ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோரைக் கண்டுபிடிக்க அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் திடீர் சோதனைகள் நடத்த வேண்டும் என லஞ்ச ஒழிப்புத் துறையிடம் அறிவுறுத்தியுள்ளது சென்னை உயர் நீதிமன்றம் .
தர்மபுரி மாவட்டத்தில் நிலம் கையகப்படுத்தல் பிரிவு சிறப்பு தாசில்தார் தர்மராஜ் ஊழல் குற்றச்சாட்டில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, தர்மராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு இன்று (மார்ச் 11) விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 2016ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட லஞ்ச வழக்கின் அடிப்படையில் மனுதாரரின் பதவி உயர்வைத் தடுக்கும் நோக்கில் 2018 அக்டோபரில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வாதிட்டார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில், 2016ஆம் ஆண்டில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது குறித்து தற்போதுதான் கவனத்துக்குத் தெரிய வந்தது என்றும், உடனடியாக அதன் மீது நடவடிக்கை எடுத்ததாகவும் ஆட்சியர் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பணியிடை நீக்கம் என்பது குற்றச்சாட்டுகள் குறித்து துறை ரீதியான விசாரணைக்கு ஏதுவாக அலுவல்களில் இருந்து நீக்கி வைப்பதுதானே தவிர தண்டனையல்ல என்று தெரிவித்தார். இந்த விசாரணையில் நீதிமன்றம் தலையிடமுடியாது எனக் கூறி, இந்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
“நாடு முழுவதும் புற்றுநோய் போல பரவியுள்ள ஊழலுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனச் சுட்டிக் காட்டிய நீதிபதி, “லஞ்சம் கொடுக்காமல் தாலுகா அலுவலகங்களில் எந்தச் சான்றிதழும் பெற முடியாத நிலை உள்ளது. அதனால், தாலுகா அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அடிக்கடி திடீர் சோதனைகளை நடத்த வேண்டும்” என அறிவுறுத்தினார்.
“அனைத்து அலுவலகங்களிலும் நேர்மையான அதிகாரிகள் இருக்கின்றனர். அவர்கள் தங்கள் அலுவலகங்களில் நடக்கும் ஊழல் நடவடிக்கைகளை வேடிக்கை பார்ப்பதை விட்டுவிட்டு, உயர் அதிகாரிகளுக்குப் புகார் அளிக்க வேண்டும். அரசு அலுவலகங்களில் சான்றிதழ்கள் வழங்குவதை முறைப்படுத்தி, எத்தனை நாட்களில் சான்றிதழ் கிடைக்கும் எனக் குறிப்பிட்டு குடிமக்கள் சாசனத்தை வெளியிடவேண்டும்” என்று தமிழக அரசுக்கு யோசனை தெரிவித்தார் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம்.�,