல்வரான மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரசுடன் ஒப்பந்தம் செய்திருக்கிறார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்காக திமுக தரப்பிலிருந்து சில மாதங்களுக்கு முன்பே பிரஷாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டது. இதனால் ஸ்டாலினுடைய உத்தி வகுப்பாளராக 2016ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டுவந்த [சுனில் தன்னை பொறுப்பிலிருந்து விடுவித்துக்கொண்டார்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/11/27/87). இவை தொடர்பாக [கழக அரசியல் முதல் கார்ப்பரேட் அரசியல் வரை](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/12/28/31) என 20 அத்தியாயங்கள் கொண்ட மினி தொடரை வெளியிட்டுள்ளோம்.
இந்த நிலையில் ஐ-பேக் ஒப்பந்தம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார் . இதுதொடர்பாக இன்று (பிப்ரவரி 2) அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழகத்தைச் சேர்ந்த அறிவார்ந்த மற்றும் ஒத்த எண்ணம் கொண்ட இளம் திறமையாளர்கள் ஐ-பேக் அமைப்பின் கீழ், 2021 சட்டமன்றத் தேர்தலுக்காக எங்களுடன் பணியாற்றவுள்ளனர் என்பதை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். அத்துடன் நம்முடைய திட்டங்களை தமிழகத்தில் நிலைநிறுத்தி, மீண்டும் மாநிலத்தில் முன்பு இருந்த பெருமைகளை நிலைநாட்ட உதவுவார்கள் ” என்று தெரிவித்துள்ளார். இதனை ஐ-பேக் நிறுவனம் ரீ-ட்விட் செய்து நன்றி தெரிவித்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு திமுகவுடன் ஒப்பந்தம் செய்துகொண்டவுடனே தமிழகத்தில் பணிகளை ஆரம்பிக்க பிரஷாந்த் கிஷோர் தரப்பு முனைப்பு காட்டியது. ஆனால், வரும் மார்ச் மாதத்திலிருந்து தேர்தல் பணிகளை ஆரம்பித்தால்தான் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள பொருத்தமாக இருக்கும் என்று திமுக தரப்பிலிருந்து சொல்லப்பட்டது. இதன் காரணமாக திமுகவுடன் பிரஷாந்த் கிஷோர் தரப்பு ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டது என்றெல்லாம் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் தற்போது பிரஷாந்த் கிஷோருடன் இணைந்திருப்பதை அதிகாரப்பூர்வமாகவே வெளியிட்டிருக்கிறார் ஸ்டாலின்.
ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதால், திமுகவுக்கான உத்திகளை வகுக்கும் பணிகளில் எந்தவித தடையும் இல்லாமல் முழு கவனம் செலுத்த இருக்கிறார் பிரஷாந்த் கிஷோர்.
�,