ஆர்.கே.நகர் தேர்தலில் டி.டி.வி.தினகரனுக்கு கடைசி இடம்தான் கிடைக்கும் என, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுக செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், மார்ச் 29ஆம் தேதி காலை திருச்சி செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னை மாநகர ஆணையர் மீது கடந்த தேர்தலின்போதே புகார் செய்துள்ளோம். தற்போது ஆர்.கே.நகர் தேர்தலையொட்டி அவர் மீதும், தேர்தல் அலுவலர் மீதும் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்திருந்தோம். திமுக-வின் புகார் நியாயமாக இருந்ததால் தேர்தல் ஆணையம் அவர்மீது நடவடிக்கை எடுத்துள்ளது. ஆளும்கட்சி எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள் துணையோடு காவல்துறை சில தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. தேர்தல் ஆணையம், தேர்தல் நியாயமாக நடப்பதாகச் சொல்லியிருக்கிறது. நாங்களும் நியாயமாக நடக்கும் என்று நம்புகிறோம்.
டி.டி.வி.தினகரனுக்கு வாக்குப்பதிவு எந்திரத்தில் 2வது இடம் கிடைத்திருப்பதாக செய்திகள் வந்துள்ளன. 2வது இடமோ? 3வது இடமோ? எதுவாக இருந்தாலும் டி.டி.வி.தினகரனுக்கு கடைசி இடம்தான் கிடைக்கும். தமிழக விவசாயிகள், தமிழகத்தில் போராடிப் பார்த்து ஒன்றும் நடக்காதநிலையில் தற்போது டெல்லியில் இரண்டு வாரங்களுக்கு மேலாக போராடி வருகிறார்கள். ஆனால் இதுபற்றி மத்திய அரசு கவலைப்படவில்லை. திமுக எம்.பி.,க்கள் விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூறிவருகிறார்கள்.
மேலும் திமுக எம்.பி.,க்கள் திருச்சி சிவா, ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் விவசாயிகளுடன் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியை சந்திக்க நடவடிக்கை மேற்கொண்டார்கள். தமிழக முதலமைச்சர் போராடும் விவசாயிகளை சந்திக்கவில்லை. இது வேதனையளிக்கிறது. தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளுக்கு நிதியுதவிகூட வழங்காத நிலைமையில் இந்த பினாமி அரசு செயல்படுகிறது. ஆனால் இடைத்தேர்தலில் தில்லுமுல்லு செய்து வெற்றி பெறலாம் என்று பார்க்கிறார்களே தவிர, விவசாயிகளைப் பற்றி கவலைப்படவில்லை. ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதாக தகவல் வந்துள்ளது. நடந்துமுடிந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றி கேள்வி எழுப்பியபோது தமிழக முதலமைச்சர், விவசாயத் துறை அமைச்சர் ஆகியோர் பொதுமக்களின் அனுமதியின்றி அந்த திட்டம் செயல்படுத்தப்பட மாட்டாது என்று கூறினார்கள். மேலும் அந்த திட்டம் குறித்து, அதை சிறப்புத் தீர்மானமாக இயற்றி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும் என்று கூறினேன். ஆனால் அதுபற்றி பதில் கூறவில்லை. ஹைட்ரோ கார்பன் திட் டத்தில் மத்திய அரசு இரட்டை வேடம் போடுகிறது. அதற்கு மாநில அரசு துணை போகிறது என்று அவர் கூறினார்.�,