அதிமுகவில் இருப்பவர்கள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு வந்துவிடுவார்கள் என்று டிடிவி தினகரன் கூறியிருப்பது 2018ஆம் ஆண்டின் மிகப் பெரிய ஜோக் என்று கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி திருச்செந்தூரில் பேட்டியளித்த தினகரன் “அதிமுகவில் இருப்பவர்கள் தங்களுடன் வந்துவிடுவார்கள். அப்போது ஓபிஎஸ், ஈபிஎஸ் தனித்துவிடப்படுவார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அனைத்துச் செயல்பாடுகளும் தோல்வியில் முடிவடையும்” என்றார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று (செப்டம்பர் 2) நாகையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.எஸ்.மணியன், “சில்லறைக் கட்சிகள் என்று சொல்லிக்கொண்டிருப்பவர்கள், அதிமுகவில் இருப்பவர்கள் எல்லாம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு வருவார்கள் என்று தினகரன் சொல்வது 2018ஆம் ஆண்டின் மிகப் பெரிய ஜோக்” என்றவர், தினகரன் கட்சியை அரசியல் கட்சியாக ஏற்றுக்கொள்வதில்லை என்றும் தெரிவித்தார்.
பாஜக சொல்வதைத்தான் அதிமுக அரசு பின்பற்றுவதாகச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தவர், “வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சியமைத்தபோது திமுக கூட்டணியில் இருந்தது. அப்போது காவி நிறம் திமுகவுக்குத் தெரியவில்லையா? இன்றைக்குத்தான் தெரிகிறதா?” என்று ஓ.எஸ்.மணியன் கேள்வி எழுப்பினார்.�,