தாய்ப்பால் கொடுப்பது குறித்து பல்வேறு விதங்களில் விழிப்புணர்வளிப்பது மட்டுமல்லாமல், தாய்ப்பால் வாரம் என்றும் கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில், பொது இடத்தில் தாய்ப்பால் கொடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கேரள மாநிலத்தில் மலையாள மாடல் ஜிலு ஜோசப், ஒரு குழந்தைக்குப் பாலூட்டுவது போல போஸ் கொடுத்திருந்தார்.
கேரள மாநிலத்தில் வெளியிடப்படும், மலையாள இதழான கிரிகலட்சுமி வார இதழில் இந்த அட்டைப்படம் வெளியாகியிருந்தது. அந்த அட்டைப்படத்தில், உற்று பார்க்காதீர்கள், நாங்கள் தாய்ப்பால் கொடுக்கவேண்டும்” என்ற வாசகம் இடம்பிடித்திருந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு தாய் தனது குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பது போன்ற படம், இந்தியப் பத்திரிகையின் அட்டையில் இடம்பெற்றிருப்பது முதல் முறையாகும்.
இதுகுறித்து கிரிகலட்சுமியின் ஆசிரியர் மோன்சி ஜோசஃப் கூறுகையில், “நாங்கள் பொது இடத்தில் தாய்ப்பால் கொடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்தப் படத்தை வெளியிட்டோம். தாய்ப்பால் கொடுப்பது போன்ற படம் ஏற்கனவே சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டிருக்கிறது.
ஒரு மாதத்துக்கு முன்பு, பொது இடங்களில் தாய்ப்பால் கொடுப்பது தொடர்பாக விவாதத்தை எழுப்புவதற்காக, தன் மனைவி தாய்ப்பால் கொடுப்பது போன்ற ஒரு படத்தை முகநூலில் ஒருவர் பகிர்ந்திருந்தார். இதையடுத்து, அந்தப் பெண் பலரின் கிண்டலுக்கு ஆளானார்.
இதற்காகத்தான், நாங்கள் கிரிகலட்சுமியின் சமீபத்திய இதழைத் தாய்ப்பால் ஊட்டும் பெண்களுக்காக அர்ப்பணித்தோம்.சேலை அணியும் பெண்கள் தாய்ப்பால் கொடுக்கும்போது, புடவையைக் கொண்டு மறைத்துக் கொள்ள முடிகிறது. ஆனால் வேறு உடை அணியும் பெண்களுக்கு இந்த வாய்ப்பு இல்லாமல் போகிறது எனக் கூறினார்.
இதுதொடர்பாக, சமூக ஊடகங்களில் மாடலிங்குக்கு எதிராகவும், ஆதரவாகவும் கருத்துக்கள் பகிரப்பட்டுவருகின்றன.
வழக்கறிஞர் வினோத் மேத்யூ என்பவர் கிரிகலட்சுமி பத்திரிகைக்கு எதிராக கொல்லம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் ஜிலு ஜோசப்புக்கு எதிராகவும் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு மீது மார்ச் 16ஆம் தேதி விசாரணை நடைபெறவுள்ளது.
இதுகுறித்து 27 வயதான மாடல் கிலு ஜோசப் கூறுகையில், ”எனக்கு சரி என்று படுகிற காரியங்களை மட்டும்தான் செய்வேன். நான் தோல்வியைச் சந்தித்திருக்கலாம். ஆனால் அதற்காக நான் வருத்தப்பட்டதில்லை. பெண்கள் எந்தவித அச்சமுமின்றி சுதந்திரமாகக் கொடுக்க வேண்டும், அதுதான் நான் அளித்த செய்தியாகும். அந்தக் கட்டுரையில் என்ன சொல்லிருக்கிறேன் என்பதைக் கூட வாசிக்காமல் சிலர் என்னை விமர்சிக்க ஆரம்பித்துவிட்டனர்.
‘Breastfeed freely’ என்ற பிரச்சாரத்துக்கு அட்டை பக்கத்தில் இடம்பெறும் வகையில் போஸ் கொடுக்க யாராவது வருவார்களா என தயாரிப்பாளர்கள் தேடி கொண்டிருந்தனர். நிஜ வாழ்க்கையின் தாய்மார்கள் இதற்கு எப்படியும் முன்வர மாட்டார்கள் என்பது தெரியும். ஆனால், அந்த வாய்ப்பை நான் பிடித்துக் கொண்டேன். ஏனெனில்,தாய்ப்பால் கொடுப்பது ஒரு பாவம் என்று எனக்கு யாரும் சொல்லி கொடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்தைக் கவர்ச்சியாக இல்லாமல் ஒரு குழந்தையின் பசியைப் போக்கும் மனப்பான்மையுடன் பார்த்தால் இதில் பிரச்சினை இல்லை.
�,”