நெல்லையில் நடைபெறும் மகா புஷ்கர திருவிழாவுக்கு முன்பாக, தாமிரபரணி ஆற்றில் உள்ள படித்துறைகளை புதுப்பிக்க கோரிய வழக்கில் மத்திய, மாநிலஅரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரைச் சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்தார். அதில், “தாமிரபரணி மகா புஷ்கர திருவிழா அக்டோபர் 12 முதல் 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. புஷ்கர விழாவுக்கான ஆரம்ப கட்டப்பணிகள் தொடங்கியுள்ளது. தாமிரபரணியில் 144 தீர்த்த கட்டடங்கள் உள்ளன. இந்த படித்துறைகளும், மண்டபங்களும் இடிந்து புதர் மண்டியும் இருக்கின்றன. சாக்கடை நீர் நேரடியாக ஆற்றில் விடப்படுகிறது.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டங்களில் 15 இடங்களில் மகா புஷ்கர திருவிழா கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், தாமிரபரணியை சுத்தம் செய்யவும், மண்டபம்,படித்துறைகள் பராமரிக்கவும், சாக்கடை நீர் கலப்பதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால், தாமிரபரணியில் உள்ள படித் துறைகளை புதுப்பிக்கவும், சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாமல் புஷ்கர விழாவை கொண்டாடவும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த மனு இன்று(ஆகஸ்ட் 23) நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதுகுறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கு மீதான விசாரணையை செப்டம்பர் 10 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.�,