திமுகவுக்காக உழைப்பவர்களின் குடும்பத்தினரை வணங்குகிறேன்: ஸ்டாலின்

Published On:

| By Balaji

அண்மையில் காலமான, திமுகவின் முன்னோடிகளான மு.ராமநாதன், க.ரா.சுப்பையன் ஆகியோரின் படத்திறப்பு நிகழ்ச்சி இன்று (ஜூன் 12) கோவையில் நடைபெற்றது. அவர்களின் உருவப் படங்களைத் திறந்து வைத்து திமுக தலைவர் ஸ்டாலின் புகழஞ்சலி உரை நிகழ்த்தினார்.

இந்த நிகழ்ச்சியில் திமுக துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், கொள்கைப் பரப்புச் செயலாளரும் நீலகிரி மக்களவை உறுப்பினருமான ஆ.ராசா, மு. கண்ணப்பன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

முழுக்க முழுக்க இருவரது நினைவலைகளிலும் அரங்கத்தை மூழ்க வைத்தார் மு.க.ஸ்டாலின். குறிப்பாக கோவை ராமநாதனுக்கும் தனக்குமான நினவுகளை ஸ்டாலின் பகிர்ந்துகொண்டபோது அரங்கமே வியந்தது.

“1948 தென் கோவை திராவிடர் கழகத்தில் உறுப்பினராக இருந்த கோவை ராமநாதன் 1949 திமுக உருவானதில் இருந்து உறுப்பினராக இருந்து வருகிறார். சட்ட திட்டக் குழு, தணிக்கைக் குழு நிர்வாகக் குழு, பொதுகுழு, தலைமைச் செயற்குழுக்களில் அங்கம் வகித்த ராமநாதன் மாவட்டச் செயலாளர், திமுக அறக்கட்டளையில் பதவி, சட்ட மேலவை உறுப்பினர், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினராக இருமுறை, கோவை நாடாளுமன்ற உறுப்பினர் என பல பதவிகளை வகித்துள்ளார்.

திமுக இளைஞரணிக்கு ஓர் அலுவலகம் வேண்டுமென்று ஆசைப்பட்டு தலைவரிடம் போய் நான் கேட்டேன். அப்போது கழக அலுவலகமாக இருந்த அன்பகம் பயன்படுத்தப்படாமல் இருந்ததால் அன்பகத்தை இளைஞரணிக்குத் தருமாறு கேட்டேன். அப்போது கலைஞர், பேராசிரியர், ராமநாதன் மூவரும் இருந்தார்கள். நான் கேட்டதற்கு தலைவர் கலைஞர், ‘அன்பகத்தை இளைஞரணிக்குக் கொடுத்துவிடலாம். ஆனால், தொழிற்சங்கம், மகளிரணி, வழக்கறிஞரணினு பல அணிகள் அதை கேட்கிறார்கள். நான் உனக்குக் கொடுத்துவிட்டால் மகன் என்ற பாசத்தில் கொடுத்துவிட்டார்னு சொல்லிடுவாங்க. அதனால ஒரு நிபந்தனை. பத்து லட்சம் ரூபாய் தேர்தல் நிதியை எந்த அணி வசூலித்துக் கொடுக்குதோ அந்த அணிக்கு அன்பகம் தரப்படும்னு சொல்லிட்டாரு.

அப்போது பக்கத்தில் இருந்த ராமநாதன், ‘கவலைப்படாத, சொடக்கு போடுறதுக்குள்ள பத்து லட்சம் வசூலிச்சிடலாம்’ என்று எனக்கு நம்பிக்கை அளித்தார். அப்போது ராமநாதன் கோவை மாநகர் செயலாளர். நிதி திரட்டுவதற்காக மாவட்ட சுற்றுப் பயணம் தொடங்கினேன். முதலில் தொடங்கியது கோவையில்தான். நான்கு நாட்கள் கொளுத்தும் வெயிலிலும், கொட்டும் மழையிலும் என்னை ஒவ்வொரு உறுப்பினர் வீட்டுக்காக அழைத்துச் சென்று நிதி வசூலித்தார். 25 ஆயிரம் தருகிறேன் என்று சொன்னார். ஆனால் நான்கு நாட்களில் 50 ஆயிரம் வசூலித்துக் கொடுத்தார் ராமநாதன். அதன் பின் கலைஞர் நிர்ணயித்த பத்து லட்சம் தாண்டி 11 லட்சம் வசூலித்துக் கொடுத்து அன்பகத்தை இளைஞரணிக்குப் பெற்றோம்” என்று குறிப்பிட்டார் ஸ்டாலின். “மும்மொழிக் கொள்கையை தமிழகம் எதிர்த்து நின்று வெற்றிபெற்ற நேரத்தில் இந்த முன்னோடிகளின் படத்தைத் திறந்து வைப்பது பொருத்தமாக இருக்கிறது” என்றும் புகழ்ந்தார்.

மேலும், “ராமநாதன், சுப்பையன் ஆகிய கழக முன்னோடிகள் கழகத்துக்காக கடைசி மூச்சுள்ளவரை கழகத்துக்காக கர்ஜித்த சிங்கங்கள். அவர்கள் இவ்வாறு முழுமையாக தங்களை கழகத்துக்கு அர்ப்பணித்துக் கொண்டதற்கு முக்கிய காரணம் அவர்களின் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு. இந்த இரு தியாகிகளின் குடும்பத்தினரை நான் வணங்குகிறேன்” என்று ஸ்டாலின் குறிப்பிட்டபோது அரங்கமே நெகிழ்ந்தது.

**

மேலும் படிக்க

**

**[பாஜக அழைப்பு: அலைபாயும் ஜி.கே.வாசன்](https://minnambalam.com/k/2019/06/12/20)**

**[சட்டமன்றக் கூட்டம்: எடப்பாடியின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/06/12/25)**

**[டிஜிட்டல் திண்ணை: ஆலோசனைக் கூட்டம்! எடப்பாடி-பன்னீர் க்ளைமேக்ஸ் ஒப்பந்தம்!](https://minnambalam.com/k/2019/06/11/65)**

**[உள்ளாட்சித் தேர்தல் நடக்காது: அமமுக எச்சரிக்கை](https://minnambalam.com/k/2019/06/11/55)**

**[வாரிசுகள் தோல்வியடைந்த வரலாறு](https://minnambalam.com/k/2019/06/12/22)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share