தினேஷ் கார்த்திக்: குவியும் திரையுலக வாழ்த்துகள்!

Published On:

| By Balaji

நிதாஹாஸ் டிராபி முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி தேடித் தந்த தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கு தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இலங்கையில் நடைபெற்று வந்த நிதாஹாஸ் டிராபி முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப் போட்டி, இந்தியா, வங்கதேச அணிகளுக்கு இடையே நேற்று (மார்ச் 18) நடைபெற்றது. போட்டி நடைபெற்ற கொழும்பு மைதானம் சேஸிங் செய்ய ஏதுவானது என்பதால் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சினை தேர்வு செய்தது. வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்களைச் சேர்த்திருந்தது. 167 ரன்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி விக்கெட்டுகளை பறிகொடுத்து வந்தது.

ஆட்டத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் கடைசி ஓவரை பார்த்த தமிழர்கள் யாவரும் எளிதாகக் கடந்து சென்றிருக்க முடியாது. ஏனென்றால் களத்தில் இருந்தவர்கள் தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் என்கிற இரண்டு தமிழர்கள். 6 பந்துகளில் 12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இருந்தனர். நான்காவது பந்தில் விஜய்சங்கர் பவுண்டரி அடித்து, அடுத்த பந்திலே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்ததால் இந்திய ரசிகர்களிடையே பதற்றம் பற்றிக்கொண்டது. கடைசி பந்தில் 5 ரன்கள் தேவை என்ற நிலைக்கு இந்திய அணி தள்ளப்பட்டது. சிக்ஸர் அடித்தால் வெற்றி பவுண்டரி அடித்தால் டிரா என்கிற சூழலில் சிக்ஸர் அடித்து வெற்றித் தேடி தந்தார் தினேஷ் கார்த்திக்.

8 பந்துகளில் 29 ரன்களைக் குவித்த தினேஷ் கார்த்திக் ஆட்டநாயகன் விருதினை பெற்றார். இந்திய ரசிகர்கள் மற்றும் பல்வேறு பிரபலங்கள் அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமா பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

**விஜய் சேதுபதி**

என்ன ஒரு மேட்ச். தினேஷ் கார்த்திக் என்ன மனுஷன்யா நீ. இந்தியாவுக்கு ஆதரவாக இலங்கை செயல்பட்டது ஆச்சரியம்.

**ஷங்கர்**

என்ன ஒரு மிகப்பெரிய மற்றும் மறக்கமுடியாத கிளைமாக்ஸ் பேட்டிங். ஹீரோவுக்கு (தினேஷ் கார்த்திக்) தலைவணங்குகிறேன்.

**கஸ்தூரி**

சென்னை, கொல்கத்தா நைட்ரைடர்ஸ், இந்தியா, இலங்கை, தமிழ் மக்கள் அனைவரும் உன்னை நேசிக்கிறார்கள். ஆளப்போறான் தமிழன்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel