அதிமுக சார்பில் சென்னை நந்தம்பாக்கத்தில் நாளை இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது. இதற்காக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு அதிமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நேற்று (ஜூன் 1) இரவு திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்திற்குச் சென்ற சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்து இப்தார் நோன்பில் கலந்துகொள்ளும்படி அழைப்பு விடுத்தார்.
இதுதொடர்பாக பாமக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “பாமக நிறுவனர் ராமதாஸை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அவர்கள் இன்று இரவு சந்தித்தார். அதிமுக சார்பில் சென்னையில் ஜூன் 3-ஆம் தேதி மாலை சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெறவுள்ள இப்தார் நோன்பு திறப்பு விழாவில் கலந்து கொள்ளும்படி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சார்பில் அழைப்பு விடுத்தார். அதற்கான அழைப்பிதழையும் ராமதாஸிடம் வழங்கினார்.
முன்னதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ராமதாஸை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இப்தார் நோன்பு திறப்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். ராமதாஸும் அழைப்பை ஏற்றுக் கொண்டு நோன்பு திறப்பு நிகழ்வில் பங்கேற்க ஒப்புக்கொண்டார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாமகவால் இடைத் தேர்தலில் கணிசமாக வாக்குகள் பெற்றாலும், மக்களவைத் தேர்தலில் பெரிய அளவில் பலன் கிடைக்கவில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருத்தத்தில் இருந்துவருகிறார். குறிப்பாக அதிமுக, பாமக பலமாக இருக்கும் சேலம் மாவட்டத்தில் ஏற்பட்ட தோல்வியும் இதற்கு ஒரு காரணமாக சொல்லப்பட்டது. மேலும் எட்டுவழிச் சலை தொடர்பான விவகாரங்களில் அதிமுகவுக்கு நேர் எதிரான நிலைப்பாட்டிலேயே பாமக உள்ளது.
எட்டுவழிச் சாலை திட்டம் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் தெரிவிக்க, திட்டம் கைவிடப்படும் வரை தங்களது சட்டப் போராட்டம் தொடரும் என்று அன்புமணி அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இதனால் அதிமுக-பாமக கூட்டணியில் நெருடலான ஒரு சூழ்நிலை நிலவி வருகிறது. ஆனாலும் உள்ளாட்சித் தேர்தல் விரைவில் வரவுள்ளதால் பாமக கூட்டணியில் இருக்க வேண்டும் என்று அதிமுக விரும்புகிறது. இந்த நிலையில் தைலாபுரம் தோட்டத்திற்குச் சென்று ராமதாஸுக்கு அழைப்பு விடுத்துள்ளார் சி.வி.சண்முகம்.
சுமார் 20 நிமிடங்கள் மட்டுமே நடந்த இந்த சந்திப்பில் ராமதாஸ் இறுக்கமாகவே இருந்துள்ளார். ராமதாஸிடம் சி.வி.சண்முகம், அய்யா இப்தார் நோன்புக்கு வந்திடுங்க என்று சொல்ல, அதற்கு ‘அதான் மொத்தமா திட்டம் போட்டு பழிவாங்கிட்டீங்களே’ என்று கூறியிருக்கிறார். உடனே சி.வி.சண்முகம், ‘நாங்க என்னய்யா பழிவாங்கினோம். நீங்க மட்டுமா தோத்துருக்கீங்க. எல்லாரும்தானே தோத்துருக்கோம்’ என்றிருக்கிறார். இரவு 7.15 மணிக்கு தைலாபுரத்திற்குச் சென்ற சி.வி.சண்முகம், 7.35 மணிக்கெல்லாம் அங்கிருந்து புறப்பட்டுவிட்டார். இந்த சூழலில் இப்தார் நோன்பில் ராமதாஸ் கலந்துகொள்வது இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
.
**
மேலும் படிக்க
**
.
.
**
[ஆட்சிக் கவிழ்ப்பு: அட்வான்ஸ் கொடுத்த திமுக](https://minnambalam.com/k/2019/06/02/21)
**
.
**
[ஒரு முடிவெடுக்கப் போறேன்: கோபத்தில் வைத்திலிங்கம்](https://minnambalam.com/k/2019/06/02/14)
**
.
**
[சுக்லாவை டிரான்ஸ்ஃபர் செய்த ஸ்டாலின்](https://minnambalam.com/k/2019/06/02/17)
**
.
**
[டிஜிட்டல் திண்ணை: அதிமுகவுடன் இணைப்பா? ஆய்வுக் கூட்டத்தில் தினகரன்](https://minnambalam.com/k/2019/06/01/68)
**
.
**
[கர்நாடக உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி!](https://minnambalam.com/k/2019/06/02/8)
**
.
.
�,”