[தாவர எண்ணெய் இறக்குமதியில் சரிவு!

Published On:

| By Balaji

சென்ற ஜனவரி மாதத்தில் தாவர எண்ணெய் இறக்குமதியில் 3 சதவிகிதம் சரிவு ஏற்பட்டுள்ளது.

ஜனவரி மாதத்துக்கான தாவர எண்ணெய் இறக்குமதி குறித்த விவரங்களை இந்திய சால்வெண்ட் எக்ஸ்ட்ராக்டர் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, 8,15,236 டன் அளவிலான பாமாயிலை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. இது 2018ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் இறக்குமதி செய்யப்பட்ட 8,34,444 டன் பாமாயிலை விட 2.31 சதவிகிதம் குறைவாகும். ஒட்டுமொத்த தாவர எண்ணெய் இறக்குமதி 3 சதவிகிதம் சரிந்து 12.75 லட்சம் டன்னாக இருக்கிறது. 2018 ஜனவரியில் இதன் அளவு 12.91 லட்சம் டன்னாக இருந்தது.

இந்தியாவின் ஒட்டுமொத்த தாவர எண்ணெய் இறக்குமதி அளவில் பாமாயிலின் பங்கு மட்டும் 60 சதவிகிதமாக இருக்கிறது. மலேசியாவிலிருந்து தாவர எண்ணெய் இறக்குமதிக்கான வரி குறைக்கப்பட்டதால் அந்நாட்டிடமிருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதி உயர்ந்துள்ளது. எனவே சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதி 1,30,459 டன்னிலிருந்து 1,67,429 டன்னாக உயர்ந்துள்ளது. இது 28 சதவிகிதம் வளர்ச்சியாகும்.

இதர எண்ணெய் வகைகளைப் பொறுத்தவரையில், சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி 1,70,831 டன்னிலிருந்து 2,00,027 டன்னாக உயர்ந்துள்ளது. சோயாபீன் எண்ணெய் இறக்குமதி 2,24,870 டன்னிலிருந்து 1,85,906 டன்னாகக் குறைந்துள்ளது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share