பிரஷாந்த் கிஷோருடன் திமுக ஒப்பந்தம் செய்துள்ளது குறித்து அதிமுக, பாமக ஆகியவை விமர்சனம் செய்துள்ளன.
பிரபல தேர்தல் உத்தி வகுப்பாளரான பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம், வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் இணைந்து பணியாற்றவுள்ளது. இதற்கான ஒப்பந்தம் சில மாதங்களுக்கு முன்பே முடிந்துவிட்ட நிலையில், நேற்று முன்தினம் இதை அதிகாரபூர்வமாக அறிவித்தார் திமுக தலைவர் ஸ்டாலின்.
அவர் தனது முகநூல் பக்கத்தில், “தமிழகம் இழந்த புகழை மீட்கும் நம் குறிக்கோள் வெற்றி பெறவும், அதற்கான திட்டமிடலில் உதவிடவும், திறமைமிக்க, ஒத்த கருத்துடைய பல தமிழக இளைஞர்கள், IPAC – அமைப்பின் கீழ், நம்முடன் 2021 தேர்தலில் இணைந்து பணியாற்றிட இருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இதை அதிமுக, பாமக ஆகிய கட்சிகள் விமர்சித்துள்ளன.
பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று (பிப்ரவரி 3) தனது ட்விட்டர் பக்கத்தில், “எந்தத் தேர்தலாக இருந்தாலும் பாமகவின் வெற்றியைத் தலைமையின் வழி காட்டுதலும், தொண்டர்களின் உண்மையான உழைப்பும், பாட்டாளிகளின் ஆதரவும் உறுதி செய்யும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. மக்களிடம் செல்வோம், அவர்களுக்காக உழைப்போம், அவர்களால் வெல்வோம்” என்று தெரிவித்தார்.
மேலும், “வெற்றிடங்களைத் தான் காற்று நிரப்பும். பாமக அறிவார்ந்த இளைஞர்களும், உண்மையான தொண்டர்களும் நிறைந்த கட்சி. பாமகவுடன் இரண்டறக் கலந்த இளைஞர்கள் இயக்கத்தில் நிறைந்துள்ள நிலையில், அந்நிய அறிவுக்குத் தேவையும் இல்லை; தேடலும் இல்லை” என்று குறிப்பிட்டு திமுக பிரஷாந்த் கிஷோருடன் ஒப்பந்தம் செய்துள்ளதை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
**அதிமுக பதில்**
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “பிரஷாந்த் கிஷோரை திமுக ஒப்பந்தம் செய்துள்ளது அவர்களுக்கு அவர்கள் மீதே நம்பிக்கையில்லை என்பதைத்தான் காட்டுகிறது. மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றிருந்தால் வடஇந்தியாவிலிருந்து ஒருவரை இங்கு கொண்டுவர வேண்டிய அவசியமே இல்லை.
பிரஷாந்த் கிஷோரின் வருகை திமுகவின் கொள்கைகள் நீர்த்துப்போய்விட்டதைத்தான் காட்டுகிறது. திமுக கட்சி இல்லை. கார்ப்பரேட் நிறுவனம் போலதான் திமுக தற்போது செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அதனால்தான் பிரஷாந்த் கிஷோரை நம்பியிருக்கிறது. ஆனால், அதிமுக மக்களை மட்டும் நம்பியிருக்கிறது. அந்த நம்பிக்கை எங்களுக்கு கைகொடுக்கும்” என்று தெரிவித்தார்.
உங்களது கூட்டணிக் கட்சியான பாஜகவும் பிரஷாந்த் கிஷோரைப் பயன்படுத்தியுள்ளதே என்ற கேள்விக்கு, “திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தது போல, பிரஷாந்த் கிஷோர் தங்களுக்கு பணியாற்றினார் என்று பாஜக அறிவிக்கவில்லை. தங்களது வெற்றிக்குக் காரணம் பிரஷாந்த் கிஷோர் என்றும் பாஜக சொல்லவில்லை. பத்திரிகைகளில் வந்த செய்திகள் குறித்து என்னால் கருத்து கூற முடியாது. இணைந்து பணியாற்றியிருந்தாலும் அது பாஜகவின் விருப்பம்” என்று பதிலளித்துள்ளார்.�,