நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி 34 தொகுதிகளைக் கைப்பற்றும் என்று சி வோட்டர் நிறுவனத்துடன் ரிபப்ளிக் டிவி இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் தேதி [நேற்று](https://minnambalam.com/k/2019/03/10/60) அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டுக்கு ஏப்ரல் 18ஆம் தேதி நடக்கும் 39 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவுடன், 18 சட்ட மன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலும் நடக்கிறது. அதிமுக, பாமக, பாஜக, தேமுதிக ஆகிய கட்சிகள் ஓரணியிலும், திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகள் ஓரணியிலும் நிற்கின்றன. அமமுக தனித்துப் போட்டியிடுவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் எந்தக் கூட்டணி வெற்றி மகுடத்தைச் சூடும் என்று ரிபப்ளிக் டிவி கருத்துக் கணிப்புகளை நேற்று வெளியிட்டுள்ளது.
இதன்படி தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் திமுக தலைமையிலான கூட்டணி 34 இடங்களை வெல்லும் என்றும், அதிமுக தலைமையிலான கூட்டணி 5 இடங்களை மட்டுமே வெல்லும் என்றும் இந்தக் கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. மற்ற கட்சிகள் ஒரு இடத்தைக்கூட வெல்லாது என்று கூறப்பட்டுள்ளது. மேலும், ‘திமுக தலைமையிலான கூட்டணி 44.8 விழுக்காடு வாக்குகளையும், அதிமுக தலைமையிலான கூட்டணி 32.3 விழுக்காடு வாக்குகளையும், மற்ற கட்சிகள் 22.9 விழுக்காடு வாக்குகளையும் கைப்பற்றும்’ என்றும் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பாஜக கூட்டணிக்கு எதிரான நிலை இருப்பதாக இந்தக் கருத்துக் கணிப்பின் மூலம் பாஜக ஆதரவு தொலைக்காட்சியாகக் கருதப்படும் ரிபப்ளிக் டிவி வெளிக்காட்டியுள்ளது. இதற்கு முன்பு டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில், திமுக கூட்டணி 39 தொகுதிகளை வெல்லும் என ரிபப்ளிக் கருத்துக்கணிப்பில் கூறப்பட்ட நிலையில் தேர்தல் நெருங்கியுள்ள சமயத்தில் திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு 5 தொகுதிகள் குறைந்து 34ஆக உள்ளதாகத் தற்போது கூறியுள்ளது.
தேசிய அளவில் தனித்து ஆட்சியமைக்க எந்தக் கட்சியும் பெரும்பான்மை பலம் பெறாது என்பதும், பெரும்பான்மை இடங்களுக்குச் சற்றுக் குறைவான இடங்களை பாஜக கூட்டணி பெறும் என்பதும் இந்தக் கருத்துக் கணிப்பின் முடிவாக உள்ளது. இதன்படி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 264 தொகுதிகளையும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 141 தொகுதிகளையும், மற்ற கட்சிகள் 138 தொகுதிகளையும் கைப்பற்றும் என இந்தக் கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.�,