மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி 21 தொகுதிகளையும், அதிமுக தலைமையிலான கூட்டணி 15 தொகுதிகளையும் வெல்லும் என்று இந்தியா டிவி- சிஎன்எக்ஸ் கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் கடந்த 2 மாதங்களாக பல்வேறு கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகின்றன. ஒவ்வொரு கருத்துக்கணிப்பும் ஒவ்வொரு விதமான முடிவுகளைத் தந்தாலும் எந்தக் கட்சிக்கும் தனித்து ஆட்சியமைக்கும் பலம் கிடைக்காது என்பதே பரவலான கணிப்பாக உள்ளது. அந்த வகையில் பாஜக 238 தொகுதிகளையும், காங்கிரஸ் 82 தொகுதிகளையும் கைப்பற்றும் என்று நேற்று முன்தினம் (மார்ச் 10) வெளியான இந்தியா டிவி-சிஎன்எக்ஸ் கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக தேசிய ஜனநாயகக் கூட்டணியைப் பொறுத்தவரையில் 285 இடங்களில் வெல்லும் எனவும், அதில் பாஜக 238 தொகுதிகளையும், சிவசேனா 10 தொகுதிகளையும், ஐக்கிய ஜனதா தளம் 12 தொகுதிகளையும், லோக் ஜனசக்தி கட்சி 3 தொகுதிகளையும், கூட்டணியில் உள்ள எஞ்சிய பிராந்தியக் கட்சிகள் இதர இடங்களைப் பெறும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இதனால் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் பாஜக தொடர்ந்து 2ஆவது முறையாக ஆட்சியமைக்கும் என்று இந்த கருத்துக் கணிப்பு கூறுகிறது.
**தமிழக நிலவரம்**
தமிழகத்தைப் பொறுத்தவரையில் திமுக தலைமையிலான கூட்டணியே அதிக இடங்களை வெல்லும் என்பது இதன் கணிப்பாக உள்ளது. திமுக தலைமையிலான கூட்டணியில் திமுக 16 தொகுதிகளையும், காங்கிரஸ் 5 தொகுதிகளையும் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் அதிமுக 12 தொகுதிகளையும், பாமக 2 தொகுதிகளையும், பாஜக 1 தொகுதியையும் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல அமமுக 2 தொகுதிகளையும், மற்ற கட்சிகள் ஒரு தொகுதியையும் வெல்லும் என இந்தியா டிவி கூறுகிறது.
**பலம் காட்டும் பிராந்திய கட்சிகள்**
தமிழகத்தைப் போல மற்ற பல மாநிலங்களிலும் பிராந்திய கட்சிகள் பலமான வெற்றியைக் காணும் என்பதும் இந்த ஆய்வின் முடிவாக உள்ளது. குறிப்பாக மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 30 தொகுதிகளிலும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 22 தொகுதிகளிலும், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி 18 தொகுதிகளிலும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 16 தொகுதிகளிலும், சந்திரசேகர ராவின் ராஷ்ட்ரிய சமிதி கட்சி 14 தொகுதிகளிலும் வெல்வார்கள் என்று கணித்துள்ளது.
மார்ச் 1 முதல் 7 வரையில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த கருத்துக்கணிப்பானது நாடு முழுவதும் நடத்தப்படவில்லை. மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் 193 தொகுதிகளில் மட்டுமே நடத்தப்பட்டுள்ளது. 20,455 ஆண்களிடமும், 18,145 பெண்களிடம் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.�,